ஸ்டாலினுக்கு நெருக்கமான மேலும் ஒரு தலைவருக்கு கொரோனா : தொடர்ந்து தொற்று வலையில் சிக்கும் திமுகவினர்… அதிர்ச்சியில் அறிவாலயம்..!!
25 December 2020, 5:23 pmதிமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நெருக்கமான எம்எல்ஏவான சேகர் பாபுவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மேலும் ஒரு முக்கிய தலைவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸின் பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்று பரவாமல் இருக்க, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்டதால், அரசியல் தலைவர்கள் சமூக இடைவெளியை மறந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் கேஎன் நேருவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்றைய தினம் சென்னை துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர் பாபுவிற்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திமுகவில் மேலும் ஒரு முக்கிய தலைவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்து வந்தவர் சேகர் பாபு. அதேவேளையில், அண்ணா அறிவாலயத்தில் முதல்மட்டத் தலைவராக விளங்கக் கூடியவர் கேஎன் நேரு. இவர்கள் இருவரும் ஸ்டாலினுடன் நெருக்கமானவர்களாகவே இருந்து வருகின்றனர். இப்படியிருக்கையில் இருவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது அண்ணா அறிவாலயத்தையே பீதிக்குள்ளாக்கியுள்ளது.
வயது மூப்பு கொண்டவர்களுக்கு கொரோனா எளிதில் தொற்றிக் கொண்டு, உச்சகட்ட அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால், ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அவரது மனைவி துர்கா மற்றும் குடும்பத்தினர் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
0
0