எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவிநீக்கம்… திமுக அமைச்சரால் வெடித்த சர்ச்சை…!

Author: Babu Lakshmanan
25 March 2023, 6:02 pm
Quick Share

காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்புதான் தற்போது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் காரசாரமாக விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது.

சூரத் கோர்ட் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த 24 மணி நேரத்தில் ராகுலின் எம்பி பதவியை பறிக்கலாமா? இது ஜனநாயக விரோத செயல் அல்லவா? என்று பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கேள்விகளை கணைகளை மத்திய பாஜக அரசு மீது ஏவி வருகின்றன.

துரைமுருகன்

இப் பிரச்சனை தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்து இருக்கிறது.

பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசும்போது “கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வருகிறார்.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனச் சொன்னீர்களே, அது என்னவானது?” என்று கேள்வி எழுப்ப, அதற்கு அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் குறுக்கிட்டு, “எவ்வளவு நேரம் ஆனாலும் ஜனநாயக முறைப்படி உங்களைப் பேச விடுகிறோம். ஆனால் பேசியதற்காகவே இப்போது ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டனர். ஆனால் இங்கு அப்படி இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் பேச அனுமதிக்கிறோம்” என்று பெருமையுடன் கூறினார்.

Durai Murugan - Updatenews360

அவருடைய இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் அமைச்சர் துரைமுருகன், ராகுலின் எம்பி பதவி பறிப்பின் பின்னணி குறித்து தெரிந்துதான் பேசுகிறாரா அல்லது தெரியாமல் பேசுகிறாரா? என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.

தகுதி நீக்கம்

அதற்கு முன்பாக 2019 தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி குறித்து ராகுல் அவதூறாக என்ன பேசினார், அவருக்கு ஏன் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

கர்நாடகாவின் கோலார் நகரில் 2019 ஏப்ரல் 13-ம் தேதியன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் “ஏன் அத்தனை திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதனால் வேதனை அடைந்த குஜராத் மாநில பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, தங்கள் சமூகத்தை ராகுல் இழிவாக பேசுவதாக கூறி சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்திய குற்றவியல் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் மீது விசாரணை நடத்துப்பட்டது. 2021 ஜூன் மாதம் ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராகி, விளக்கமும் அளித்தார்.

rahul gandhi - updatenews360

சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பை வாசித்த மாஜிஸ்திரேட் வர்மா, காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றவாளி என்று தீர்ப்பளித்து இருந்தார்.

மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு, அதே மாஜிஸ்திரேட், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதனால் ராகுல் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்கவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில்தான் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்படுவதாக நாடாளுமன்ற செயலகம் அதிரடியாக அறிவித்தது. இதுதான் இந்திய அரசியலில் தற்போது ‘ஹாட் டாபிக்’காக உள்ளது.

“ராகுல் காந்தியின் எம்பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்து இருப்பது ஏற்கக் கூடிய ஒன்றுதான். அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு இருப்பதும் சரியானதுதான். ஆனால்
ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டது பற்றிதான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறதே தவிர அவர் என்ன பேசினார்? என்பதையே பெரும்பாலான தமிழக ஊடகங்கள் வெளிப்படுத்த மறந்துவிட்டன. அல்லது மறைத்து விட்டன என்பதுதான் உண்மை”என்று அரசியல் பார்வையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

“பொதுவாக எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் சாதிய உணர்வைத் தூண்டும் விதமாக பேசுவதில்லை. மீறினால் அது சட்ட ரீதியாக என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

மோடி என்பது குஜராத் மாநிலத்தில் குறிப்பிட்டதொரு சமுதாய பிரிவு ஆகும். அவர்கள் விளிம்பு நிலையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பிரிவை சேர்ந்தவர்களும் ஆவர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்திக்கு இது தெரியாமல் போய் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு, விசாரணை என்று வந்துவிட்ட பின்பும் கூட தான் ஒரு சமுதாயத்தினரை அவதூறாக பேசி விட்டோமே அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமே என்ற எண்ணம் அவரிடம் கொஞ்சமும் ஏற்படவில்லை.

ஒருவேளை 2019 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் ராகுல் அப்படி கூறியிருக்கலாம். மாறாக மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியே அமைந்துவிட்டது.

அதன் பிறகு, இந்த நான்கு ஆண்டுகளாக வழக்கு விசாரணை விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்து ராகுல் மன்னிப்பும் கேட்கவில்லை. இத்தனைக்கும் வழக்கின் தீவிரத்தை புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்கும்படி ராகுலுக்கு நீதிமன்றம் பலமுறை வாய்ப்பும் அளித்தது. ஆனாலும் அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை.

ராகுல் காந்தி ஊழலை பற்றிதான் பேசினார். அதனால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே எழவில்லை என்றுதான் அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களும் நீதி மன்றத்தில் கூறியிருக்கிறார்கள். அப்படியென்றால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, நாட்டின் பிரதமர் எனக்கு வேண்டாதவர் என்பதால் அவர் தொடர்புடைய சமூகத்தை நான் எப்படி வேண்டுமென்றாலும் பேசுவேன் அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று ராகுல் முரண்டு பிடிப்பதைத்தான் அவருடைய வாதங்கள் உணர்த்துகின்றன.

தவறான உதாரணம்

இந்த வழக்கில் மட்டுமல்ல நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரபேல் விமானங்கள் வாங்கிய வழக்கு தொடர்பான விசாரணையில் ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அதை சீராய்வு மனுவுக்கு ஏற்றுக் கொண்டபோது மோடியை திருடர் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது என்று ராகுல் பொதுவெளியில் தொடர்ந்து பேசினார். ஆனால் நாங்கள் அப்படி சொல்லவே இல்லை என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு மறுத்தது. இதற்காக ராகுல்காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் தன்னால் முடியாது என்று ராகுல் தொடர்ந்து மறுத்து வந்தார். நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்த பிறகே உச்ச நீதிமன்றத்தில் அப்போது ராகுல் காந்தி எழுத்துப்பூர்வமாக நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் முன்னதாக வாய்மொழியாக மன்னிப்பு கேட்கிறேன் என்று ராகுல் கூறியதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டதுதான்.

மோடியை அரசியல் ரீதியாக விமர்சிக்க ராகுல் காந்திக்கு மட்டுமல்ல, அத்தனை எதிர்க்கட்சிகளுக்குமே உரிமை உண்டு. ஆனால் ராகுலோ மோடியை விமர்சிப்பதாக கூறி அவர் சார்ந்த சமூகத்தினர் அத்தனை பேரையுமே இழிவுபடுத்தி பேசியதுதான் அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது.

தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நீதி பற்றி பேசி வரும் திமுகவில், அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் கூட இதை புரிந்து கொண்டதுபோல் தெரியவில்லை. ராகுல் சாதி, சமூக அடிப்படையில் பேசியதை நியாயப்படுத்தினால் நாட்டில் உள்ள எல்லா கட்சிகளுமே எதிரணி தலைவர்களை சாதிய ரீதியாக விமர்சிக்கும் மோசமான நிலைமையை ஏற்படுத்தி விடும் என்பதே நிதர்சனமான உண்மை” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Views: - 322

0

0