‘போடா பின்னாடி… ம*** விநாயகம்’ காவலரை தகாத வார்த்தையில் திட்டிய திமுகவினர் : வேடிக்கை மட்டுமே பார்த்த துரைமுருகன்..!!

9 December 2020, 2:11 pm
vellore police - dmk 1 - updatenews360
Quick Share

வேலூர் : வேலூரில் பாதுகாப்பிற்கு சென்ற காவலர்களை தகாத வார்த்தையில் திமுகவினர் திட்டி சண்டையிடுவதை, காரில் அமர்ந்தபடி எம்எல்ஏ துரைமுருகன் வேடிக்கை பார்த்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக வேலூரில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்வதற்காக சென்றுள்ள மத்திய குழுவினரை சந்திக்க திமுக எம்எல்ஏ துரைமுருகன், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், திமுக எம்பி கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மனு அளிக்க காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, துரைமுருகன், கதிர் ஆனந்த் உள்ளிட்டோரின் வாகனம் சென்று கொண்டிருந்த சாலையில், மத்திய குழுவினரின் பாதுகாப்பிற்காக செல்லும் போலீசாரின் வாகனம் பின்னே வந்தது. அவசர கதியில் வந்த போலீசாரின் வாகனத்திற்கு திமுகவினர் வழிவிட மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சைரன் போட்டும், ஹாரனை அடித்தும் போலீசார் வழிவிடுமாறு கோரியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த திமுகவினர், காரை நடுரோட்டிலேயே நிறுத்தி, போலீசாரின் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ‘இன்னும் 6 மாதம் தான் இருக்கிறது. யோசிச்சு பாத்துக்கோ. ஹாரன் அடிப்பயா நீ.. அவரு யாருன்னு தெரியுமா..? அவர் உட்கார்ந்து இருக்கறதுனால நீ தப்புச்ச, போடா பின்னாடி… போடா பின்னாடி’ என்று திமுகவினர் ஒரு போலீஸ்காரை சூழ்ந்து கொண்டு, வார்த்தைகளால் வாட்டி எடுத்தனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய திமுக எம்பி கதிர் ஆனந்தும், எதிரே இருப்பது ஒரு போலீஸ்காரர் என்பதை மறந்து, பின்னே போ என்று மிரட்டியுள்ளார்.

திமுகவினரின் இந்த மிரட்டலால் மிரண்டு போன அந்தக் காவலாரோ, இந்த சம்பவம் அனைத்தையும் காரில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த துரைமுருகனிடம் சென்று, ‘சார் நான் விநாயகம்’ எனக் கூற, அவரும் அலட்சியமாக பார்த்து கையை மட்டும அசைத்துள்ளார். அப்போது, பின்னே இருந்த திமுக நிர்வாகியே காவலரின் பெயரை தகாத வார்த்தையுடன் சேர்த்து உச்சரித்து விட்டு காரில் ஏறிப் பறந்தனர்.

ஏற்கனவே, இன்னும் 6 மாதங்கள்தான் இருக்கிறது பொறுத்திருங்கள் என காவலர்களை திமுகவின் தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி மிரட்டல் விடுத்த நிலையில், தற்போது துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்களும் போலீசாரை தரக்குறைவாக நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுகவினரின் இந்த செயல்களை பதிவு செய்த அங்கிருந்த ஒருவர், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ஆட்சியில் இல்லாத போதே, திமுகவினர் இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபட்டு வருவதாகவும், பதவி வெறி தலைக்கு ஏறிடுச்சி போல என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 0

0

0