“கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் வேண்டாம்”… மேகதாது அணை விவகாரத்தில் உடனடி நடவடிக்கை தேவை : விஜயகாந்த்

8 July 2021, 7:33 pm
vijayakanth - updatenews360
Quick Share

தமிழகத்திற்கு தண்ணீர் சிக்கலை ஏற்படுத்தும் மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கு இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், மேகதாது அணை கட்டும் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கர்நாடகா முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு காலதாமதம் செய்யாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பாகவே, தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து அணை கட்டாமல் தடுத்திடவேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 111

0

0