விஜயகாந்த் காலில் மற்ற கட்சி தலைவர்களா..? அவசரப்பட்டு வம்பில் சிக்கிக் கொண்ட சுதீஷ்..!
3 September 2020, 6:59 pmதிரைப்படத் துறையில் கொடிக்கட்டிப் பறந்த விஜயகாந்த், அரசியலில் புகுந்த உடனேயே யாருக்கும் கிடைக்காத வரவேற்பை மக்களிடம் இருந்து பெற்றார். தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்ட போது கிடைக்காத வெற்றி, 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது, எதிர்கட்சி அந்தஸ்து வரை அவரை அழைத்து சென்றது. ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து, 2016ல் மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொண்டது. அப்போது, விஜயகாந்தின் கட்சிக்கு பெருத்த அடி விழுந்தது. மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் அளவிற்கு வாக்கு வங்கி சரிந்தது. இதனால், மக்கள் நலக் கூட்டணி மீது அப்செட்டான தே.மு.தி.க., மக்களவை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் ஜோடி போட்டது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தே.மு.தி.க. மீண்டும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கட்சியின் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளன்று, வரும் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடவே தொண்டர்கள் விரும்புவதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்திருந்தார். இதனால், தே.மு.தி.க. மீது கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது.
இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் காலில் மற்ற கட்சிகளின் தலைவர்கள் விழுவது போன்ற கார்ட்டூனை அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த கார்ட்டூனில் மஞ்சள் துண்டுடன் ஒருவரும், கருப்பு சட்டையுடன் ஒருவரும், மற்றவர்கள் அனைவரும் வெள்ளை வேட்டி, சட்டையுடனும் விஜயகாந்த காலில் விழுவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பதிவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், தொண்டர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன்.
இதையடுத்து, அந்தப் பதிவை உடனடியாக நீக்கிய சுதீஷ், அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது :- கடந்த 2016 ம் ஆண்டு தினமலர் தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனை தான் தற்போது பேஸ்புக்கில் பதிவிட்டேன். அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும் (விஜயகாந்தை ஏலம் விடுவதை போல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியேவே பேஸ்புக்கில் பதிவிட்டேன். அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால், உடனடியாக நீக்கிவிட்டேன், இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
0
0