ED, IT ரெய்டுகளால் பீதியில் திமுக அமைச்சர்கள்! எ.வ.வேலுவுக்கு அடுத்து யார்?…

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2023, 9:42 pm
ED - Updatenews360
Quick Share

முதலமைச்சர் ஸ்டாலின், சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் “நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் உங்களை குறி வைத்து கண்டிப்பாக ரெய்டு வருவார்கள். அதனால் மிகவும் கவனமாக இருங்கள்” என்று எச்சரிக்கை விடுத்ததாக ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியானது.

அவர்களில் சிலருடைய பெயர்களையும் அப்போது ஸ்டாலின் வெளிப்படையாகவே குறிப்பிட்டார் என்றும் சொல்வார்கள்.

அவர் இப்படி கூறி நான்கு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அது உண்மைதான் என்பதுபோல நவம்பர் மூன்றாம் தேதியான இன்று காலையிலேயே ஐடி அதிகாரிகள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமாக திருவண்ணாமலையில் உள்ள பொறியியல், மருத்துவ கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள், அவருக்கு தொடர்புடைய ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள், அலுவலகங்கள், ஒப்பந்ததாரர்கள், அவருடைய உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்கள், அவர்களது வீடுகள் என சென்னை, கோவை, கரூர் ஆகிய நகரங்களிலும் 75க்கும் அதிகமான இடங்களில் திடீர் ரெய்டில் இறங்கினர்.

கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் போன்ற பிரிவுகளையும் அமைச்சர் எ.வ.வேலு கவனித்து வருகிறார் என்பதால் அது சார்ந்த ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது திமுக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் கடந்த மே மாதம் முதலே வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் அடுத்தடுத்து திமுகவின் முக்கிய புள்ளிகளிடம் திடீர் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவருக்கு தொடர்புடைய அலுவலகங்கள், கட்டுமான நிறுவனங்கள், உறவினரின் வீடுகளில் கடந்த மே மாத இறுதியில் ஐடி அதிகாரிகள் களமிறங்கினர்.

அதன் பிறகு அடுத்த மாதமே அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அரசு வேலை வாங்கித் தருவதாக ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அவரை கைதும் செய்தது.

அடுத்து அமைச்சர் பொன்முடியும், அவருடைய மகன் கவுதம சிகாமணி எம்பியும் அமலாக்கத் துறையின் பிடியில் சிக்கினர். இதையடுத்து கடந்த மாதம், இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமானவரித்துறை தீவிரம் காட்டியது. இதற்கிடையே மணல் குவாரிகளில் மணலை வெட்டி எடுத்து முறைகேடாக விநியோகம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை கடந்த இரு மாதங்களில் மாநில முழுவதும் உள்ள 32 மணல் குவாரிகளில் அதிரடி ரெய்ட் நடத்தியது. இதில் கரூரில் உள்ள இரண்டு மணல் குவாரிகளும் அடங்கும்.

இந்த ரெய்டுகள் ஏற்படுத்திய பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இன்று அமைச்சர் எ வ வேலுவின் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் வருமானவரி அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் தீவிர சோதனையில் இறங்கினர்.

அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், மதுபான ஆலைகள் போன்றவற்றில் ஐந்து நாட்கள் தொடர் ரெய்டு நடந்தது. அது போல இச் சோதனையும் ஒரே நாளில் முடிந்து விடாமல் இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம் என்கிறார்கள்.

இந்த ரெய்டுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இரண்டே இரண்டு விஷயங்கள் பின்னணியில் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியபோது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல எ. வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியிலும் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்காக மிக அதிக நன்கொடை பெறப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் முதல் காரணம்.

அதனால்தான் இந்த கல்வி நிறுவனத்தில் மாணவ- மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட கல்விக் கட்டணம் எவ்வளவு? என்பது பற்றி கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து IT அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் முறையாக வருமான வரி கட்டப்பட்டு உள்ளதா? என்பது பற்றியும் ஆய்வு செய்தனர்.

அதேநேரம் கட்டுமான நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை
ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதற்கு அண்மையில் மணல் குவாரிகளில் ED நடத்திய சோதனையில் சிக்கிய ஆதாரங்கள் பின்னணியாக இருக்க வாய்ப்பு உண்டு.

ஏனென்றால் இரண்டு லட்சம் யூனிட் மணல் வரை சட்டவிரோதமாக அள்ளப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுவதால் அந்த மணல் அனைத்தும் கட்டுமான நிறுவனங்களுக்கும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் ஒரு மாதத்தில் மட்டும் பல நூறு கோடி ரூபாய் ஸ்வாகா செய்யப்பட்டு இருக்கலாம், அத்துடன் வரிஏய்ப்பும் பெருமளவில் நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதை ED அதிகாரிகள் வருமானவரித்துறையினரிடம் நிச்சயம் பகிர்ந்து கொண்டிருப்பார்கள்.

மேலும் எந்த சோதனை என்றாலும் கரூரிலும் சேர்ந்தே நடப்பது ஆச்சரியம் தருவதாக உள்ளது. அதனால் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை மீண்டும் குறி வைப்பதற்காக கூட இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கலாம்.

இந்த சோதனைகளின்போது ஏராளமான ரகசிய டிஜிட்டல் ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. என்றபோதிலும் அவர்கள் சோதனையை முழுமையாக முடித்துவிட்டு அது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும்போதுதான் எவ்வளவு வரிஏய்ப்பு நடந்தது, கணக்கில் வராத பணம் எவ்வளவு பிடிப்பட்டது என்பதெல்லாம் தெரியவரும்.

“ITயும், EDயும் இப்படி திமுக அமைச்சர்கள், எம்பிக்களை குறி வைத்து அடிக்கடி ரெய்டு நடத்துவதற்கு என்ன காரணம் என்பது வெளிப்படையாகவே தெரிந்த ஒன்றுதான்” என டெல்லி அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

“ஏனென்றால் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவில் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், அமைச்சர் உதயநிதியும் ஒரு ஆண்டில் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்து விட்டு அதை எப்படி வெள்ளைப் பணமாக மாற்றுவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று வெளியான தகவல்தான் தற்போதைய எல்லா சோதனைகளுக்கும் அஸ்திவாரம் போல் அமைந்துள்ளது.

அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 82 லட்சம் ரொக்கமும்,13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கியது. மேலும் பல வங்கிகளில் வைப்புத் தொகையாக அவர் போட்டு வைத்திருந்த 42 கோடி ரூபாயை அமலாக்கத்துறை முடக்கவும் செய்தது. தவிர அவருடைய மகன் கவுதம சிகாமணி, வெளிநாட்டில் சட்டவிரோதமாக 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதையும் கண்டுபிடித்தது.

ஜெகத்ரட்சகன் எம்பியின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது
32 கோடி ரூபாய்க்கு கணக்கில் காட்டப்படாத ரொக்கமும், 28 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் அவர் நடத்தி வரும் 70க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் 1250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரிய வந்தது.

இப்படி அடுத்தடுத்து மூன்று அமைச்சர்கள் இரண்டு எம்பிக்கள் அமலாக்கத்துறை, வருமானவரித்துறையினரின் சோதனையில் சிக்கி இருப்பதால் திமுகவின் சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், கே என் நேரு மற்றும் மூர்த்தி, சிவசங்கர் ஆகியோர் சற்று கலக்கத்தில் இருப்பார்கள் என்பது நிச்சயம். ஏனென்றால் இவர்கள் நால்வரும்தான் அடுத்த இலக்காக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

சரி, இப்படி ரெய்டுகள் நடத்தப்படுவதால் எதை சாதித்து விட முடியும் என்ற கேள்வி எழலாம். அரசியல் ரீதியாக பார்த்தால் தென் மாநிலங்களில் இண்டியா கூட்டணிக்கான 2024 தேர்தல் செலவுகளை பார்த்துக் கொள்வதாக திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

மேலும் பணப்புழக்கம் அதிகம் கொண்ட பொதுப்பணி துறையை அமைச்சர் ஏ வ வேலு
தன் கையில் வைத்திருப்பதால் அதன் வழியாக சில ஆயிரம் கோடி ரூபாய்களை சட்டவிரோதமாக சம்பாதிக்க முடியும் என்ற வாதமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான். இப்படி ஒட்டுமொத்தமாக பார்த்தால் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை தேர்தல் செலவுக்காக திமுகவால் திரட்டி விட முடியும் என்கிறார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், கடந்த ஐந்து மாதங்களாக தலைமறைவாக இருப்பதால் அவர் மூலம் டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூல் என்பது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இன்றளவும் உள்ளது. அசோக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்து விட்டால் மேலும் சில ஆயிரம் கோடி ரூபாய்களை முடக்கி விட முடியுமாம்.

வரி ஏய்ப்பு செய்தவர்கள், சிறைத் தண்டனையில் இருந்து தப்பிக்க வருமானவரித் துறை விதிக்கும் அதிகபட்ச அபராதத்தை எப்படியும் கட்டிவிடுவார்கள். அது 3 ஆயிரம் கோடியாக இருந்தாலும் சரி 4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தாலும் சரி.

அதேநேரம் இந்த வரி ஏய்ப்பை உரிய நேரத்தில் கண்டுபிடிக்காமல் போயிருந்தால் இந்தப் பணம் எல்லாம் திமுகவின் தேர்தல் செலவுக்கு போய் சேர்ந்திருக்கும் என்று கூறுவதை நம்புவதற்கு இடம் உண்டு.

முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் நாங்கள் சோதனைகளை மேற்கொள்கிறோம். இதில் அரசியல் ரீதியான காரணங்கள் எதுவும் கிடையாது என்று EDயும், ITயும் கூறினாலும் கூட இந்த சோதனைகளால் நன்மைகளும் உண்டு.

ஏனென்றால் இன்னும் சில மாதங்களுக்கு அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை எளிதில் யாராலும் கொள்ளையடிக்க முடியாது. இதனால் தேர்தல் செலவு செய்வதில் ஆளும் கட்சியால் தாராளம் காட்ட முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை 85 சதவீதம் வரை தடுத்து விடவும் முடியும்” என்று அந்த டெல்லி அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதுவும் ஏற்கக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது!

Views: - 264

0

0