வாக்குறுதிகளை அள்ளிவிடும்CM ஸ்டாலின்…..! சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு என்ன ஆச்சு…? கிடுக்குப்பிடியால் திணறும் திமுக அரசு!

Author: Babu Lakshmanan
21 March 2024, 8:17 pm
Quick Share

நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 36 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 தமிழக தேர்தல் ஆகியவற்றில் திமுக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இதனால் அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் திமுக அரைக்கிறது என்ற விமர்சனம் பொதுவெளியில் எழுந்துள்ளது. குறிப்பாக, “நாடு முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கப்படும்.

தமிழகத்திற்கு ‘ நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

LPG சிலிண்டர் விலை 500 ரூபாய், பெட்ரோல் விலை லிட்டர் 75 ரூபாய் மற்றும் டீசல் விலை 65 ரூபாயாக குறைக்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை நாட்கள் 100-ல் இருந்து150-ஆகவும், தினசரி ஊதியம் 400 ரூபாய் ஆகவும் உயர்த்தப்படும் போன்ற பணப்பயன் தொடர்பான கவர்ச்சிகரமான ஐந்து வாக்குறுதிகளும் திமுக வாய்ஜாலம்தான் காட்டுகிறது என்ற விவாதத்தையும் அரசியல் களத்தில் ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை திமுக 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அளித்திருந்தது. அது மட்டுமல்லாமல் 2021 தமிழக தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதுதான் முதல் கையெழுத்தாக இருக்கும் என்றும் திமுக கூறியது. அக் கட்சியின் இளைஞரணி செயலாளரும், இன்றைய விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஒரு படி மேலே போய் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும் என்று ஒவ்வொரு ஊரிலும் பிரச்சாரம் செய்தார்.

இந்த வாக்குறுதியும் 2021 தமிழகத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட பின்பும் கூட திமுக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. ஆனால் இப்போதும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்று திமுக கூறுகிறது.

2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வு செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தபோது, அத்தேர்வுக்கு ஆதரவாக வாதிட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி செய்தியாளரிடம் பேசுகையில், “நீட் தேர்வை எதிர்த்து இனி மேல்முறையீடு செய்தால் அது கடவுளிடம் மட்டுமே முடியும்” என்று அது ஒரு போதும் இயலாத காரியம் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர் ஒருவரின் மனைவியான நளினி சிதம்பரம் இப்படி கூறியதை திமுக ஒருபோதும் கண்டிக்கவில்லை. அதே கட்சியுடன்தான் இன்று திமுக தேசிய அளவில் கூட்டணி அமைத்துள்ளது.

அடுத்ததாக நாடு முழுவதும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்று திமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது. இதே வாக்குறுதியை திமுக 2021 தமிழக தேர்தலிலும் கொடுத்தது.

முதலில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் என்று கூறிவிட்டு பின்னர் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் என்று ஒரு முக்கிய நிபந்தனையையும் விதித்தது. இதனால் 2 கோடியே 20 லட்சம் குடும்பத் தலைவிகளில் ஒரு கோடியே 14 லட்சம் பேருக்குத்தான், அதுவும் இரண்டரை ஆண்டுகள் கழித்து ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை திமுக அரசு வழங்கவே செய்தது. எஞ்சிய ஒரு கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகள் அடியோடு நிராகரிக்கப்பட்டு விட்டனர்.

தற்போது இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக கூறுகிறது.

28 எதிர்கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது கடினம் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறும் நிலையில் ஒருவேளை இண்டியா கூட்டணி ஜெயித்து ஆட்சி அமைத்தாலும் கூட இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

ஏனென்றால் நமது நாட்டில் சுமார் 34 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. இவற்றில் சரி பாதியை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் கூட 17 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்றால் மாதம் 17 ஆயிரம் கோடி ரூபாயும், ஒரு ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாயும் தேவைப்படும். இந்த பணத்துக்கு எங்கே போவார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

அடுத்ததாக கல்லூரி மாணவ, மாணவிகள் கல்விக் கடன் ரத்து என்று இன்னொரு முக்கிய வாக்குறுதியை திமுக கொடுத்துள்ளது. இதே வாக்குறுதியை 2021 தமிழகத் தேர்தலிலும் திமுக தலைவர் ஸ்டாலின் அளித்தார். ஆனால் எந்த மாணவர்களின் கல்விக்கடனும் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. தமிழகத்திலேயே இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் பரிதவிக்கும் திமுக தேசிய அளவில் இதை எப்படி சாத்தியமாக்கும் என்பது தெரியவில்லை. இதனால் போகிற போக்கில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அள்ளி விடுகிறதோ என்ற சந்தேகம்தான் வருகிறது.

இதைவிட வேடிக்கை என்னவென்றால் தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலிண்டர் மானியம் மாதம் 100 ரூபாய் வழங்கப்படும் என்று 2021ல் திமுக அறிவித்தது. ஆனால் இன்று வரை அதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை.

இதனால் கடந்த 34 மாதங்களில் 3400 ரூபாய் மானியம் கிடைக்காமல் தமிழக குடும்பத் தலைவிகள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். இந்த நிலையில்தான் மத்தியில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமையும் போது நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறது. தமிழகத்தில் 100 ரூபாய் மானியம் அளிக்கப்பட்டிருந்தால் திமுகவின் இந்த வாக்குறுதியை குடும்பத் தலைவிகள் ஓரளவு நம்புவதற்கு வாய்ப்பு உருவாகி இருக்கும்.

ஆனால் இங்கேயே நிறைவேற்ற முடியாத நிலையில் இதை எப்படி தேசிய அளவில் திமுக நிறைவேற்றும் என்று இன்னொரு கேள்வியும் எழுகிறது.

அதேபோல்தான் 2021 தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் திமுக ஆட்சி அமைந்த சில மாதங்கள் கழித்து பெட்ரோல் விலை மட்டும் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. டீசல் விலை குறைப்பு பற்றி இதுவரை மூச்சே காட்டவில்லை. பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாய் குறைப்பது என்ன ஆனது என்பதும் தெரியவில்லை.

இந்த நிலையில்தான் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 75 ரூபாய், டீசல் விலை 65 ரூபாய் என நிர்ணயிக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளிக்கிறது. அதனால் இதுவும் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்குறுதியாகவே தென்படுகிறது.

மேலும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021 தமிழக தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இப்போதும் 150 நாட்கள் என அறிவித்து தினக்கூலியை
400 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் உறுதியளிக்கிறார். இதுவும் நம்பக் கூடியதாக இல்லை. ஏற்கனவே 2021ல் திமுக அளித்த கவர்ச்சி வாக்குறுதிகளை தமிழக மக்கள் மறந்திருப்பார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கருதினால் அது தப்பு கணக்காகவே முடியும். எனவே இது போன்ற வாக்குறுதிகள் திமுகவுக்கு தேர்தலில் கை கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயம்” என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுவும் யோசிக்க கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது!

Views: - 121

0

0