தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு மட்டுமே நீடிக்கும் போட்டி.. விருப்ப மனுவை பெற்றார் துரைமுருகன்..! பொருளாளராகிறார் டி.ஆர். பாலு…?

2 September 2020, 4:11 pm
durai murugan - tr balu - updatenews360
Quick Share

சென்னை : தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் விருப்ப மனுவை பெற்றார்.

திமுக பொதுச் செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானதை தொடர்ந்து, அப்பதவிக்கு புதிய பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு எழுந்தது. இந்தப் பதவிக்கு மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்தும் விலகினார். அதேவேளையில், கனிமொழியும் பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தி.மு.க.வின் பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்வதற்காக, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 9ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி மூலம் நடக்கிறது.

கட்சியின் அதிகாரமிக்க இரு பதவிகளை நிரப்புவதற்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் வேட்பு மனுக்கள் அளிக்கப்பட உள்ளது. இந்த இரு பதவிகளினால் கட்சிக்குள் பூகம்பம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இருந்து வரும் வேளையில், பொதுச்செயலாளர் பதவிக்கான விருப்ப மனுவை மூத்த தலைவர் துரைமுருகன் வாங்கியுள்ளார். விருப்ப மனுக்கள் விநியோகம் இன்று நடந்து வருவதால், பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டி சூடு பிடித்துள்ளது.

இதனிடையே, பொருளாளர் பதவிக்கான போட்டியில் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, எவ.வேலு மற்றும் ஆ.ராசா ஆகியோர் இருப்பதாக தகவல் வெளியாகியது. இதில், பொருளாளர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்று ஆ.ராசா தெரிவித்து விட்டார். இவரைத் தொடர்ந்து, எ.வ.வேலு ஆகியோரும் போட்டியிடப் போவதில்லை என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. இதனால், திமுக பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

Views: - 0

0

0