அதிமுகவை ஏக்கத்துடன் பார்க்கும் உடன்பிறப்புகள் : கட்சிமாறி வருபவர்களுக்கே பதவியா என்று திமுகவினர் குமுறல்!!

Author: Babu
7 October 2020, 7:34 pm
AnnaArivalayam
Quick Share

சென்னை: அதிமுகவில் கிளைக் கழகச் செயலாளராக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூழலில், திமுகவில் வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு கட்சிப் பதவிகளில் முன்னுரிமை கொடுப்பதைப் பார்த்து கொந்தளிப்பான மனநிலையில் ஆளுங்கட்சியைப் பார்த்து பெருமூச்சு விடுகின்றனர்.

தொடர்ந்து பத்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக திமுக இருக்கும் நிலையில், கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் தொண்டர்களுக்குப் பதவி தராமல், திமுக 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறப் போகிறது என்று நம்பிக்கொண்டு, மாற்றுக்கட்சிகளில் இருந்து வரும் புதியவர்களுக்கு வாரிவாரிப் பதவிகள் கொடுப்பது திமுக தொண்டர்களை மனம் நோக வைத்துள்ளது.

Stalin 01 updatenews360

அதிமுகவில் யாரும் உயர்பதவிக்கு வரலாம் என்ற சூழல் இருக்கும்போது, திமுகவில் வாரிசு அரசியலும், குடும்ப அரசியலும், ஏற்கனவே உச்சாணிக் கொம்பில் உள்ளது. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிதான் தனது மகன் ஸ்டாலினை அடுத்த தலைவராக முன்னிறுத்தினார் என்றால், ஸ்டாலினும் தன் பங்குக்கு தனது மகன் உதயநிதியை அனைத்து மட்டங்களிலும் முன்னிறுத்தி வருகிறார். உதயநிதி கைகாட்டும் ஆட்களுக்கே கட்சியில் பதவிகள் கிடைக்கிறது.

உதயநிதி மட்டுமல்லாது ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் யாருக்குப் பதவி தருவது என்பதை முடிவு செய்யும் இடத்தில் இருக்கிறார்கள். இதில் ஐ-பேக்கின் ஆதிக்கம் வேறு, கட்சிக் கட்டமைப்பில் தலையிட்டு மாவட்டங்களை பல சிறு கூறுகளாகப் பிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் பணம் உள்ளவர்களுக்கே சீட் தரப்படுகிறது. அடுத்த தேர்தலில் உதயநிதியும், ஐ-பேக்கும் சொல்லும் கட்சியினருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிகிறது.

duraimurugan - stalin1 - updatenews360

இந்த நிலையில் கட்சியிலாவது தங்களுக்குப் பதவி கிடைக்காதா என்று ஏக்கத்தில் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.
ஆனால், கட்சிப்பதவிகளோ புதிதாக வந்தவர்களுக்கு வாரி வழங்கப்படுகிறது. அண்மையில், திமுக பொதுச்செயலாளர் க.துரைமுருகன் அறிவித்த நியமனங்கள் அனைத்தும், மாற்றுக்கட்சியில் இருந்து ஓடிவந்தவர்களுக்கே தரப்பட்டுள்ளது, அதிமுகவில் அமைச்சர்களாக இருந்து தற்போது திமுகவில் சேர்ந்துள்ள ராஜ கண்ணப்பன், முத்துசாமி, விஜய் ஆகியாருக்கு பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுவும், தேர்தல் குழு செயலாளர் என்ற முக்கிய பதவி விஜய்க்கு தரப்பட்டுள்ளது. ராஜ கண்ணப்பனுக்கும் தேர்தல் குழுவில் துணைச்செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

திமுகவில் இருந்து விலகி அதனால் கொள்கை எதிரி என்று விமர்சிக்கப்படும் பாஜகவில் சேர்ந்து தேர்தலில் தோல்வி அடைந்த வேதரத்தினத்துக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கும் விதத்தில், மாநில விவசாய அணியில் துணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் இருந்துகொண்டு திராவிடக் கொள்கைகளையும், திராவிட இயக்க நிறுவனர் பெரியாரையும் கடுமையாகப் பேசிவந்த ஆர்.டி. அரசகுமார், திமுக தலைமைக் கழகத்தில் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளராக ஆகி இருக்கிறார். காங்கிரசில் இருந்து தமாகாவுக்குப் போய் அதற்குப் பின் அதிமுகவில் சிலநாள் இருந்து, இப்போது திமுகவுக்குத் தாவி பல கட்சித் தாவுதலில் சாதனை படைத்துள்ள வேலூர் சி, ஞானசேகரனுக்கும் திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் குழுவில் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர் 2006-ஆம் ஆண்டு முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தபோது, இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்வதை ஆதரித்தும், போர்நிறுத்தத்தை எதிர்த்தும், கடுமையாகப் பேசி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியை காங்கிரஸ் கவிழ்க்கும் என்று மிரட்டிவந்தவர். வெளிப்படையாகவே இலங்கை அரசையும், அதன் இராணுவ நடவடிக்கைகளையும் தீவிரமாக ஆதரித்தவர். போர்நிறுத்தம்கோரி தமிழ்நாட்டில் நடைபெற்ற உணர்வுபூர்வமான போராட்டங்களைக் கொச்சைப்படுத்திப் பேசி போராடுபவர்கள் மீதி கடும் அடக்குமுறையை ஏவ வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசியவராவார்.

இதுபோன்ற தமிழர்களின் படுகொலையை ஆதரித்தவர்களுக்கு ஒரு பக்கம் பதவி தருவதும், மறுபக்கம் தமிழர்களுக்காகப் போராடி வருபவர்கள் என்று சொல்லிக்கொள்வது திமுகவுக்கு அவப்பெயரைத் தருகிறது என்று கட்சியின் தொண்டர்கள் குமுறுகிறார்கள். வேலூரைச் சேர்ந்த ஞானசேகரக்கும், விஜய்க்கும் தேர்தல் குழுவில் பதவி தரும் வேலையை துரைமுருகன் செய்துள்ளது கட்சியில் தன்னை வலுப்படுத்திக்கொள்ளவே என்று உடன்பிறப்புகள் பேசிக்கொள்கிறார்கள்.

திமுகவில் ஆட்சியில் இல்லாத காலங்களில் போராட்டங்களில் கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளுக்கு மேடைபோட்டு, கூட்டத்துக்கு ஆட்களைத் திரட்டவும், தேர்தலில் வேலைபார்க்கவும், விசுவாசனமான தொண்டர்கள் வேண்டும். பதவி என்று வரும்போது, வேறு கட்சிகளில் இருந்து நல்ல நேரம் பார்த்து திமுகவில் சேருபவர்களுக்கு வாரி வழங்கப்படும் என்ற சூழலில், வரும் 2021 தேர்தலில் உடன்பிறப்புகள் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் வேலைபார்ப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Views: - 41

0

0