திமுகவை பயமுறுத்தும் வடமொழி பெயர்கள்…? திணறும் திமுக… அதிர்ச்சியில் உறைந்த அமைச்சர்..!

Author: Babu Lakshmanan
12 October 2022, 5:00 pm
Quick Share

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, முதல்முறையாக யாருக்கும் வராத ஒரு வித பயம் அமைச்சர் அன்பரசனுக்கு மட்டும் திடீரென வந்துள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் சூட்டும் பெயர்கள் தொடர்பான பதற்றம்தான் அது.

இதற்காக அவர் பெரிதும் ஆதங்கப்பட்டு மனம் குமுறியும் இருக்கிறார். அவர் பேசிய இடம் பொருத்தமானது என்றாலும்கூட, சொன்ன விஷயம் தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரும் பேசு பொருளாகவும் மாறிவிட்டது.

பெயர் வைக்க கோரிக்கை

இரு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது கர்ப்பிணிகளுக்கு நலுங்கு வைத்து ஆரத்தி எடுத்து சீமந்த விழாவும் நடத்தப்பட்டது.

பின்னர் அவர்கள் மத்தியில் அமைச்சர் பேசும்போது, ஒரு நூதனமான கோரிக்கையையும் வைத்தார். “கருவுற்ற தாய்மார்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். முன்பெல்லாம் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டி உள்ளனர்.

அந்த பெயர்கள் எல்லாம் கடவுள் பெயர்களாகவோ, அழகான தமிழ் பெயர்களாகவோ இருந்துள்ளது. ஆனால் தற்போது வடமொழி கலந்த பெயரையோ அல்லது புரியாத பெயரையோ வைக்கின்றனர். எனவே இனி பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சமீபத்தில் ஒரு தொடக்கப்பள்ளியில் நோட்டு, புத்தகம் கொடுக்க சென்றேன். அங்கிருந்த சுமார் 50 மாணவர்களிடம் பெயரைக் கேட்டேன். 4, 5 பேரை தவிர மற்ற அனைவரும் அஸ், புஸ்ஸூனு தான் பெயர் வைத்துள்ளனர். தமிழ் பெயரே கிடையாது.

அதனால் வீட்டுக்காரன் சொன்னாலும் கேட்காதே, மாமியார் சொன்னாலும் கேட்காதே, நேரா ஒரு ஜாதகக்காரன் கிட்ட போய் பெயர் வைத்துக்கொடு என கேட்காதே, அவன் முதல் எழுத்தை தமிழ் இல்லாத ஒரு மொழியில் வை என சொல்வான். அதையெல்லாம் கேட்காதீர்கள். நல்ல தமிழ் பெயரை சூட்டி வலுவாக, அறிவுள்ளவர்களாக வளர்த்து, இந்த நாட்டின் தூண்களாக வளர்த்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார்.

திருமாவளவன்

அமைச்சர் அன்பரசன் மட்டுமல்ல திமுகவின் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கும் இதே அதிருப்தி உள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், அவர் பேசும்போது, “இன்று நிறைய குழந்தைகளின் பெயர்களுக்கான பொருளே எனக்கு தெரியவில்லை. நிறைய பேர் என்னிடம் வந்து குழந்தைகளைக் கொடுத்து, தமிழ் பெயர் சூட்டச் சொல்கிறார்கள். நானும் தமிழ் பெயரை சூட்டி விடுவேன். நான்கைந்து ஆண்டுகள் கழித்து, அந்த குழந்தை வளர்ந்த பின்னர், அந்த குழந்தையிடம் பெயரைக் கேட்டால், வேறு பெயரைச் சொல்கிறது.

Thirumavalavan - Updatenews360

பெற்றோர்கள் கூட்டத்தில் அடித்து பிடித்து, குழந்தையை என்னிடம் கொடுத்து நீங்கள் பெயர் வைத்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தி தமிழ் பெயர் வைக்க சொல்லிவிட்டு, பின்னர் சான்றிதழில் வேறு பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். கட்சியில் முன்னணி பொறுப்பில் இருப்பவர்கள் கூட இப்படி நடந்து கொள்வதுதான் வேதனையாக இருக்கிறது.

இதனால் எனக்கு பெயர் சூட்டும் ஆர்வமே போய்விட்டது. நான் வைக்கும் பெயரை நீங்கள் வைக்க மறுக்கிறீர்கள். அப்புறம் ஏன் என்னை கட்டாயப்படுத்தி பெயர் வைக்கச் சொல்லி, என் நேரத்தை வீணடிக்கிறீர்கள்” என்று திருமாவளவன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழ் பெயர்

“கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகவே தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதில் தமிழர்களிடம் மாறுபட்ட சிந்தனை உருவாகிவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து குடும்பத்தினர் அனைவரிடமும் அது தொடர்ந்து வெளிப்பட்டும் வருகிறது. அதை இப்போதுதான் தெரிந்து கொண்டது போல அமைச்சர் அன்பரசனின் வேண்டுகோள் இருக்கிறது” என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளுக்கு பெயர்கள் சூட்டும்போது வடமொழி எழுத்தோ, பெயரோ வந்துவிடக்கூடாது, என்று அமைச்சர் ரொம்பவே ஆதங்கப்படுகிறார்.

குறிப்பாக வடமொழி எழுத்துக்களான ஸ், ஜ, ஸ்ரீ போன்றவற்றை பெயரின் தொடக்கத்திலேயே, முடிவிலேயோ வைக்கக்கூடாது என்று அமைச்சர் அறிவுரை வழங்குவதுபோல இருக்கிறது.

கடந்த 35 வருடங்களில், அரசு பள்ளிகளுக்கு இணையாக மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதும் பெயர் சூட்டுவதன் திசை மாற ஒரு காரணம். இந்தப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பவர்களிடம்தான், முதன் முதலில் வடமொழிப் பெயர்களை சூட்டிக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. இப்போது அரசுப் பள்ளிகளிலும் அதைப் பார்க்க முடிகிறது.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், திமுகவில் உள்ள வசதி படைத்த இந்து குடும்பத்தினரில் பெரும்பாலானவர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக சமஸ்கிருத பெயர்களையும், இந்து தெய்வங்களின் பெயர்களையும் ஜோதிடர்கள் கணித்து தருவதன் அடிப்படையில்தான் வைக்கிறார்கள்.

anna arivalayam- updatenews360

மேலும் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போது, ஆங்கில எழுத்து வரிசைப்படிதான் அமையும் என்பதால் அதற்கேற்ப பெயர்களை சூட்டுபவர்களும் உண்டு. இன்னும் சிலர் தங்களின் சமூக பிரிவு என்ன என்பது மற்றவர்களுக்கும், பொது இடங்களில் வெளிப்படையாக தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவும் இப்படி பெயர்களை சூட்டுகின்றனர்.

சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பெயர்கள் ஃபேஷனாகவும், மாடர்ன் ஆகவும் இருக்கவேண்டும் என்பதற்காக சமஸ்கிருதத்தில் உள்ள இந்து தெய்வங்களின் பெயர்களையும், புராணங்கள், இதிகாசங்களில் காணப்படும் அபூர்வ பெயர்களையும் வைக்கிறார்கள். இந்தப் பெயர்கள் அனைத்திற்குமே நல்ல அர்த்தமும் உண்டு. எனவே இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. மேலும் இது அவரவர் விருப்பம், தனிப்பட்ட உரிமை சார்ந்த விஷயம். இப்படித்தான் பெயர் வைக்கவேண்டும் என்று யாரையும் ஒருவர் கட்டாயப்படுத்த முடியாது.

தவிர ஜோதிடம் பார்த்து பெயர் வைக்காதீர்கள் என்று அமைச்சர் அன்பரசன் அட்வைஸ் செய்வது ஜோதிடம் பார்ப்பதையே தவிர்க்க வேண்டும் என்று சொல்வது போல உள்ளது.

இன்று எல்லோரும் சாதி, மாதம் கடந்து நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துதான் ஒரு செயலையே தொடங்குகின்றனர். அதுவும் புதுமனை புகுவிழாவின் போது, பெரும்பாலான இந்துக்கள் கணபதிஹோமம் நடத்தாமல் குடியேறுவது கிடையாது. அதற்காக அவர்கள் ஜோதிடம் பார்ப்பதில் தவறு எதுவும் இல்லை.

தொன்று தொட்டு இருந்து வரும் இந்து கலாச்சார முறைப்படி பெயர் சூட்டுவதுதான் தமிழகத்தில் இன்று வரை நிலவி வருகிறது. இப்போது மட்டும் அதை கைவிடும்படி அமைச்சர் அன்பரசன் கூறுகிறார் என்றால் மறைமுகமாக யாருக்கோ, எதற்கோ அவர் பயப்படுகிறார். அது அவர் சார்ந்த கட்சிக்கும் இடைஞ்சலாக இருக்கிறது
என்பது மட்டும் நன்றாகத் புரிகிறது. ஒருவேளை தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஓராண்டாக பாஜக வேகமாக வளர்ச்சி கண்டு வருவதால் இப்படி சொல்கிறாரோ என்று கருதவும் தோன்றுகிறது.

இந்த நேரத்தில் அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள் என்று அமைச்சர் வலியுறுத்துவது பற்றி வலைத்தளங்களில் சிலர் கிடுக்குப்பிடி கேள்விகள் எழுப்பி இருப்பதையும் பார்க்க முடிகிறது.

‘ஸ்’டாலின்

திமுக ஆட்சியை, முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் வரை நாட்டுக்கே சிறந்த வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சி என்றே பெருமையுடன் குறிப்பிட்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது, திராவிட பெயர்களை சூட்டுங்கள் என்று அமைச்சர் ஏன் சொல்லவில்லை எனவும்,
‘ஸ்’ என்பதே வடமொழி எழுத்துதானே அது திராவிடம் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் பெயரிலேயே உள்ளதே, அதை மாற்றி தமிழில் ‘சு’ என எழுதும்படி உங்களால் அவரை கூற முடியுமா? எனவும் கேலியாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

தவிர சமீபத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ ராசா எம்பி, இந்துக்களை மிகவும் இழிவாக பேசினார். அதை இதுவரை ஸ்டாலின் வெளிப்படையாக கண்டிக்கவில்லை. அதுவே இந்துக்களிடம் ஒரு பெரிய மனக்குறையாக உள்ளது. இந்த சூழலில் இப்போது வடமொழி பெயரை வைக்காதீர்கள் என்று நேரடியாகவே அமைச்சர் கூறுகிறார்.

Stalin - Updatenews360

இதுவும் பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்தை தமிழக மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று மறைமுகமாக வலியுறுத்துவது போல உள்ளது. அதனால்தான் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் தங்களது குழந்தைகளுக்கு வடமொழிப் பெயர்கள் சூட்டி மகிழ்வதை கண்டுகொள்ளாத திமுக இப்போது திடீரென விழித்துக்கொண்டதுபோல் தெரிகிறது.

திமுகவில் 90 சதவீத இந்துக்கள் உள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பெருமையுடன் கூறி வருகிறார். எனவே அந்தக் குடும்பங்களில் தமிழ் பெயரை சூட்டி கடைசிவரை அதைப் பயன்படுத்துங்கள் என்று தமிழகத்தில் இனி திமுக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் மற்றவர்களுக்கும் அந்த எண்ணம் தானாகவே உருவாகிவிடும்” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

Views: - 369

0

0