திமுகவின் காலில் விழுந்து குறைவான தொகுதிகளைப் பெறுவதா? காங்கிரஸ் தலைவர்கள் கொதிப்பு.. 3வது அணி அமைக்க கோரிக்கை!!

18 November 2020, 8:05 pm
Cong - dmk - updatenews360
Quick Share

சென்னை: தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் தொடர்வோம் என்றும், கடுமையாக பேரம் பேச மாட்டோம் என்றும் காங்கிரஸ் மாநிலப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளதற்கு மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி முடிவுகளை எடுக்க மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் மத்திய தலைமை தமது முடிவுகளைத் திணிக்கக்கூடாது என்றும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி தெரிவித்துள்ளார். திமுகவுடன் சரணாகதி அடைவதுபோல், குண்டுராவ் பேசியிருப்பது தவறு என்றும், குறைந்தது 40 தொகுதிகளாவது திமுக தரவில்லையென்றால் மூன்றாவது அணி அமைக்கலாம் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி குறித்து ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்குப் பேட்டியளித்த தமிழக கங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கள யதார்த்தத்தையும், வெற்றி வாய்ப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் போட்டியிடுவோம் என்றும், திமுகவுடன் தேவையற்ற பேரத்தில் ஈடுபடமாட்டோம் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, திமுகவிடம் காங்கிரஸ் சரணாகதி அடைந்துவிட்டது என்று கடும் விமர்சனம் எழுந்தது.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட காங்கிரஸ் விடாப்பிடியாக பேரம் பேசி 70 தொகுதிகளில் நின்றது. முதலில் தேஜஸ்வி யாதவ் காங்கிரசுக்கு 50 இடங்களைக் கொடுப்பதாகக் கூறினார். இன்னும் இருபது இடங்களை ஒவேசி தலைமையிலான முஸ்லிம் கட்சிக்கும், தலித் கட்சியை நடத்தும் மாஞ்சிக்கும் வேறு கட்சிகளுக்கும் பிரித்துக்கொடுக்கலாம் என்று தேஜஸ்வி சொன்னதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. தாங்கள் தேசியக் கட்சி என்பதாலும், தேஜஸ்வி புதுமுகம் என்பதாலும், காங்கிரசுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் வேண்டும் என்றும், இல்லையென்றால் கூட்டணியைவிட்டு வெளியேறுவோம் என்றும் கூறி மிரட்டல் அரசியலை காங்கிரஸ் கையில் எடுத்தது. இதனால் வேறு வழியின்றி சிறிய கட்சிகளுக்கும் கூட்டணியில் இடம் கொடுக்காமல் காங்கிரசுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கினார் தேஜஸ்வி யாதவ்.

ஆனால், காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 51 இடங்களில் அந்தக்கட்சி தோற்றதால், தேஜஸ்வி யாதவின் முதல்வர் கனவு சிதைந்தது. இதனால், காங்கிரஸ் கட்சியின்மீது கடும் விமர்சனம் எழுந்தது.

இந்த முடிவால் கடும் அதிர்ச்சி அடைந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் தனது கட்சிக்கும் இப்படி ஒரு நிலை வரலாம் என்று பீதியடைந்தார். இதனால், காங்கிரசுக்கு 20 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கக்கூடாது என்று திமுக முடிவு செய்துள்ளது. இதை அறிந்த குண்டுராவ், சரணாகதி மனப்பான்மையில் பேட்டி அளித்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

கள யதார்த்தத்தை கருத்தில் கொண்டு இடங்களைக் கேட்போம் என்று கூறியிருப்பது மிகவும் தவறானது என்று கூறும் காங்கிரஸ் கட்சியினர் பீகாரின் கள யதார்த்தமும் தமிழகத்தின் நிலையும் வேறு என்பது குண்டுராவுக்குத் தெரியவில்லை என்று குமுறுகிறார்கள். காங்கிரஸ் தனது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்போது கோஷ்டி அடிப்படையிலும் வாரிசு அடிப்படையிலும் தொகுதியில் செல்வாக்கு இல்லாத ஆட்களைத் தேர்ந்தெடுப்பதாக திமுகவுக்கு ஆலோசனை சொல்லும் ஐ-பேக் கூறியுள்ளது. அதனால், காங்கிரஸ் வேட்பாளர்களை திமுகவே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் ஐ-பேக் நிறுவனர் பிரசாந்த கிஷோர் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் பேசியுள்ள குண்டுராவ் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் இருக்கும் தொகுதிகளைக் கண்டறிந்து நிற்போம் என்று கூறியிருக்கிறார்.

DMK - Congress - Updatenews360

திமுக சொல்லும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும், அதற்கு பதில் சொல்லும் வகையிலும் திமுக கொடுக்கும் தொகுதிகளை அப்படியே தலையாட்டி பெற்றுக்கொள்வோம் என்று முன்னதாகக் கூறியிருப்பதால், திமுக தலைவர்கள் காங்கிரசை மதிக்கமாட்டார்கள் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகிறார்கள். கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரத்தையே மாநில காங்கிரஸ் தலைவர்களில் தர வேண்டும் என்று கார்த்தி சொல்லியிருக்கிறார். கேரளாவில் மாநில காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவை மத்திய தலைமை ஏற்றுக்கொள்வதால்தான் கட்சி வலிமையாக இருக்கிறது என்று கார்த்தி தெரிவித்தார்.

எனவே, கேரளாவில் எப்படி மாநில தலைமை கூட்டணியை முடிவு செய்கிறதோ அதுபோல் தமிழகத்திலும் நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளார். மத்திய தலைமை நியமித்துள்ள மாநில பொறுப்பாளரே தேவையில்லை என்பதுபோல் அவரது கருத்து இருக்கிறது. மற்ற தலைவர்களும் இதேபோல் மத்திய தலைமையில் தலையீட்டையும் குண்டுராவின் நியமனத்தையும் எதிர்க்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

மாநில காங்கிரஸ் தலைவர்களையும், நிர்வாகிகளையும் மீறி திமுக கொடுக்கும் குறைவான இடங்களை ஏற்றுக்கொண்டால், பல இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரசின் வலிமையைக் காட்டுவார்கள் என்றும், இதனால் திமுக கூட்டணியின் தேர்தல் வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. காங்கிரசுக்குக் குறைவான தொகுதிகள் ஒதுக்கினாலும் பிரச்சினை, அதிக தொகுதிகளைத் தந்தாலும் சிக்கல் என்ற சூழலே இருப்பதால் ஸ்டாலின் கடும் குழப்பத்தில் இருக்கிறார்.

1 thought on “திமுகவின் காலில் விழுந்து குறைவான தொகுதிகளைப் பெறுவதா? காங்கிரஸ் தலைவர்கள் கொதிப்பு.. 3வது அணி அமைக்க கோரிக்கை!!

Comments are closed.