கூட்டணிக் கட்சிகளை கடைசி நேரத்தில் கழற்றிவிட திமுக திட்டம் : உடனடியாக வெளியேற தோழமைக்கட்சிகள் தீவிர யோசனை!!

Author: Babu
8 October 2020, 7:50 pm
Quick Share

சென்னை: திமுக கூட்டணியில் மாற்றம் இருக்கும் என்று கட்சியின் அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் இன்று கூறியிருப்பது கூட்டணிக் கட்சிகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, திமுக பொதுச்செயலாளர் க. துரைமுருகன் கூறிய கருத்தை இளங்கோவனும் மீண்டும் சொல்வதால், கடைசி நேரத்தில் எந்தக் கட்சியை திமுக கழற்றிவிடுமோ என்ற குழப்பத்தில், இப்போதே அதில் இருந்து வெளியேறிவிடலாமா என்று கூட்டணித் தலைவர்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர்.

‘தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வெளியில் போவார்கள். யாராவது வருவார்கள்’ என்று துரைமுருகன் சொன்னது திமுக கூட்டணிக் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பேசிய துரைமுருகன் ஒருமையில் பேசவில்லை என்றும், அப்படி யாராவது கருதியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். ஆனால், சொன்ன கருத்தின் உள்ளடக்கத்தை அவர் இதுவரை மறுக்கவில்லை.

Vellore DuraiMurugan - Updatenews360

இன்று கூட்டணி பற்றிப் பேசிய இளங்கோவனும் திமுக கூட்டணியில் யார் இருப்பார்கள் என்று தேர்தல் நேரத்தில்தான் தெரியும் என்று பேசியுள்ளதால், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்தையே துரைமுருகன் பேசியிருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கூட்டணி பற்றிய தனது கருத்து ஊடகங்களில் கவனம் பெறுவதற்காகவே துரைமுருகன் ஒருமையில் பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இரண்டு முக்கியத் தலைவர்கள் தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறும் என்று கூறியிருப்பதால் கடைசி நேரத்தில் தங்களைக் கழற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் தெருவில் விட்டுவிடுவார்களோ என்று அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே தமிழ்நாடு வந்திருந்த மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று கூறியிருந்தார். திமுகவின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைக்க காங்கிரஸ் துணைநிற்கும் என்று பல்டி அடித்தார். இதே கருத்தை முன்னரே முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சொல்லியிருந்தார்.

-P-Chidambaram-and-Karti - updatenews360

அரசியல் வார இதழ் ஒன்றில் கார்த்தி சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கட்சியின் தமிழ்நாடு மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியினர் எம்.எல்.ஏ.க்களாக வெற்றிபிறகு திமுகவுக்கு தங்கள் ஆதரவு தேவையா இல்லையா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கார்த்தி சிதம்பரத்தின் கருத்தை முன்மொழிவது போல, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் ஆட்சியில் பங்கு குறித்து இப்போது பேசவேண்டியதில்லை என்று சொன்னார். அதாவது, தேர்தலுக்குப் பின் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்கும் என்பதை அவர் மறுக்கவில்லை. கார்த்தி சிதம்பரத்தின் கருத்துக்கு துரைமுருகனின் பேச்சு பதிலாக அமைந்ததென்றால் கே.எஸ். அழகிரியின் மறைபொருளான பேச்சுக்கு பதிலடியாக டி.கே.எஸ், இளங்கோவனின் பேச்சு பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கி அதில் அவர்கள் வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சியைக் கோருவார்கள் என்பதை காங்கிரஸ் கட்சியினரின் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், காங்கிரசுக்குக் குறைவான இடங்களை ஒதுக்க திமுக முயற்சி செய்யும் என்று தெரிகிறது. கூட்டணியில் அதிக இடங்களை காங்கிரஸ் வலியுறுத்தக்கூடாது என்பதால்தான் துரைமுருகனும் இளங்கோவனும் திமுக கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகள் வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்று கூறுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.

இருவரின் பேச்சும் ஏனைய கூட்டணிக்கட்சிகளுக்கும் கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. வெறும் பேச்சுதானா என்று விட்டுவிட்டால் கடைசி நேரத்தில் தங்களை வெளியேற்றி நடுத்தெருவில் நிறுத்திவிடுவோர்களோ என்ற அச்சமும் கூட்டணித் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு இருந்தால் கூட்டணியில் இருக்கலாம் என்ற தொனியில் திமுக தலைவர்கள் பேசுவது மற்ற கட்சித் தலைவர்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது என்றும் அக்கட்சியின் தொண்டர்கள் கொந்தளிக்கிறார்கள்.

இப்படி கடுமையான நெருக்கடியில் உள்ளார்ந்த ஈடுபாடு இல்லாமல் கூட்டணி வைத்தாலும் கூட்டணிக் கட்சியின் தொண்டர்கள் திமுகவின் வெற்றிக்கு வேலை பார்ப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் பெரும் இழுபறிக்குப் பின் ஏற்பட்ட திமுக-காங்கிரஸ் கூட்டணி பெரும் தோல்வியையே தழுவியது.

எந்தக் கட்சியைத் திமுக வெளியேற்றும் என்று இப்போது தெரியாத நிலையில் கடைசி நேரத்தில் திமுக கழுத்தறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டால் என்ன செய்வது என்றும் இப்போதே வெளியேறிவிடலாமா என்றும் கூட்டணித் தலைவர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதிமுக கூட்டணியில் இடம் பிடிக்க முயற்சி செய்யலாமா அல்லது 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அமைத்ததுபோல் மூன்றாவது அணி அமைக்கலாமா என்று அவர்கள் தீவிரமாகப் பரிசீலித்துவருகின்றனர்.

Views: - 41

0

0