சிறுவன் உயிரைப் பறித்த திமுக கொடிக்கம்பம்!உயிரின் விலை ரூ.1.5 லட்சம்?
Author: Udayachandran RadhaKrishnan23 August 2021, 7:01 pm
தமிழகத்தில் அரசியல், திருமண, பொது நிகழ்ச்சிகளில் கட் அவுட், பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைப்பது, தலைவர்களை வரவேற்க சாலைகளின் நடுவே கட்சி கொடிக் கம்பங்கள் ஊன்றுவது போன்றவை சர்வ சாதாரண நிகழ்வாக உள்ளது.
இந்த விளம்பர மோகம் ஒவ்வொரு ஆண்டும், ஏதாவது ஒரு விதத்தில் அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விலைமதிப்புமிக்க உயிர்களை காவு வாங்குவதும் வேதனை.
கடந்த 4 ஆண்டுகளில் இப்படி நடந்த 4 சம்பவங்கள் தமிழகத்த்தையே ஒரு உலுக்கு உலுக்குவதாக அமைந்து விட்டது.
சம்பவம் -1: 2017 நவம்பர் 25
அமெரிக்காவிலிருந்து முதல் நாள்தான் கோவை திரும்பியிருந்த ரகுபதி என்ற 32 வயது என்ஜினீயர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அதிமுக வைத்திருந்த அலங்கார வளைவு மூங்கில் மீது மோதி உயிரிழந்ததாக கூறப்பட்டது. கோவை போலீசார், லாரி மோதியதால்தான் கீழே விழுந்து அவர் உயிரிழந்தார் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சாலையில் Who Killed Rahu? என்று சில இளைஞர்கள் எழுதிவைக்க அது சமூக ஊடகங்களில் வைரலாகி, நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
சம்பவம்-2: 2019 செப்டம்பர் 12
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ கனடா செல்வதற்காக பள்ளிக்கரணையில் ஒரு தனியார் மருத்துவமனையில் தகுதித் தேர்வு எழுதினார். பின்னர் அவர் பல்லாவரம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் ரேடியல் சாலை பகுதியில் சென்றபோது அதிமுக பிரமுகர் ஒருவர் திருமண வரவேற்பிற்காக சாலை ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார்.
அதிமுக வைத்த பேனர்களால் இந்த இரு விபத்துகளும் நடந்ததாக கூறப்பட்டதால் இதை அத்தனை ஊடகங்களும் தேசிய அளவில் கொண்டு சென்றன. பல தனியார் டிவி செய்தி சேனல்கள் இதற்கு முழுக்க முழுக்க காரணம் அதிமுகதான் என்பதுபோல வரிந்து கட்டிக்கொண்டு தொடர்ந்து நாட்கணக்கில் விவாதங்களை நடத்தவும் செய்தன. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும், சமூகப் போராளிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சிலரும்
அதிமுக அரசை கடுமையாக கண்டிக்கவும் செய்தனர்.
சுபஸ்ரீ பலியானபோது சென்னை ஐகோர்ட் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், சாலை ஓரங்களிலும், சாலையின் மையப் பகுதிகளிலும் கட் அவுட்டுகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என்று கூறியிருந்தது.
அப்போது, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் பிரமாண பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். எனவே, இந்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். சட்டவிரோத பேனர்கள், கட்அவுட்டுகளை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை எங்கள் கட்சியினர் தீவிரமாக பின்பற்றுவார்கள் என்று கூறி, இந்த பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்பவம் 3: 2021 ஏப்ரல் 27
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அடுத்த மேல மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துவீரப்பன் என்பவர் மரணம் அடைந்ததையொட்டி அவரது படத்திறப்பு விழாவிற்காக, மெயின்ரோட்டில் மிகப் பிரமாண்ட பேனரை, அவருடைய மகன் ரவிச்சந்திரன் வைத்துள்ளார்
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அம்மணிபட்டு கிராமத்தைச் சேர்ந்த 55 வயது விஜயராணி, திருவோணம் அருகே உடையப்பன் விடுதியில் உள்ள சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டு, அந்த வழியாக வந்த பரமசிவம் என்பவரின் ‘பைக்’கில், ‘லிப்ட்’ கேட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்ததார். அப்போது ரவிச்சந்திரன் வைத்திருந்த பேனர், திடீரென சரிந்து பைக்கின் பின்பக்கம் இருந்த விஜயராணி மீது விழ படுகாயம் அடைந்து அவர் உயிரிந்தார்.
இதில் ஒரு வேதனை என்னவென்றால் முதல் 2 சம்பவங்களிலும் அதிமுகவை தொடர்புபடுத்தி கடுமையாக சாடிய பெரும்பாலான செய்தி சேனல்கள் 3-வது நிகழ்வை கண்டுகொள்ளவே இல்லை. இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த சில வாரங்கள் கழித்து இச்சம்பவம் நடந்ததுதான். மக்கள் ஓட்டுபோட்டு விட்டார்கள். இனி இதைப்பற்றி பேசி, விவாதித்து என்ன ஆகப் போகிறது என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டனர் போலிருக்கிறது!
சம்பவம் 4: 2021 ஆகஸ்ட் 20
கடந்த வெள்ளிக்கிழமை விழுப்புரம் அருகேயுள்ள மாம்பழப்பட்டு கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டுள்ளார்.
முன்னதாக அவரை வரவேற்க அங்குள்ள விழுப்புரம்-மாம்பழப்பட்டு சாலையில் 13 வயது சிறுவன் தினேஷ் திமுக கொடிக் கம்பங்களை சாலையில் ஊன்றிக் கொண்டிருந்தான்.
அப்போது அவன் வைத்திருந்த இரும்பு ராடு கொடிக் கம்பம் அங்கிருந்த உயர் மின் அழுத்த கம்பியில்பட்டது. இதனால் தினேஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். அவனை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட இடத்தில் கொடிக்கம்பங்கள்
ஊன்றுவதற்கு திமுக சார்பில் அனுமதி பெறப்படவில்லை என்பதுதான். மேலும் சம்பவம் நடந்து மறு நாள்தான் போலீசார் இதுபற்றி வழக்கே பதிவு செய்துள்ளனர்.
திமுக கொடிக் கம்பம் ஊன்றும் போதுதான் சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி இறந்ததை அமைச்சர் பொன்முடியும் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 1.5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, “அன்று சுபஸ்ரீக்கு ஆதரவாகப் பேசியவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?…குழந்தைகள் நல வாரியம் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு சிறுவனின் உயிர் பறிபோனதற்கு காரணமான திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.1.5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு என்பதை ஏற்க முடியாது.
இது ஒரு உயிரின் விலையை மிகக் மிக குறைத்து மதிப்பிடுவதாகும்! இதைவிட வேறு கொடுமை வேறேதும் கிடையாது” என்று குறிப்பிட்டனர்.
நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பதிவில் “கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது. கொடிக்கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களைக் காவு வாங்குகின்றன. இந்தக் கீழ்மையில் இருந்து அனைத்துக் கட்சிகளுமே விடுபட வேண்டும்” என்று மென்மையாக திமுகவை கண்டித்து இருக்கிறார்.
அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “கோவை ரகுபதியும், 2 வருடங்களுக்கு முன்பு சுபஸ்ரீயும் உயிரிழந்தபோது கொந்தளித்து தினமும் விவாதம் நடத்திய நடுநிலை ஊடகங்கள் திமுக கொடிக் கம்பம் ஊன்றப்போய் அநியாயமாய் ஒரு சிறுவன் உயிரிழந்தது பற்றி மூச்சே விடவில்லை.
தங்களை சமூகப் போராளிகள் என்று கூறிக்கொள்ளும் விசிக, கம்யூனிஸ்டுகள், நடிகர்கள் சூர்யா, விஜய், விஜய் சேதுபதி, சித்தார்த் போன்றோர் எங்கே போனார்கள் என்பதும் தெரியவில்லை.
முதலில் சிறுவனை பணிக்கு அமர்த்தியது குற்றம். தமிழகத்தில் சிறுவர்கள் மூலம்தான் பெற்றோர்கள் வருமானம் ஈட்டுகிறார்கள் என்ற நிலையோ மோசம். அதைவிட மிகக் கொடுமையானது ஒரு உயிரின் விலை 1.5 லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்திருப்பது. உண்மையிலேயே ஒரு உயிரின் மதிப்பு இவ்வளவுதானா?…
போன உயிர் மீண்டும் வரப்போவதில்லை என்றாலும்கூட 8-ம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுவன் உயர் கல்வி கற்று வேலைக்கு சென்றிருந்தால் இதைவிட பலப் பல மடங்கு அதிகம் சம்பாதித்து இருப்பானே?…இதை ஏன் அமைச்சர் பொன்முடியும், திமுகவினரும் சிந்திக்கவில்லை. இதில் சிறுவனின் உயிர், பெரியவர்களின் உயிர் என்று பாகுபாடு பார்க்க கூடாது. உயிரின் மதிப்பு எல்லோருக்கும் ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் அதை கண்டிப்பதுதான் ஊடக தர்மம்.
ஆனால் தமிழகத்தில் பல ஊடகங்கள் அப்படி செயல்படுவதாக தெரியவில்லை” என்று காட்டமாக குறிப்பிட்டனர்.
0
0