10 பவுன் சங்கிலியை பரிசளித்து குஷிப்படுத்த முயன்ற மேயர்… கடுப்பாகி கழற்றிக் கொடுத்த அமைச்சர் காந்தி… திமுக நிகழ்ச்சியில் பரபரப்பு..!!!

Author: Babu Lakshmanan
9 November 2022, 4:49 pm
Quick Share

கிருஷ்ணகிரி ; நிகழ்ச்சியில் 10 சவரன் தங்க சங்கிலியை ஒசூர் மேயர் அணிவித்ததை விரும்பாத அமைச்சர் காந்தி, அதனை போட்ட வேகத்திலேயே கழுத்தில் இருந்து கழற்றிக் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பாடுபட்ட திமுக நிர்வாகிகளை கவுரவிக்கும் விதமாக, டைடன் கைக்கடிகாரம் பரிசளிக்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாட்டையும் ஒசூர் மேயர் சத்யா செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார்.

திமுகவின் தேர்தல் வெற்றிக்காக படுபட்டவர்களை மேடைக்கு அழைத்து கைக்கடிகாரங்களை அமைச்சர் காந்தி வழங்கி ஊக்கப்படுத்தினார். அப்போது, 10 சவரன் தங்கச்சங்கிலியை அமைச்சர் காந்தியின் கழுத்தில் ஒசூர் மேயர் சத்யா அணிவித்தார். இதனை துளியும் விரும்பாத அமைச்சர் காந்தி, அடுத்த நொடியே தனது கழுத்தில் அணிவிக்கப்பட்ட 10 சவரன் தங்கச் சங்கிலியை கழற்றிக் கொடுத்துவிட்டார்.

பின்னர், நிகழ்ச்சி முடிந்து புறப்படும் போது, தனக்கு வசதி வாய்ப்புகள் உள்ள போது தனக்கு எதற்கு இப்படி ஒரு செயின் கொடுக்க வேண்டும் என்றும், கட்சிக்காக உழைக்கும் ஏழை எளிய நிர்வாகிகளுக்கு உதவுங்கள் என அமைச்சர் காந்தி அறிவுரை வழங்கினார்.

ஒசூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின் போது கடும் போட்டி நிலவிய நிலையில் சத்யாவை அந்தப் பதவிக்கு பரிந்துரைத்து வெற்றிபெற வைத்தவர் அமைச்சர் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 320

0

0