பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் இரட்டை வேடமா…? வாய்ப்பை நழுவ விட்ட திமுக அரசு..? சர்ச்சையில் சிக்கிய தமிழக நிதியமைச்சர்…!!

Author: Babu Lakshmanan
18 September 2021, 8:19 pm
PTR - updatenews360
Quick Share

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய், டீசல் லிட்டர் 86 ரூபாய் என்கிற அளவிற்கு கடும் உயர்வு கண்டிருந்தது. இதனால் இவ்விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டன.

நாடெங்கும் ஒலித்த பெட்ரோல், டீசல் விலை

“நாட்டில் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமே பெட்ரோல், டீசல் விலைதான். அதனால்தான் பணவீக்கமும் ஏற்படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துவோம். அதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 75 ரூபாய்க்கும், டீசல் விலையை லிட்டருக்கு 68 ரூபாய் அளவிற்கும் குறைப்போம்” என்று எதிர்க்கட்சி தரப்பில் தமிழ்நாடு,கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் மிகத் தீவிரமாக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

Petrol Price - Updatenews360

திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் ஒருபடி மேலே போய், திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது பெட்ரோல் லிட்டருக்கு விலை 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்போம் என்றும் அறிவித்தார்.

கைகோர்த்த 3 மாநிலங்கள்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், கேரளாவில் பினராயி விஜயனும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முழுக்க முழுக்க பிரதமர் மோடிதான் காரணம், மத்திய பாஜக அரசுதான் இவற்றின் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மறுக்கிறது என்று பகிரங்க குற்றச்சாட்டுகளையும் கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். காங்கிரசும் இதை தேர்தலில் பிரச்சார உத்தியாக கையாண்டது.

Mamata 5 Lakhs - Updatenews360

கடந்த பிப்ரவரி மாதம் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் மாநிலம் தழுவிய போராட்டங்களையும் நடத்தின.

இந்த பிரச்சாரம்,போராட்டம் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது மட்டுமன்றி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களிலும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் மூன்றும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் அமைந்துவிட்டது.

மாநிலத்தில் தங்களது ஆட்சி அமைந்த பின்பும் இதே கோரிக்கையை 3 கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

இந்த நிலையில்தான் 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோ நகரில் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இதற்கு முன்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்த கூட்டங்கள் எல்லாமே கொரோனா பரவல் காரணமாக காணொளி வாயிலாக நடத்தப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுக்குள் வந்த பின்பு மாநில நிதியமைச்சர்கள் நேரடியாக கலந்துகொண்ட முதல் கூட்டமாக இது அமைந்திருந்தது.

nirmala_sitharaman_updatenews360

இதனால் இந்த கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து காரசார விவாதங்கள் நடக்கும், என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் விலை குறைந்தால் அது மக்களுக்கு பெரும் நன்மை பயப்பதாக அமையும், விலைவாசியும் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பினரிடமும் எழுந்தது.

மேலும் இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில அரசுகளின் இந்த கோரிக்கை குறித்து 45-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் ஆலோசித்து சாதகமான முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

புறக்கணித்த தமிழக அரசு

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, காணொளி மூலம் நடந்த சில ஜிஎஸ்டி கூட்டங்களில் மத்திய நிதியமைச்சரை கிடுக்குப்பிடி கேள்விகளால் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திணறடித்ததாக திமுகவினர் கூறியதால், இந்த முறைநேரடி கூட்டம் என்பதால் அவர் இன்னும் ஒரு கலக்கு கலக்குவார் என்றும், நிர்மலா சீதாராமன் அவரிடம் வசமாக மாட்டிக்கொண்டு விழிக்கப்போகிறார் என்றும், தமிழகத்தின் முன்னணி செய்தி சேனல்கள் பரபரப்பு காட்டின.

Minister PTR - Updatenews360

அதனால் இந்த கூட்டம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காமல்
புறக்கணித்து விட்டார்.

பல்டி அடித்த எதிர்கட்சிகள்

இதனால் கூட்டத்தின் சுவாரஸ்யம் குறைந்து போனது. மாறாக தமிழக அரசின் சார்பில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மூலம் அவர் தனது உரையை பதிவு செய்தார்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு வரை திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன.

ஆனால் நேரடியாக அனைத்து மாநில நிதியமைச்சர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் தமிழக, கேரள, மேற்கு வங்க அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது அந்தர் பல்டி அடித்துவிட்டன.

mamata - stalin - updatenews360

இதனால் இப்போதைக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரத்தேவையில்லை என்ற முடிவு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இந்த 3 மாநில அரசுகளும் ஏன் திடீரென்று ‘யூ டேர்ன்’ அடித்தன என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அதுவும் நேரடி ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காதது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

தாமதமான அழைப்பு

ஜிஎஸ்டி கூட்டத்தை, தான் புறக்கணித்தது பற்றி தமிழக நிதியமைச்சர் கூறுகையில், “கூட்டத்திற்கான தேதி மிகத் தாமதமாக தெரிவிக்கப்பட்டது. 17-ம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் நிலையில், 10-ம் தேதிக்கு பின்னர்தான் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் என்ன மாதிரி விஷயங்கள் விவாதிக்கப் படவேண்டும் என்ற அஜெண்டா அதைவிட தாமதமாக கொடுக்கப்பட்டது. அதற்குள்ளாக நான் முன்கூட்டியே சில பணிகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே அதை ரத்து செய்து விட முடியவில்லை. உதாரணத்துக்கு… இப்போது இங்கே இருந்து நேராக ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக இருக்கிறேன். எனவே எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.

ptr - stalin - updatenews360

கடந்த ஒன்றரை வருட காலமாக காணொளி மூலமாகத்தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இன்னும் கொரோனா ஓயவில்லையே. மூன்றாவது அலை பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை இருக்கிறது. செய்தியாளர்களாகிய நீங்கள் கூட முகத்தில் முக கவசம் அணிந்து வந்திருக்கிறீர்கள். ஆனால் திடீரென்று அனைத்து மாநில நிதியமைச்சர்களும் 100 சதவீதம் நேரடியாக வருகை தந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று
10 நாட்களுக்கு முன்பாக தகவல் தெரிவிப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை”
என்று விளக்கம் அளித்தார்.

ஆனால், பொருளாதார நிபுணர்களும், அரசியல் விமர்சகர்களும் தமிழக நிதியமைச்சர் ஒரு அருமையான சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டார் என்று மனம் குமுறுகின்றனர்.

வாய்ப்பு தவறியது

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “இந்த கூட்டத்தில் நமது நிதியமைச்சர்
கலந்து கொண்டிருந்தால் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான
கருத்து வேறுபாடுகளுக்கு ஒரு தீர்வு காணப்பட்டு இருக்கும்.

நமது நிதியமைச்சர் ஒரு பொருளாதார நிபுணர். எனவே மத்திய நிதி அமைச்சரிடம்
தனது வாதத்திறமையை வெளிப்படுத்தி ஜிஎஸ்டியில் இன்னும் என்னென்ன சிறப்பான மாற்றங்களை செய்யலாம் என்று ஆலோசனை கூறி அதை நிச்சயம் ஏற்க வைத்து இருப்பார். அதன் மூலம் தமிழகத்திற்கு மட்டுமின்றி அனைத்து மாநில மக்களுக்கும் பயன் கிடைத்திருக்கும்.

அதேநேரம் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு கூறும் காரணங்களை ஏற்க முடியவில்லை. முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டதால் போக முடியவில்லை என்கிறார். அது எல்லா அமைச்சர்களுக்கும் ஏற்படக்கூடிய ஒரு சாதாரண பிரச்சினைதான். ஒருசிலரின் மகிழ்ச்சிக்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்திருக்க வேண்டிய சந்தோசத்தை நிதியமைச்சர் தவிர்த்து விட்டதாகவே தோன்றுகிறது.

TN Secretariat- Updatenews360

இன்னொரு விஷயமும் நெருடலாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர இந்த கூட்டத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வரி வருவாய் தமிழகத்திற்கு கணிசமாக குறைந்துவிடும் என்பது இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்து கொண்டிருந்தால் அதற்கான மாற்று வழியையும் எடுத்துக் கூறி இருக்கலாம். அதையும் தமிழக அரசு தவறவிட்டு விட்டது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்ட திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து செப்டம்பர் 20-ம் தேதி தமிழகத்தில் திமுக மாபெரும் போராட்டத்தை அறிவித்து உள்ளது. இது, ஒரு பிரச்சனையில் இரு வேறு நிலைப்பாட்டை திமுக கடைப்பிடிப்பதாக உள்ளது. இது நிச்சயம் பொதுவெளியில் கேலி பேசப்படும் விஷயமாக மாறும்.

ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு மாதிரியாக கூறினார்கள். இப்போது வேறு மாதிரியாக சொல்கிறார்கள். மாற்றி மாற்றி பேசுகிறார்கள். இரட்டை வேடம் போடுகிறார்கள்
என கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Views: - 278

1

0