பெரும் எதிர்பார்ப்பில் தேமுதிக…. கேட்பது கிடைக்குமா?

28 January 2021, 3:00 pm
DMDK - ADMK - updatenews360
Quick Share

2006 சட்டப்பேரவை தேர்தலில் முதன் முதலில் களம் கண்ட தேமுதிக தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் அக்கட்சிக்கு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி கிடைத்தது. விருத்தாசலம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஜெயித்தார். அந்த தேர்தலில் அவர் சூறாவளி பிரச்சாரம் செய்தும் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.

அப்போது அதிமுக – திமுகவுக்கு மாற்று சக்தியாக கருதப்பட்ட விஜயகாந்த் கட்சிக்கு சுமார் 8.5 சதவீத வாக்குகள் கிடைத்தது. அதற்கு முன்பு தனித்து களம் கண்ட பாமக, மதிமுக ஆகிய
கட்சிகளை விட விஜயகாந்தின் தேமுதிக வாங்கிய ஓட்டு சதவீதம் சற்று கூடுதலாக இருந்ததால், அடுத்த தேர்தலில் அவர் திமுகவிற்கும் – அதிமுகவிற்கும் பெரும் சவாலாக இருப்பார்
என கருதப்பட்டது.

Vijayakanth- updatenews360

ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக 2011 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுகவும் – திமுகவும் பெரும் முயற்சி மேற்கொண்டன. முதலில் அக்கட்சி திமுகவுடன் கூட்டணி சேருவது போல்தான் தெரிந்தது. கடைசி நேரத்தில் ஜெயலலிதா அவரை அதிமுக அணிக்குள் கொண்டு வந்தார். 41 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

அதில் 29 இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தும் தேமுதிகவுக்கு கிடைத்தது. திமுக தேர்தல் வரலாற்றில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாமல் போய் இன்னொரு கட்சியிடம் அதை இழந்தது, அதுதான் முதல் முறை.

vijayakanth - jayalaitha - updatenews360

ஆனால் விஜயகாந்த அப்போது தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டார். அதிமுகவுக்கு மாற்று நாம்தான் என்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கியது. அதனால் ஜெயலலிதாவுடன் குறுகிய காலத்துக்குள்ளாகவே மல்லுக்கட்ட ஆரம்பித்தார். தனித்து போட்டியிட திராணி இருக்கிறதா என்று சட்டசபையில் ஆவேசமாக சவால் விட்டும் பேசினார்.

இதன் காரணமாகவும்தான் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் பலத்தை நிரூபிக்க தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் கூட்டணி எதுவும் அமைக்காமல் தனது கட்சி வேட்பாளர்களையே ஜெயலலிதா நிறுத்தினார். அதில் 37 இடங்களில் அதிமுகவிற்கு வெற்றி கிடைத்தது.

அதன் பிறகு தேமுதிக சூடு கண்ட பூனையாகி போனது.
ஏறக்குறைய அக்கட்சியின் பேரம் பேசும் திறனும் சரிந்துபோனது.

karunanidhi - updatenews360

எனினும், 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தது. கருணாநிதி தனது கூட்டணியில் சேர அழைப்பும் விடுத்தார். அப்போது அவர் திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் அக்கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்பார்கள்.

ஆனால் மக்கள் நல கூட்டணி என்ற ஒன்றை திடீரென உருவாக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, தமாக ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டார். அந்த கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் 34 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார். 95 சதவீத வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். மக்கள் நல கூட்டணி மொத்தம் 6 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றது. இதில் 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவிற்கு கிடைத்த ஓட்டு சதவீதம் 2 தான் .

தேர்தலுக்கு தேர்தல் தேமுதிகவின் பலம் குறைந்து கொண்டே வந்த நிலையில்தான் 2017-ம் ஆண்டு விஜயகாந்த்தின் உடல்நிலை பெரும் பின்னடைவை சந்தித்தது. அவரால் தெளிவாக பேச முடியவில்லை. இதற்காக சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். அதன் பின்பும் அவருடைய குரல் வளம் பழைய நிலைக்கு திரும்பவில்லை. இதனால் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது அவர் பிரச்சாரத்துக்கு வரவில்லை.

அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்தகொண்டபோது மட்டுமே அவர் காட்சியளித்தார். அதே நேரம் அவருக்கு இணையாக அவருடைய மனைவி பிரேமலதா, தேமுதிக துணைப்பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் , விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக நீடித்து வருகிறது.

இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியான அதிமுகவிடம்
பாஜக 38 தொகுதிகளை கேட்டதாக ஒரு பட்டியல் அண்மையில் ஊடகங்களில் வெளியானது. பாமக எத்தனை தொகுதிகள் கேட்கிறது என்ற விவரம் தெரியவில்லை என்றாலும் கூட அக்கட்சி 35 முதல் 40 இடங்களை கேட்பதாக தெரிகிறது.

இது நாள் வரை எத்தனை தொகுதிகள் கேட்டு இருக்கிறோம் என்று வெளிப்படையாக தெரிவிக்காத தேமுதிக தற்போது 41 தொகுதிகள் கேட்டு உள்ளோம் என்று தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பிரேமலதா தெரிவித்தார்.

எதற்காக இத்தனை தொகுதிகள் கேட்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு 2011சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் நாங்கள் போட்டியிட்டோம். அப்போது எங்களுக்கு ஜெயலலிதா இதே எண்ணிகையிலான தொகுதிகளைத் தந்தார்.
அதைத் தான் தற்போது அதிமுகவிடம் நாங்கள் கேட்டு உள்ளோம் என பதிலளித்தார் . இந்த தேர்தலில் முதல் சுற்று, 2வது சுற்று, 3வது சுற்று என்று நாங்கள் பிரச்சாரம் செய்வோம். கேப்டன் விஜயகாந்த் கிளைமாக்ஸின்போது பிரச்சாரம் மேற்கொள்வார் என்று நம்பிக்கையும் தெரிவித்தார்.

பிரேமலதாவின் சகோதரரான எல்.கே.சுதீஷ் குடியாத்தத்தில் நிரூபர்களிடம் பேசும்போது “தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார்” என்று குறிப்பிட்டார்.

இதுபற்றி அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும் போது ‘கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 110ஐ தாண்டுகிறது, இவர்களுக்கு இத்தனை இடங்களை ஒதுக்கி விட்டால் அதிமுக எத்தனை தொகுதிகளில் தான் போட்டியிடுவதாம்? இவர்கள் கேட்பது மிக வேடிக்கையாக உள்ளது தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு 68 வயதாகிறது.

அவர் தற்போது முழு உடல் நலத்துடன் உள்ளாரா என்பது யாருக்கும் தெரியாது. அவர் நன்கு உடல் நலம் தேற வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுதல், விருப்பம். அவரால் வெளியே வர முடியாத காரணத்தால்தான், அவருடைய இரு மகன்களும் தேர்தல் பிரச்சாரத்துக்கு தயார் ஆகி வருகின்றனர். கடந்த தேர்தலில் விஜயகாந்த் தனது கூட்டணியில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தால், தேமுதிக 41 தொகுதிகள் கேட்பது நியாயம். ஆனால் அதிக தொகுதிகளில் டெபாசிட் இழந்த
கட்சி 41 இடங்கள் கேட்பது கொஞ்சமும் சரியல்ல. 10 தொகுதிகள் கொடுப்பதே அதிகம். இந்த தேர்தலில் திமுக பணத்தை தண்ணீர் போல் வாரி இறைக்கும். அதற்கு ஈடாக செலவு செய்யும் வேட்பாளர்கள் தேமுதிகவில் இருப்பார்களா? என்பது சந்தேகம் தான். ஆகையால் பிரேமலதா ஆசைப்படுவது ஆசை அல்ல பேராசையே….என்றனர்.

விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும் என்று இதைத்தான் சொன்னார்களோ?

Views: - 0

0

0