ஆளுநர் ரவி எல்லை மீறுகிறாரா…?திமுக கூட்டணி கட்சிகள் ஆவேசம்…!

Author: Babu Lakshmanan
26 October 2021, 8:25 pm
Quick Share

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த மாதம் 18-ந்தேதி நியமிக்கப்பட்டார்.

ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு

அவர் தமிழகத்திற்கு வந்து பதவியேற்கும் முன்பாகவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பொங்கியெழுந்தனர்.

“ரவி நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்த போது அந்த மாநில அரசு நிர்வாகத்தில் பெரிதும் தலையிட்டார். பாஜக ஆதரவு கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டார்’ என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் ஆளுநர் ரவியின் நியமனத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

rn ravi - updatenews360

ஒரு ஆளுநரின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாத நிலையில் அவரைப் பற்றி விமர்சனம் செய்வது சரியல்ல என்று அனைத்து தரப்பினரும் அப்போது இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் “நாகாலாந்தில் ஊழலை ஒழிக்கவே அரசு நிர்வாகத்தில் ஆளுநர் ரவி தலையிட்டார். ஊழல் செய்பவர்கள்தான் ஆளுநரை கண்டு பயப்பட வேண்டும்” என்று பாஜகவினர் பதிலடியும் கொடுத்தனர். ரவி தமிழக ஆளுநராக பதவியேற்ற சில தினங்களில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை அழைத்து திடீர் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினையும் சைலேந்திரபாபு சந்தித்துப் பேசினார்.

இதன்பின்னர் தான் தமிழகத்தில் ஒரே நாளில் 2,500 ரவுடிகள் போலீஸாரால் வேட்டையாடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப் படுவதை ஆளுநர் ரவி மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறார். அதனால்தான் இந்த நடவடிக்கை என்று அதற்கு காரணம் கூறப்பட்டது.

மோடியுடன் சந்திப்பு

இதையடுத்து இன்னொரு விவகாரத்தையும் கூறுகிறார்கள். அண்ணா பிறந்தநாளையொட்டி 700 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்ததாகவும், ஆனால் குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள், கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற கடும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களைப் பற்றிய பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக அனைவரையும் விடுதலை செய்ய இயலாது என்று ஆளுநர் ரவி மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

இந்தநிலையில்தான் பதவியேற்று ஒருமாதம் முடிவடைந்த நிலையில், ஆளுநர் ரவி கடந்த வாரம் டெல்லிக்கு சென்று அங்கு 5 நாட்கள் தங்கியிருந்து பிரதமர் மோடியையும் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.

governor Meet PM -Updatenews360

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆளுநர் ரவியின் நடவடிக்கை குறித்து தற்போது இன்னொரு தகவல் உலா வருகிறது.

தயாராக இருங்கள்

சட்டம், ஒழுங்கு மற்றும் நலத் திட்டங்கள் தொடர்பாக ஆளுநர் ரவி தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்புவிடம் விரிவான அறிக்கை கேட்டிருப்பதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக அரசு துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு கடிதத்தையும் எழுதி இருக்கிறார். அதில், “மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை மாநிலத்தின் ஆளுநர் அறிந்துகொள்ள விரும்புகிறார். எனவே இதுகுறித்து ஆளுநரிடம் விளக்கிக் கூறும் வகையில், அனைவரும் தங்களுடைய துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய, மாநில அரசு நலத்திட்டங்கள் பற்றிய விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தகவல்கள் விரிவான முறையில் விவாதிக்கக் கூடிய அளவில் இருக்கவேண்டும். இந்த நிகழ்வுக்குரிய தேதி, நேரம் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆளுநர் ரவி சந்தித்த நிலையில்தான் இந்த அறிக்கை கேட்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது தமிழக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் ரவி தலையிடுவதாக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

வரம்பு மீறிய செயல்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும்போது “தமிழக அரசின் திட்டங்கள், துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிக் கண்காணிப்பதற்கோ, தலையிடுவதற்கோ ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை. மாநில அரசு நிறைவேற்றும் திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் பற்றியும் அறிக்கை தருமாறு, தமிழக ஆளுநர் கேட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக தமிழகத்தில் பாஜகவை காலூன்றச் செய்வதற்கான முயற்சியில் தமிழக ஆளுநர் ஈடுபடுகிறாரோ? என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. 1968 நிர்வாகச் சீர்திருத்த ஆணையம், 1969 ராஜமன்னார் குழு, 1968 சர்க்காரியா ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு எதிராக தமிழக ஆளுநர் செயல்பட முற்படுவது வரம்பு மீறிய செயல்.

Cbe KS Alagiri Byte - updatenews360

ஏற்கெனவே, ஒட்டுமொத்த தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜக தமிழக ஆளுநரின் நடவடிக்கையால் மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன். தமிழக ஆளுநர் ரவி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்படாமல் தமது வரம்புகளை மீறி, உள்நோக்கத்தோடு செயல்படுவாரேயானால், அதன் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அதிமுக தொடர்ந்து பலவீனமாகி வருவதால், அந்த இடத்தை பாஜக கபளீகரம் செய்து தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக்கொள்ள பாஜக நினைக்கிறது. 
 
இந்த ஆட்சியின் மீது இல்லாத, பொல்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நிர்வாகம் மற்றும் மக்களின் கவனத்தை பாஜக திசை திருப்பி வருகிறது. தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், சீர்குலைக்கும் விதத்திலும் செயல்படுகிறது.

தமிழக ஆளுநர் ஒவ்வொரு துறை அதிகாரிகளின் தகவலையும் கேட்டிருப்பது என்பது ஏற்க முடியாது. ஆளுநரின் அதிகாரத்தை தமிழக முதல்வர் மதிக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் மத்திய அரசு ஆளுநர் மூலம் வரம்பு மீறி செயல்பட்டால் ஏற்க முடியாது.

ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு வாகனம் போன்றது. நெருப்பு இருந்தால் மட்டுமே வந்து அணைக்க வேண்டும். ஆளுநர் வரம்பை மீறினால் முதலமைச்சர் பயப்படமாட்டார். ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவது மக்களிடையே இரட்டை ஆட்சி நடக்கின்றது என்ற குழப்பத்தையே ஏற்படுத்தும். ஆளுநரின் அதிகாரத்தைத் தமிழக முதலமைச்சர் மதிக்கத் தெரிந்தவர். ஆனால் ஆளுநர் மூலம் மத்திய அரசு வரம்பு மீறி செயல்படுவதை ஏற்க முடியாது. அரசுச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது ஆளுநரின் தலையீடு தேவையற்றது” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

வருத்தம்

இந்த அரசியல் பரபரப்புக்கு இடையே, தான் அனுப்பிய கடிதம் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அளித்துள்ள விளக்கத்தில், “துறை செயலாளர்களுக்கு அலுவல் ரீதியாக அனுப்பப்பட்ட கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. வழக்கமான நிகழ்வுகளை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” என்று கூறியுள்ளார்.

secretary iraianbu - updatenews360

இதுபற்றி அரசியல் ஆர்வலர்கள் கூறும்போது, “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அதுபோல்தான் திமுக கூட்டணி கட்சிகளின் அலறலும் உள்ளது. திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் கூட ஆளுநர் இதுபோல் அறிக்கை கேட்பது தவறானது அல்ல என்று கூறியிருக்கிறார்.

ஆளுநர் ரவி ஆரம்பம் முதலே கவர்னர் மாளிகைக்குள் இருந்தவாறே ‘சைலன்ட்’டாக அதிரடி காட்டி வருகிறார். அதுதான் காங்கிரஸ் விசிக,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு எரிச்சல் தருவதாக உள்ளது. அதனால்தான் ஆளுநர் ரவி வரம்பு மீறுகிறார் என்று ஒரு புதிய கதையைச் சொல்கிறார்கள்” என்று கிண்டலாக குறிப்பிட்டனர்.

Views: - 222

1

0