உதயநிதியின் பிரச்சாரத் திட்டத்தால் கதிகலங்கிப் போன உடன்பிறப்புகள் : பறிபோகும் வாக்குகள்… புலம்பும் நிர்வாகிகள்..!!

20 November 2020, 12:13 pm
Quick Share

சென்னை: திமுக தலைவர் உதயநிதியின் நூறு நாள் தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டம் அரசியலில் உதயநிதியை வளர்க்கும் திட்டம் என்றும், இதனால் திமுகவுக்குக் கிடைக்கும் ஓட்டுகளும் கிடைக்காமல் போகும் என்றும் திமுகவுக்குள் குமுறல் எழுந்துள்ளது. மேலும், இந்த பிரச்சார பயணத்தில் உதயநிதியிக்காக பிரமாண்டமான போஸ்டர், விளம்பரங்கள், கட் அவுட்கள் ஆகியவற்றுக்காக கோடிக்கணக்கில் ஆடம்பர செலவு செய்ய வேண்டுமே என்று தமிழக முழுவதும் இருக்கும் திமுக நிர்வாகிகள் மலைத்துப் போயிருக்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அனைத்துக்கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தும், நலத்திட்டங்களை வழங்கியும், சுறுசுறுப்பாக மக்களை சந்தித்து வருகிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் முதல்வர் வேட்பாளருமான ஸ்டாலின் காணொலிக் காட்சிகள் மூலம் சந்திப்புகளை நடத்திவருவதுடன், நாள்தோறும் அறிக்கைகளை விட்டுக்கொண்டும் இருக்கிறார்.

EPS - stalin - updatenews360

அதிமுகவின் தேர்தல் பணிகளையும் எடப்பாடி பழனிசாமி ஜெட் வேகத்தில் தொடங்கியுள்ளார். ஆனால், திமுக சார்பில் தேர்தல் பணிகள் மந்தமாகவே இருக்கின்றன. இந்த நிலையில், ஸ்டாலின் மின்னல் வேக சுற்றுப்பயணத்தை நடத்தி திமுகவின் தேர்தல் பணிகளுக்கு ஊட்டம் அளிப்பார் என்று உடன்பிறப்புகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் உதயநிதி தமிழ்நாடு முழுவதும் 100 நாள் தேர்தல் சுற்றுப்பயணம் நடத்துவார் என்று செய்திகள் கூறுகின்றன. பயணத்திட்டம் முழுமையாக வெளிவராவிட்டாலும், உதயநிதி இன்று முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதையொட்டி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை செலுத்தினார். கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து பிரசாரத்தை அவர் தொடங்க உள்ளார். நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் முதல்கட்டமாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உதயநிதி கட்சியினரை மட்டும் சந்திக்காமல் மக்களையும் சந்திப்பார் என்றும், ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே நிகழ்ச்சி போல இது இருக்கும் என்று திமுகவினர் கூறுகின்றனர்.

udhayanidhi - updatenews360

தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் காலடி படாத இடமே இருக்கக்கூடாது என்கிற வகையில் சூறாவளிச் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திமுக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடக் கூடும் என உத்தேசிக்கப்படும் தொகுதிகளுக்கும் செல்லவிருக்கிறார். உதயநிதியின் ஆதரவாளர்கள் இந்த சுற்றுப்பயணத்துக்கு பெரிய அளவு பில்ட்-அப் கொடுத்து வருகின்றனர். உதயநிதி டைமிங்காகப் பேசுவார் என்றும், கருணாநிதியை போல் நகைச்சுவையாகப் பேசி கைதட்டல்களை அள்ளுவார் என்றும் அவர்கள் பிரச்சாரத்துக்கு முந்தைய பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆனால், இந்தப் பயணம் திமுகவின் வெற்றிக்காக நடத்தப்படவில்லை என்றும், உதயநிதியை அரசியலில் பெரிதளவு வளர்த்துவிட ஸ்டாலினின் குடும்பத்தால் திட்டமிடப்பட்ட நிகழ்வு என்றும் திமுகவின் மூத்த நிர்வாகிகள் கருதுகிறார்கள். தலைவர் ஸ்டாலினும், பொதுச்செயலாளர் துரைமுருகனும், திமுகவின் பல தலைவர்களும் செய்யாத பிரச்சாரத்தை உதயநிதி செய்துவிடுவார் என்பது, மற்ற தலைவர்களைவிட உதயநிதியே திறமையானவர், ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக கட்சியின் தலைவராகத் தகுதி உடையாவர் என்ற பிம்பத்தை உருவாக்கவே இந்தத் பிரச்சாரத் திட்டம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

udhayanidhi stalin - updatenews360

பல இடங்களில் உதயநிதி நகைச்சுவை என்ற பெயரில் பேசும் தவறான பேச்சுகளுக்கு விளக்கம் சொல்வதே திமுக தலைவர்களுக்கு முழு நேர வேலையாகப் போய்விடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். அதிமுகவின் மூத்த தலைவர்களைப் பற்றி உதயநிதியின் கண்ணியம் இல்லாத பேச்சாலும், ஆடம்பர விளம்பரங்களாலும், பொதுமக்கள் முகம் சுளிப்பதுடன் திமுக மீது கடும் வெறுப்பு ஏற்படும் என்று மூத்த தலைவர்கள் பயத்தில் உள்ளனர். மேலும், ஸ்டாலினின் வாரிசு அரசியலால் மூன்றாவது முறையும் திமுக தோல்வி அடையும் என்ற கலக்கத்தில் உடன்பிறப்புகள் இருக்கின்றனர்.

இந்தப் பிரச்சாரத்தில் அவருக்கு போஸ்டர்கள், கட்-அவுட்கள், பத்திரிகை விளம்பரங்கள், ஆடம்பர மேடையமைப்பு போன்ற கோடிக்கணக்கான ரூபாய் செலவுகளுக்கு என்ன செய்வது என்று மாநிலம் முழுவதும் இருக்கும் திமுக நிர்வாகிகள் ஆடிப்போயிருக்கிறார்கள். மாவட்டங்களில் இருக்கும் திமுகவின் மூத்த தலைவர்கள் உதயநிதியின் முன்னாள் நின்று வணக்கம்போட்டு அவரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அவர்களும் தவிப்புடன் இருக்கிறார்கள்.

Views: - 18

0

0

1 thought on “உதயநிதியின் பிரச்சாரத் திட்டத்தால் கதிகலங்கிப் போன உடன்பிறப்புகள் : பறிபோகும் வாக்குகள்… புலம்பும் நிர்வாகிகள்..!!

Comments are closed.