இறந்தவர்களுக்கு போலி உறுப்பினர் அட்டை : 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.11 லட்சம் முறைகேடு : திமுக பிரமுகரின் தில்லாலங்கடி..!!

Author: Babu Lakshmanan
1 December 2021, 5:33 pm
Quick Share

காஞ்சிபுரம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் திமுக நிர்வாகிகளால் 11 லட்ச ரூபாய் முறைகேடு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டம் என்பது, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற மக்களுக்கு ஊதியத்துடன் 100 நாட்களுக்குக் வேலை வழங்கப்படுகிறது.

வங்கி கணக்கில் பயனாளியின் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு தேசிய மின்னணு நிதி மாற்றம் மூலமாக ஊதியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கிராம மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக கருதப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் சமீபகாலமாக ஏராளமான முறைகேடுகள் நடந்து வருவதாக பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் கிளார் ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றார்கள். 953 பேர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கின்றார்கள்.
கிளார் ஊராட்சியில் பணிதள பொறுப்பாளர்களாக திமுக கட்சியை சேர்ந்த ராஜவேலு மற்றும் ரேகா ஆகியோர் சுமார் 13 ஆண்டுகளாக பொறுப்பில் உள்ளார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை, வெளி ஊர்களில் உள்ள நபர்கள் மீதும், இறந்து போனவர்கள் மீதும், ஒரே நபருக்கு இரண்டு கார்டுகள் அளித்தும் போலி கணக்கு எழுதி சுமார் 11 லட்சம் ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளனர். குறிப்பாக, இறந்துபோன 24 நபர்கள் உயிருடன் உள்ளதாக கணக்கு எழுதி பணம் பெற்றுள்ளனர். அதேபோல், இல்லாத நபர்கள் மீதும், வெளியூரில் வசித்து வருபவர் மீதும் 100 நாள் வேலைவாய்ப்பு கார்டுகள் போட்டு அதன் மூலம் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து முறைகேடு செய்து உள்ளார்கள்.

இது தொடர்பாக இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் நேரில் சென்று ராஜவேலு மற்றும் ரேகாவிடம் கேட்டபோது “நாங்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இப்படிதான் நடந்துகொள்வோம். உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்,” என கூறி திமுக நிர்வாகிகளை விட்டு மிரட்டுகின்றனர் என அப்பகுதி இளைஞர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும், இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

Views: - 394

0

0