திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் உரசல் : கூட்டணி ஆட்சிக் கோரிக்கையை மீண்டும் எழுப்பிய கார்த்தி சிதம்பரம்!!

30 September 2020, 7:21 pm
karthi - stalin - - updatenews360
Quick Share

சென்னை: தேர்தல் முடிவைப் பொறுத்து திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இருப்பதாக சிவகங்கை எம்.பி,யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி அளித்த பேட்டி, திமுகவை மீண்டும் சீண்டி கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது இலங்கைத் தமிழர் படுகொலையை மக்கள் மறக்காத நிலையில் மீண்டும் தமிழ் ஈழத்தை காங்கிரஸ் எதிர்ப்பதாக கார்த்தி கூறியிருப்பது தமிழின உணர்வாளர்களை கூட்டணிக்கு எதிராகத் திருப்பும் வாய்ப்பையும் உண்டாக்கியிருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கார்த்தியை நியமிக்க ப.சிதம்பரம் முயற்சி செய்யும் நேரத்தில், கார்த்தியின் பேட்டி கூட்டணி ஆட்சி முழக்கத்தை எழுப்பியும், அதிரடியாகப் பேசியும் கட்சியினரின் ஆதரவைப்பெறும் முயற்சியாகவே அவரது கருத்துகள் பார்க்கப்படுகிறது. ஆனால், கார்த்தி போன்றவர்கள் தலைவரானால் எளிதில் கூட்டணி முறியும் சூழலே உருவாகும் என்று கட்சி நிர்வாகிகளே அச்சப்படுகின்றனர்.

-P-Chidambaram-and-Karti - updatenews360

அண்மையில் அரசியல் வார இதழ் ஒன்றில் கார்த்தி சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில், கட்சியின் தமிழ்நாடு மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியா..? இல்லையா..? என்பதை முடிவு செய்ய முடியாது என்றும், காங்கிரஸ் கட்சியினர் எம்.எல்.ஏ.க்களாக வெற்றிபிறகு திமுகவுக்கு தங்கள் ஆதரவு தேவையா..? இல்லையா..? என்பதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். தனித்த பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று திமுக வியூகங்களை வகுத்து வரும்போது, தேர்தல் முடிவைப் பொறுத்து காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக கார்த்தி கூறியிருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

காங்கிரசுக்குக் குறைவான தொகுதிகளையே ஒதுக்க வேண்டும் என்று திமுக மேலிடம் எண்ணியிருப்பதை கார்த்தியின் கருத்து வலுப்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கி அதில் அவர்கள் வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சியைக் கோருவார்கள் என்பதை கார்த்தியின் பேட்டி உறுதிப்படுத்தியுள்ளது. காங்கிரசுக்குக் குறைவான இடங்களை ஒதுக்குவதோடு மட்டுமில்லாமல், அவற்றில் காங்கிரஸ் வெற்றிபெற திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதால் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் அதிமுக வெல்ல அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.

DMK-CONGRESS -updatenews360

கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் அதிக இடங்களை திமுகவிடம் பெற வேண்டும் என்பதும் கார்த்தியின் பேட்டியில் வெளிப்படுகிறது. அவ்வாறு காங்கிரஸ் முரண்டுபிடித்தால் காங்கிரசை திமுக கழற்றிவிடவும் தயங்கக்கூடாது என்று திமுகவினர் உறுதியாக இருக்கின்றனர். மேலிடத் தலைவரே கூட்டணி ஆட்சியில்லை என்று கூறிவிட்ட பிறகு, கார்த்தி சிதம்பரம் அதை எதிர்த்துப் பேசியுள்ளது கட்சியின் தலைமைக்கும் எதிரான கருத்தாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமையை குறைகூறி எழுதப்பட்ட கடிதத்தின் பின்னணியில் சிதம்பரம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், கார்த்தியும் அதை ஆதரித்துப் பேசியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ராகுலின் ஆதரவாளர் மாணிக் தாகூர் முயற்சி செய்துவரும் நேரத்தில், ராகுலும் மீது கார்த்திக்கு இருக்கும் கோபமே பேட்டியில் வெளிப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

மேலும், இலங்கைத் தமிழர் படுகொலையின்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்தது என்றும், அந்தப் போரை நடத்தியதே இந்தியாதான் என்று அப்போது இலங்கையின் அதிபராக இருந்த மகிந்தா ராஜபக்சே வெளிப்படையாக கூறிய நிலையில், தமிழ் ஈழத்தை காங்கிரஸ் ஆதரிக்காது என்று மீண்டும் அப்பிரச்சினையை கார்த்தி கிளறியுள்ளதும், தேவையில்லாமல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தமிழ் ஈழ ஆதரவைக் குறைகூறிப் பேசியிருப்பதும் கூட்டணியில் மேலும் உரசலை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மீண்டும் இலங்கைப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழர் பிரச்சினை குறித்து பேச்சுகளை நடத்திவரும் நிலையில் வரும் தேவையில்லாமல் தமிழ் ஈழத்தை காங்கிரஸ் எதிர்ப்பதாக நினைவுபடுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகவும் ஏற்கனவே திமுகவும் காங்கிரசும் திமுகவும் கூட்டணி வைத்திருந்தபோது நடைபெற்ற தமிழினப் படுகொலைகளை பொது விவாதத்துக்குக் கொண்டுவருவதாகவும் அமையும் என்று திமுகவினர் கடுப்பாகி உள்ளனர்.

படுகொலைகள் நடைபெற்றபோது போர்நிறுத்தம் கோரி முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உண்ணாவிரதம் தொடங்கி ஆறு மணி நேரத்தில் அதை முடித்துக்கொண்டார். போர் முடிவுக்கு வந்ததாக ப.சிதம்பரம் கூறியதாலேயே போராட்டத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறியிருந்தார். இதுவரை இதுகுறித்து சிதம்பரம் எந்த விளக்கமும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.