நான் பாஜகவுக்கு தாவுகிறேனா…? திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பரபர அறிக்கை..!
6 August 2020, 7:18 pmசென்னை: திமுகவிலிருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது என்று எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
இப்போது திமுக தலைமையை குறை சொல்லி முகாம் தாவ தயராகும் காலம் போல. முதலில் விபி துரைசாமி திமுகவுக்கு எதிராக கொடி பிடித்தார். பாஜகவில் ஐக்கியமாகி தமிழக பாஜக துணை தலைவர் பதவியை பெற்றார்.
அடுத்து, ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் திமுகவை எதிர்த்து குரல் கொடுத்து, பாஜகவில் இணைய உள்ளார். அவரை கட்சியில் இருந்து திமுக சஸ்பென்ட் செய்துள்ளது. தொடரும் இதுபோன்ற அதிருப்தி குரல்களால் திமுக தலைமை செமத்தியாக அதிர்ந்து போயிருக்கிறது.
ஸ்டாலின் தலைமைக்கான தோல்வியே இது என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, திமுகவில் இருந்து மேலும் முக்கிய எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜகவுக்கு தாவும் மனநிலையில் உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டதாக அரசியல் களத்தில் தகவல்கள் உலா வருகின்றன.
அதில் முக்கியமான எம்எல்ஏவின் பெயராக திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளார் என்று தகவல்கள் பரவின. இது திமுகவுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருப்பதாக கூறப்பட்டது.
இந் நிலையில், திமுகவிலிருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது என்று எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த சில நாட்களாக சில சமூக விரோதிகள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். அந்த அற்பர்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டனாக, கழகத் தலைவர் தளபதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு இதய சுத்தியோடு தீவிரமாக பணியாற்றி வருவதை கழகத் தலைவர் நன்கறிவார்.
ஆகையால் என்னை கழகத்திலிருந்து தலைவரிடமிருந்தும் எவராலும் பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் இது போன்று விஷமப் பிரச்சாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது ஒருபக்கம் இருக்க… திமுகவின் முக்கிய எம்பியான ஜெகத்ரட்சகனும் பாஜகவில் ஐக்கியமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது பற்றிய எந்த தகவல்களும் இது வரை உறுதிப்படுத்தப்படவில்லை. இப்படி வரிசையாக திமுக கூடாரத்தின் முக்கிய தலைகள் இடம்பெயர்ச்சியாகும் நடவடிக்கைகள், அதுபற்றிய தகவல்களினால் ஸ்டாலின் படு அப்செட்டில் இருக்கிறார் என்று அறிவாலய தகவல்கள் கூறுகின்றன.