234 தொகுதிகளில் தனித்து போட்டியா..? பிரேமலதா பேச்சால் அலறி ஓடும் தொண்டர்கள்..!!!

11 December 2020, 11:20 am
Dmdk cover - updatenews360
Quick Share

சென்னை: தேமுதிக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மனைவியும், பொருளாளருமான பிரேமலதா அறிவித்ததைக் கேட்டு, கட்சியில் கொஞ்சநஞ்சம் மிச்சம் மீதியிருக்கும் தொண்டர்களும் ஆடிப்போயிருக்கிறார்கள். எங்கே தன்னை தேர்தலில் நிற்கச் சொல்லி குடும்பத்துடன் நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விடுவாரோ என்ற உச்சகட்ட பயத்தில், இனிமேல் கட்சி அலுவலகம் இருக்கும் கோயம்பேடு பக்கமே தலைகாட்டக்கூடாது என்று பல நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேமுதிக மிகவும் பலவீனமாக இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் வலிமைக்கேற்ப இடங்களைப் பெற்றுக்கொண்டு, 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதே புத்திசாலித்தனம் என்று தொண்டர்களும் புலம்புகிறார்கள். இப்படியே உதார்விட்டுக்கொண்டிருப்பதை உண்மை என்று நம்பி அதிமுக தலைவர்களும், அப்படியே விட்டுவிட்டால் கட்சி என்ன கதியாகும் என்ற நடுக்கத்தில் தேமுதிகவினர் இருக்கிறார்கள்.

தனித்துப்போட்டியிட்டால் தேர்தல் நிதியும் இருக்காது என்பதால், தேமுதிகவில் இப்போது இருக்கும் பலரும் எந்தக் கட்சிக்குப் போகலாம் என்று தீவிர சிந்தனையில் இருக்கிறார்கள். புதிதாகக் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்தும் 234 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று 2017-ஆம் ஆண்டு பேசியதை மீண்டும் நினைவுப்படுத்தியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டும் நிர்வாகிகள், அவரை நம்பி அதிமுகவை மிரட்டிப்பார்க்க வேண்டாம் என்றும், இருக்கும் கூட்டணியை இழக்க வேண்டாம் என்றும் தொண்டர்கள் கருதுகிறார்கள்.

மேலும், 234 தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராக உள்ளோம் என்று கூறிவிட்டு, ஜனவரி மாதம் விஜயகாந்த் தலைமையில் செயற்குழு கூட்டம் கூட்டப்படும் என்றும், அதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியிருப்பது மிகவும் குழப்பமாக இருப்பதாகவும் தேமுதிகவினர் கருதுகிறார்கள்.

Premalatha 01 updatenews360


2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்றும், கேப்டன் விஜயகாந்தை முதலமைச்சராக்குவோம் என்றும், பிரேமலதாவும் மகன் விஜய பிரபாகரனும் அடிக்கடி பேசிவருகிறார்கள். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக எந்த அணியில் சேரும் என்பதே மிகவும் முக்கியமான விவாதமாக இருந்த நிலை, தற்போது இல்லை என்பதை பிரேமலதா புரிந்துகொள்ளவேண்டும் என்று நிர்வாகிகள் புலம்பிவருகிறார்கள்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, வடசென்னையிலும், திருச்சியிலும், டெபாசிட் இழந்தது. தற்போது, அதிமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெறுவதற்காக தனித்துப் போட்டியிடப் போவதாகவும், விஜயகாந்தை முதலமைச்சராக்கப் போவதாகவும், பிரேமலதா கூறிவருகிறார். பொதுமக்களுக்கு இது நல்ல பொழுதுபோக்காக இருந்தாலும், கட்சியின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இந்தப் பேச்சுகள் பீதியைக் கிளப்பிவருகின்றன.

Vijayakanth - updatenews360

நாடாளுமன்றத் தேர்தலில் 2.19 சதவீத வாக்குகளே வாங்கிய நிலையில், தேமுதிகவின் தற்போதைய செல்வாக்கைப் புரிந்துகொள்ளாமல், கட்சியின் தலைவர்கள் பேசக்கூடாது என்றும், பழைய நினைப்பு பிழைப்பைக் கெடுத்துவிடும் என்றும், ஏற்கனவே நொந்துபோயிருக்கும் கட்சி நிர்வாகிகள் தங்களுக்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அணியில் தேமுதிக சேருவதற்கு நீண்டகாலம் பேரம் பேசினார். ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. அணியில் சேர்வதற்கு நீண்ட காலமாக அவர் பேரம் நடத்தியதால், அந்த அணியில் தொகுதிப் பங்கீடு மிகவும் தாமதமானது. கடைசி நேரம்வரை அவர் ஜவ்வாக இழுத்ததால், கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதிகள் என்பது தெரியாத நிலையில், எல்லாக்கட்சிகளும் தவித்தன. தேர்தலுக்கு சில நாட்களே இருந்தபோது, அவர் கூட்டணியில் சேர்ந்ததால் அந்த கூட்டணி தோல்வியைத் தழுவியது.

இருந்தாலும் 2016 தேர்தலில் அவரை தங்கள் அணியில் சேர்க்க திமுகவும், பாஜகவும் மக்கள்நலக் கூட்டணியும் கடுமையாகப் போட்டிபோட்டன. ஒவ்வொரு நாளும் விஜயகாந்த் எந்த அணியில் சேர்வார் என்பதே பேச்சாக இருந்தது. முதலில் பெரும் எழுச்சியுடன் பிரச்சாரத்தைத் தொடங்கிய மக்கள் நலக் கூட்டணி, விஜயகாந்தின் தாமதத்தால் பங்கீட்டை மிகவும் தாமதமாக முடித்தது. விஜயகாந்தின் நீண்டகாலத் தொகுதி பேரத்தால், மக்களும் மிகவும் எரிச்சல் அடைந்தனர். கடைசியில் அவர் அந்த அணியில் சேர்ந்தபின் வேட்பாளர் அறிவிப்பும், பிரச்சாரமும் தாமதமாகத் தொடங்கியது. இந்தக் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. தேமுதிக வாக்குகள் 2.39 சதவீதமாகக் குறைந்தது.

மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் குறிப்பிட்ட கொள்கை நிலைப்பாட்டை அறிவித்து தங்கள் கூட்டணியை முன்னதாகவே வெளிப்படையாக அறிவிக்கின்றன. ஆனால், தேமுதிக ஒவ்வொரு தேர்தலிலும் எந்தக் கொள்கையும் இல்லாமல் கூட்டணியை முன்பே முடிவு செய்யாமல் இப்படியே உதார்விட்டுப் பேரத்தை இழுத்துக்கொண்டு போனால் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்பதை பிரேமலதா புரிந்துகொள்ளவேண்டும் என்று பார்க்கும் அனைவரிடமும் நிர்வாகிகள் கூறிவருகிறார்கள்.

Views: - 1

0

0