தீவிரவாத அமைப்புடன் தி.மு.க., எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பா..? தீவிரமடையும் விசாரணை..!
5 August 2020, 5:29 pmசென்னை : நில உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றதால் தி.மு.க., எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்ட வழக்கில் வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
திமுகவின் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ இதயவர்மனுக்கும், ரியல் எஸ்டேட் அதிபரான சீனிவாசனுக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுக எம்எல்ஏ இதயவர்மன் தன்னிடம் இருந்த கள்ளத் துப்பாக்கியின் மூலம் சுட்டுள்ளார். இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திமுக எம்எல்ஏ இதயவர்மனை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, நடத்திய சோதனையில் அவரது வீட்டில் துப்பாக்கிகளும், குண்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உரிமம் காலவதியான துப்பாக்கியை பயன்படுத்தி எதிர்தரப்பினரை தி.மு.க., எம்.எல்.ஏ. இதயவர்மன் சுட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், இதயவர்மனின் வீட்டில் 50க்கும் அதிகமான துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எம்.எல்.ஏ. இதயவர்மன்தான் தோட்டாக்களை உற்பத்தி செய்தாரா..?, தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா..? என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” எனக் கூறினார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், கிராம மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இதுபோன்ற நபர்களை, அந்த கிராமத்தை விட்டே ஏன் வெளியேற்றக் கூடாது, எனக் கேள்வி எழுப்பினர். அதோடு, இந்த வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான ஆவணங்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரின் மருத்துவ அறிக்கையை நாளைய தினம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.