முதலமைச்சர் பழனிசாமி, அதிபர் டிரம்பிற்கு திமுகவில் அடையாள அட்டை : ஆன்லைன் ஆட்சேர்ப்பில் நடந்த கூத்து..!
23 September 2020, 8:24 pmசென்னை : தி.மு.க.விற்கு ஆன்லைன் மூலம் ஆட்களை சேர்த்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
தமிழக சட்டசபைக்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, தீவிரம் காட்டி வரும் அரசியல் கட்சிகள், தங்களின் கொள்கைகளையும் வெளிக்காட்டுவதற்காக, அரசின் சில திட்டங்களையும் கடினமாக எதிர்த்து வருகின்றன. அதேவேளையில், கட்சியைப் பலப்படுத்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழகத்தின் எதிர்கட்சியான தி.மு.க., ஆன்லைன் மூலம் தனது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஏறும் மேடைகளிலும், பேசும் கூட்டங்களிலும், தி.மு.க.விற்கு ஏகோபித ஆதரவு கிடைத்துள்ளது, ஆன்லைன் வழியாக மக்கள் தி.மு.க. இணைந்து வருகின்றனர் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இது அனைத்தும் நாடகமே என்பதை அம்பலப்படுத்தும் விதமாக, ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிமுகவின் அடையாளமாக இருந்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே, தி.மு.க.வில் அடையாள அட்டை போட்ட கூத்து நடந்துள்ளது.
அவரைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு தி.மு.க.வின் உறுப்பினர் அடையாளர் அட்டை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த அடையாள அட்டையில், டிரம்ப் சென்னை எழும்பூர் தொகுதியை சேர்ந்தவர் எனவும், சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைவிட உச்சகட்டமாக மற்றொரு அடையாள அட்டையில் ‘விவரமறியா வாரிசு’ என்ற பெயரிலும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவரது தந்தையின் பெயர் மலிவு அரசியல் மன்னர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இதுதான் உங்களின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையா..? என நெட்டிசன்கள் கிண்டலும், கேளியையும் செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்வுகளை எல்லாம் மிஞ்சும் அளவிற்கும், பிராமணர்களை இழிவுப்படுத்தும் விதமாகவும் தி.மு.க.வினர் செய்துள்ள செயல் தற்போது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
ஆங்கில நாளிதழ் ஒன்றில் காணவில்லை என்ற அறிவிப்புடன் இளம்பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சென்னையின் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மகள் காயத்ரி காணாமல் போய் விட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும், உயரமான, நல்ல அழகான 21 வயதுடைய மகளை காணவில்லை என்றும், அனைவரும் வருத்தத்தில் இருக்கிறோம், வீட்டிற்கு வந்து விடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், உன்னுடைய இரண்டு கோரிக்கைகளையும் குடும்பத்தினராகிய நாங்கள் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும், ஒன்று… உனக்கு பிடித்த வேலையை நீ செய்யலாம் என்றும், மற்றொன்றான… எல்லோரும் நம்முடன் என்னும் திட்டத்தின் மூலம் நமது குடும்பம் தி.மு.க.வில் இணை வேண்டும் என்ற விருப்பமும் நிறைவேறி விட்டது என தெரிவித்துள்ளனர். நாம் மட்டுமில்லாமல், அத்திம்பேர், மண்ணி குடும்பமும் தி.மு.க.வில் இணைந்து விட்டனர், எனவே சீக்கிரம் திரும்பி வா எனக் கூறி, தொடர்பு கொள்ள வேண்டிய இமெயில் முகவரியில் பார்த்தா முன்னாள் சங்கி எனக் குறிப்பிட்டு, பிராமணர்களை இழிவு படுத்தும் விதமான செய்தியை தி.மு.க.வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
தி.மு.க. வினரின் இந்த செயலுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்து மதத்திற்கு எதிரான கட்சியல்ல என அடிக்கடி மார்தட்டி வரும் தி.மு.க. ஸ்டாலின் பிறரது மதத்தையும், சமூகத்தையும் இழிவுபடுத்தி பார்க்கும் தி.மு.க.வினரை கண்டிக்காமல், ஊக்கப்படுத்தி வருகின்றாரா..? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.