அடிக்கடி வருத்தம், அமைச்சர்களுக்கு என்ன ஆச்சு…? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் சங்கடம்..!!!

Author: Babu Lakshmanan
6 December 2021, 4:50 pm
Quick Share

சமீபகாலமாக தமிழக அமைச்சர்களும், அவர்களது உதவியாளர்களும் சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசிவிட்டு, பின்பு அதற்காக வருத்தம் தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது.

துரைமுருகன்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவின் முன்னணி தலைவர்களான துரைமுருகன்
கே.என்.நேரு போன்றவர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒருமையில் பேசியதாக கூறப்பட்டது. அது சர்ச்சையாக மாறிய பின்பு, இருவரும் வருத்தம் தெரிவித்தனர்.

DuraiMurugan Support -Updatenews360

கொரோனாவுக்காக முக கவசம் அணிந்து இருந்ததால் தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று துரைமுருகன் அப்போது விளக்கமும் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு திமுகவின் முன்னணி தலைவர்களில் பலர் அமைச்சர்களாகவும் ஆனார்கள். என்றபோதிலும் சில அமைச்சர்கள் தவறுதலாக பேசிவிட்டு பின்னர் வருத்தம் தெரிவிப்பது, அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளாக மாறி உள்ளது.

ஒருமையில் பேச்சு

அண்மையில் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாகக் கேட்ட ஒரு கேள்விக்கு, மதுரை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசனை பொதுவெளியில் ஒருமையில் பேசியதாக ஒரு பெரும் சர்ச்சை வெடித்தது.இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதனால் அவருடைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

Kn nehru - updatenews360

மார்க்சிஸ்ட் தலைமையும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் நேரு, தனது ட்விட்டர் பதிவில் “நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனிமேல் அவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்”என்று பதிவிட்டிருந்தார்.

இந்த அதிர்வலை ஓய்ந்த நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு அமைச்சரான அன்பில் மகேஷ் ஒரு விவசாயியை ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவியது.

அங்கிட்டு போய்யா!

தனது திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட திருநெடுங்குளம் என்னும் கிராமத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை நிலத்திற்கு தள்ளி நின்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்துகொண்டிருந்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் அப்பகுதி விவசாயி ஒருவர் “வெள்ள பாதிப்புகளை வயல்வெளிக்குள் இறங்கிப் பாருங்கள். அப்போதுதான் சேதம் முழுமையாக தெரியும்” என்று கேட்டுக் கொண்டார்.

அதைக் கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், “ஏய்… அங்கிட்டு போய்யா!” என ஒருமையில் அந்த விவசாயிடம் கூறியதாக தெரிகிறது. ஆனாலும் அந்த விவசாயி விடாமல் பதிலுக்கு “நானும் விவசாயிதான்” என்று கூறினார். அதனால், எரிச்சலடைந்ததாக கூறப்படும் அமைச்சர் அந்த விவசாயியைச் சிறிது நேரம் முறைத்து பார்ப்பதுபோல் நின்றார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ், வருத்தம் தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நான் மக்களிடமும், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அந்த விவசாயி என்னுடைய வயலையும் வந்து பாருங்கள் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தார். அந்த நேரத்தில் நான் அப்படி பேசியது என்பது வருந்தத்தக்கது. அதுபோல நான் பேசியிருக்கக் கூடாது. அந்த விவசாயியின் நிலம் ஐந்து ஏக்கர் உட்பட 80 ஏக்கர் வயல்வெளி பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் பெற்றுத் தரவேண்டியது அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய கடமை” என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

தொற்று தடுப்பு மீறல்

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியமும், தனது ஒரு செயலுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் பஸ்சில் ஏறி ஆய்வு மேற்கொண்டபோது அவர் கொரோனா தற்காப்புக்காக
உபயோகிக்கும் முக கவசம் அணியாமல் இருந்தார். அதுமட்டுமின்றி முக கவசம் அணியாத நிலையிலேயே பயணிகளிடம் கொரோனா தடுப்பூசி குறித்து கலந்துரையாடவும் செய்தார்.

இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. சுகாதாரத்துறையை தன்வசம் வைத்திருக்கும் ஒரு அமைச்சரே, முகக் கவசம் அணியாமல் பயணிகளை சந்தித்ததை என்னவென்று சொல்வது என்று நெட்டிசன்கள் அமைச்சரை கலாய்த்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து தனது செயலுக்காக அமைச்சர் சுப்பிரமணியமும் தன்னிலை விளக்கம் அளித்து வருத்தம் தெரிவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார். அவர் கூறுகையில், “காலையில் ஓட்டப் பயிற்சியில் இருந்ததால் மாஸ்க் அணியவில்லை. அதனால் அப்படியே பஸ்சில் ஏறி பயணிகளிடம் பேசினேன். இந்த செய்தி பத்திரிகையிலும் வந்துள்ளது. இருந்தாலும் மாஸ்க் அணியாமல் கவனக்குறைவாக பேருந்தில் ஏறியது தவறுதான்” என்று குறிப்பிட்டார்.

வருத்தங்களால் கவலை

“அமைச்சர்கள் இதுபோல் ஏதாவது ஒன்றை செய்துவிட்டு, அதற்காக வருத்தம் கேட்பது, தொடர்கதையாகி விட்டது.

தேர்தலுக்கு முன்பு, திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. அதனால் அக்கட்சியினர் சர்ச்சைக்குரிய விதத்தில் ஏதாவது பேசினால் அது பரபரப்பான விஷயமாக பார்க்கப்படவில்லை. ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்து 7 மாதங்கள் ஆகிவிட்டது.

அதனால் முன்பை விட அவர்களுக்கு தற்போது பொறுப்பு அதிகம். எனவே என்ன பேசுகிறோம் என்பதை நிதானித்து, யோசித்து பொதுவெளியில் பேச வேண்டும். இல்லையென்றால் திமுகவினரே இப்படித்தான் என்று கருதக் கூடிய மனநிலை மக்களிடம் உருவாகி விடும்” என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அமைச்சர்கள் மட்டுமின்றி அமைச்சர்களின் உதவியாளர்களும் ஏடா கூடமாக எதையாவது செய்து விட்டு, அதற்காக மன்னிப்பு கேட்கிறார்கள். இதுவும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் இது அமைச்சர்களின் இமேஜை நேரடியாக பாதிக்கும்.

வருத்தம் தெரிவிப்பதும், மன்னிப்பு கேட்பதும் பெருந்தன்மையான விஷயம் என்றாலும் கூட அடிக்கடி கேட்டால் அதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

பஸ்சில் பயணிகள் முக கவசம் அணியாமல் பயணம் செய்வதை பார்த்து கோபம் அடைந்த தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பஸ்சுக்குள் ஏறி உங்களுக்கு அறிவில்லையா?நீங்கள் படித்தவர்கள்தானே; முகக்கவசம் அணியாமல் தைரியமாக வெளியே வருகிறீர்கள், வெட்கமில்லையா? மற்றவர்களின் உயிர்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை கிடையாதா? என்றும் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக பஸ் பயணிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

ஆனால் அதே நாளில் சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சரோ முக கவசம் அணியாமல் பஸ்சுக்குள் ஏறி பயணிகளிடம் கலந்துரையாடுகிறார். நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும்போது முக கவசம் அணிந்தால் மூச்சுத்திணறும் என்பது உண்மைதான். அதற்காகவே அமைச்சர் முக கவசம் அணியாமல் இருந்திருக்கிறார் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

ஆனால் முகக் கவசம் அணியாமல் பஸ்சுக்குள் ஏறி ஆய்வு செய்தால், அமைச்சரே அரசின் விதிமுறைகளை மதிக்கவில்லை என்கிற எண்ணம்தான் பயணிகளிடம் தோன்றும். எனவே ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்காக எந்த வகையில் நாம் ஆயத்தமாக வேண்டும் என்பதைத்தான் முதலில் மனதில் கொண்டு வரவேண்டும். அப்படி செய்தால் பொதுவெளியில், யாரையும் ஒருமையில் பேசும் எண்ணமும், சிந்தனையும் வரவே வராது.

எல்லோரையும் சமமாக பாவிக்கவேண்டும், மனிதர்கள் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. தெரிந்தோ, தெரியாமலோ யாரையும் காயப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் வந்து விட்டாலே, வாய் தவறிக்கூட ஒருமைச் சொல் வராது.

இது அமைச்சர்கள், அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு மட்டுமில்லை. ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் உதவும் நற்சிந்தனை” என்று அந்த சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தினர்.

Views: - 273

0

0