மத்திய அரசுக்கு மனுப்போடும் உத்தியைக் கைவிட்டார் ஸ்டாலின் : சர்ச்சைக்குப்பின் அணுகுமுறையில் மாற்றம்..!

9 September 2020, 4:45 pm
stalin-modi - updatenews360
Quick Share

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி குறித்து பாஜகவுக்கு ஆலோசனை வழங்கியும், அதிமுக அரசு மீது சிபிஐ விசாரணை வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு வெளியிட்ட அறிக்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளானதாலும், பாஜகவுடன் நெருங்க திமுக முயற்சி செய்வதாக சந்தேகம் எழுந்ததாலும் திமுக அந்த அணுகுமுறையை மாற்றிக்கொண்டது.

பாஜக அரசுக்கு வேண்டுகோள் இன்றைய பொதுக்குழுவில் முழுமையான கண்டனமாக மாறியது. மாநில அரசு தவறு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் கருதினால், தமிழ்நாட்டு மக்கள் மன்றத்திடம் உரிய நேரத்தில் அக்குற்றச்சாட்டுகளை எடுத்துச்செல்வதே மக்களாட்சி முறைக்கு சரியானதாக இருக்க முடியும். மக்கள் மன்றத்திடம் செல்வதை விட்டுவிட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது பாஜகவைப் பயன்படுத்தி, அதிமுகவை ஒடுக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் மத்தியில் உருவாக்கியது.

modi_stalin-kanimozhi - updatenews360

இந்நிலையில் திமுக பொதுக்குழுவில் இன்று நிறைவேற்றிய தீர்மானத்தில், அதிமுகவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்திடம் வைக்கப்போவதாக அக்கட்சி சூளுரைத்தது. அ.தி.மு.க. அரசின் ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் அவற்றுக்கு ஒத்துழைப்பு நல்கி, தமிழகத்தில் படுமோசமானதோர் அரசு நடப்பதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருவதாக பாஜகவைக் குற்றம்சாட்டிய திமுக, தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, மக்கள் விரோதத் திட்டங்களைத் திணித்திடும் மத்திய பா.ஜ.க. அரசின் கபட முகத்தை மக்கள் மன்றத்தில் உணர்த்தப்போவதாகக் கூறியது. மூத்த தலைவர்களுடன் ஆலோசனைக்குப் பிறகு, அதிமுக அரசின் மீது நடவடிக்கை வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரும் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

Stalin_ duraimurugan tr baalu - updatenews360

பாஜகவின் மீதி கடுமையாகப் பாய்ந்த திமுக, “வரலாறு காணாத வகையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி ஏப்ரல் – ஜூன் மாதத்தில் 23.9 சதவீதமாக வீழ்ச்சியடையக் காரணமாயிருந்து, கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாற்றம் அடைந்து, இதுவரை இல்லாத அளவிற்கான வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கி, அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய நெறிகளுக்கு விரோதமாக மத்தியில் சர்வாதிகார ஆட்சியை பா.ஜ.க. நடத்தி வருவதற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று சாடியது.

நான்கு ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வின் அடுக்கடுக்கான ஊழல்களுக்கு ‘பாதுகாவலராக’ விளங்கியதாகவும், ஆட்சியாளர்களை மிரட்டி தமிழக உரிமைகளைப் பறித்ததாகவும், தமிழக மக்களுக்கு விரோதமான திட்டங்களை மாநிலத்தில் புகுத்தியதாகவும், மொத்தமாக பாஜகவைத் தாக்கியது. தமிழ்மொழியைப் பின்னுக்குத் தள்ளி இந்தியைத் திணித்து, தமிழகக் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வருவதோடு, வெறுப்புணர்வுகளை விதைத்து, சமூக-மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலையும் உருவாக்கி வருவதாக பாஜகவைக் குறிவைத்து திமுக தாக்குதல் தொடுத்தது. இரண்டு நாட்களுக்கு முன் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தது இதே கட்சிதானா என்ற சந்தேகத்தையே பலருக்கும் ஏற்படுத்தியது.

Stalin-03-updatenews360-1

திமுக தலைவர் இரண்டு நாட்களுக்கு வெளியிட்ட அறிக்கை அதிமுக-பாஜக இடையே பிளவு ஏற்பட்டுத்த அவர் முயற்சி செய்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியது. மும்மொழிக் கொள்கையை அதிமுக உறுதியாக எதிர்க்கும் நிலையில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி உடைந்தால், பாஜகவுடன் திமுக கைகோர்க்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரபூர்வமாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், மத்திய அரசின் கோபத்துக்கு அதிமுக அரசு உள்ளாகியிருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள சூழலில், தமிழ்நாடு அரசின் மீது சிபிஐ விசாரணை கோரி ஸ்டாலின் கருத்து வெளியிட்டிருந்தது பலத்த சந்தேகங்களை எழுப்பியது.

சிபிஐ, வருமான வரித்துறை போன்றவை மாநிலத்தில் இருக்கும் எதிரிகளை ஒடுக்க மத்திய அரசு பயன்படுத்தும் அடக்குமுறைக் கருவிகள் என்று திமுக தலைவர்கள் பலமுறை கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசு, மாநில அரசுகளை அடிமைகளாக நடத்துவதாகவும், மாநிலங்களுக்கு அதிக உரிமையும் சுயாட்சியும் கோரிவரும் கட்சியான திமுக மத்திய அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளை மாநில அரசின் மீதி ஏவுமாறு கேட்பது இதுவரை பேசிவந்த மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கு உகந்ததுதானா என்ற கேள்வி பலருக்கும் உதித்தது.

ஸ்டாலினின் கோரிக்கையை பாஜக அரசு ஏற்குமானால் அதிமுகவுடன் பாஜக கூட்டணி முறியும். அத்தகைய சூழலில் பாஜகவுடன் கைகோர்க்க திமுக தயாராக இருக்கிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. ஸ்டாலினின் அணுகுமுறை பலத்த சர்ச்சையையும் சந்தேகங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கிய சூழலில் திமுகவின் இன்றைய தீர்மானம் அவரது அணுகுமுறை மாறியுள்ளதைக் காட்டுகிறது.

Views: - 0

0

0