‘எல்லோரும் நம்முடன்’ ஐ-பேக்கின் அடுத்த சொதப்பல் : தேர்தல் நேரத்தில் உறுப்பினர் சேர்க்கையா..? கடுப்பில் திமுகவினர்!!

Author: Babu
5 October 2020, 7:01 pm
stalin-dmk-prashant-kishor- updatenews360
Quick Share

சென்னை: கோடிகோடியாக பணத்தைக் கொடுத்து திமுகவுக்கு ஆலோசனை சொல்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஐ-பேக் அமைப்பின் மீது ஏற்கனவே கட்சியின் மூத்த தலைவர்கள் கோபமாக இருக்கும் நிலையில், அதன் லேட்டஸ்ட் ஐடியாவான ‘எல்லோரும் நம்முடன்’ திட்டம் ‘சுத்த வேஸ்ட்’ என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல்வேறு விதமான பிரச்சார முறைகளை வகுத்து மக்களை அணுகி அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்குப் பதிலாக, ‘ஆன்லைன்’ மூலம் உறுப்பினர் சேர்ப்பது தேவையற்ற வேலை என்று கட்சியினர் எரிச்சலாக இருக்கின்றனர். உறுப்பினர் சேர்ப்பதும், மக்களின் ஆதரவைத் திரட்டுவதும், வேறுவேறு என்பது ஐ-பேக் போன்ற நிறுவனங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த நேரத்தில் இதை எப்படி ஏற்றுக்கொண்டார் என்று தொண்டர்கள் பரவலாகக் கேள்வி எழுப்புகின்றனர்.

stalin prasanth kishore - updatenews360


இதுபோன்ற உறுப்பினர் சேர்க்கையில் ஏற்கனவே ராகுல்காந்தி அரசியலில் களம் இறங்கியவுடன் காங்கிரஸ் செய்தது. ஊர் ஊராக நகரம் நகரமாக மக்களை அதிலும் இளைஞர்களை சேர்க்கும் திட்டத்தை காங்கிரஸ் மேற்கொண்டது. ஆனால், கட்சிக்கு அது எந்தவிதத்திலும் பயனளிக்கவில்லை. தொடர்ந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்தே காணப்படுகிறது. திமுகவின் துணை இல்லாமல் தேர்தலில் நிற்க முடியாத சூழலில்தான் கட்சி இருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜகவும் ‘மிஸ்டு கால்’ மூலம் உறுப்பினர் சேர்க்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது. ஆனால், மாநிலத்தில் தனியாகப் போட்டியிட்டால் நோட்டாவுடன் போட்டியிடும் கட்சியாகவே பாஜக பார்க்கப்படுகிறது. அதிமுக போன்ற வலிமையான கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் ஒரு இடத்திலும் வெற்றிபெற முடியாத நிலையில்தான் பாஜக இருக்கிறது.

karunanidhi - updatenews360

கட்சியின் தலைவராக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இருந்த நேரத்தில் தேர்தல் நெருங்கும் காலத்தில் முக்கிய பிரச்சினைகளைக் கையில் எடுத்து பல்வேறு முறைகளில் பிரச்சாரம் செய்துகொண்டிருப்பார். ஆளுங்கட்சியின் குறைகளையும் திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும் என்பதையும் மக்களிடம் கொண்டுசெல்லும் பணியை முடுக்கி விடுவார். தேர்தல் நடக்காத காலங்களில் உறுப்பினர் சேர்க்கை, மாநாடு நடத்துவது, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது போன்ற வேலைகளை கவனிப்பார். தேர்தலுக்கு ஏழு மாதங்களே இருக்கும் நிலையில் உறுப்பினர் சேர்க்கை நடத்திக் கொண்டிருக்க மாட்டார்.

உறுப்பினர்களை சேர்ப்பதின் மூலம் தேர்தலில் வெற்றிபெற முடியுமா. மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் ‘எல்லோரும் நம்முடன்’ என்ற ஐடியாவைக் கொடுத்து கட்சித் தலைவரின் கவனத்தையும், மக்களின் கவனத்தையும் திசைதிருப்பியுள்ளது ஐ-பேக் நிறுவனம் என்று உடன்பிறப்புகள் அதிருப்தியில் உள்ளனர்.
கட்சியின் உறுப்பினர் கார்டு திமுக ஆட்சிக்கு வந்தால், அதிகாரத்தில் தலையிடவும் சலுகைபெறவும் மட்டுந்தான் பயன்படும். தேர்தலில் கட்சி வெற்றிபெற அது எவ்வாறு பயன்படும். சேர்த்த உறுப்பினர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இதுபோன்ற எந்த அமைப்பும் இல்லாமலே, திமுக மகளிர் அணித்தலைவர் கனிமொழி இந்தி எதிர்ப்பானாலும், தூத்துக்குடி தந்தை-மகன் கொலை வழக்கானாலும் ட்ரெண்ட் உருவாக்கி வரும் நிலையில், ஸ்டாலினுக்கு அதுபோல் எந்த உருப்படியான ஐடியாக்களையும் ஐ-பேக் பிரசாந்த் கிஷோர் தருவதில்லை என்று ஏற்கனவே திமுகவினர் கடுப்பில் உள்ளனர். சமூக ஊடகங்களும், காட்சி மீடியாக்களும் பல இருக்கும் சூழலில் நாட்டில் பரபரப்பைப் பற்றவைக்கும் அளவுக்கு எந்த யோசனையையும் ஐ-பேக் ஸ்டாலினுக்குத் தரவில்லை. கட்சிக்குள் வரம்பு மீறித் தலையிடுவதாக மூத்த தலைவர்கள் பலர் வருத்தத்திலும் கோபத்திலும் இருப்பதுதான் மிச்சம்.

அண்மையில் வேட்பாளர் தேர்வு குறித்து பல பகுதிகளில் ஐ-பேக் குழுவினர் கட்சிக்காரர்களைத் தொடர்புகொண்டு பேசியிருப்பதும், தலைவர்களுக்கும் ஸ்டாலினுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. ஐ-பேக் ஊழியர்கள் சிலர், வட்டச் செயலாளர் மட்டத்தில் பேசியிருக்கிறார்கள். தொகுதியில் செல்வாக்கான நபர், எந்தப் பகுதியில் எந்தச் சாதிக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள், உட்கட்சிப் பூசல்கள், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று அவர்கள் விசாரித்துள்ளார்கள்.

Prasanth Kishore 02 updatenews360

கட்சியின் வேட்பாளரையே ஐ-பேக்தான் முடிவு செய்கிறது என்ற எண்ணத்தையும் இந்த விசாரணை உருவாக்கியுள்ளது. தொகுதி நிலவரங்களை விசாரிக்கச் சொன்னால் கட்சியினரிடம் வேட்பாளர் தேர்வு பற்றி எப்படிப் பேசினார்கள் என்று ஸ்டாலின் கொந்தளித்ததாகத் தெரிகிறது.

கோடிகளில் வாங்கிக்கொண்ட ஐ-பேக் டீம் கொடுத்த ‘ஒன்றிணைவோம் வா’ நிகழ்ச்சியில் மக்கள் ஒன்றிணைவதற்குப் பதிலாக கொரோனாதான் ஒன்றிணைந்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் உருப்படியான ஐடியாக்களைத் தராமல் இப்போதுதான் கட்சி உறுப்பினர் சேர்க்கை ஆலோசனையை அளித்து மீண்டும் சொதப்பியுள்ளது ஐ-பேக் என்று உடன்பிறப்புகள் விரக்தியில் இருக்கின்றனர்.

Views: - 73

0

0