G SQUARE நிறுவன ரெய்டுக்கு மத்தியில் திமுக எம்எல்ஏ வீட்டிலும் சோதனை… பரபரப்பில் அண்ணாநகர் ; தொண்டர்கள் போராட்டம்!!

Author: Babu Lakshmanan
24 April 2023, 11:47 am
Quick Share

திமுக எம்எல்ஏவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதைக் கண்டித்து திமுகவினர் சாலையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜி ஸ்கொயர் என்னும் பிரபல கட்டுமான நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் செய்து வரும் இந்நிறுவனத்தில் கடந்த 2019ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதனிடையே, ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் பரபரப்பு குற்றம்சாட்டினார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், திமுக அரசு இந்நிறுவனத்திற்கு சாதகமான வேலைகளை சட்டவிரோதமாக செய்து வருவதாக குற்றம்சாட்டி இருந்தார்.

ஆனால், அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அந்நிறுவனம், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வியாபாரம் செய்து வருவதாகவும், தங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானவை என்றும் கூறியிருந்ததது.

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துபட்டு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

அண்ணாமலை ஜி ஸ்கொயர் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அண்ணா நகர் தொகுதி திமுக எம்எல்ஏ மோகன் வீட்டிலும், அவரது மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் அண்ணாநகர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் மோகன், செங்கல் வியாபாரம், கட்டுமான கற்கள் வியாபாரம் என்று பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.

இவர் கடந்த முறை தேர்தலில் போட்டியிடும் போது ஆணையத்தில் 211 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அதிகாரபூர்வமாக கணக்கு காட்டினார். இவரின் மகன் கார்த்திக் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. கார்த்திக் தற்போது ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் மேற்பார்வை பணிகளை செய்யும் நிர்வாகியாக இருக்கிறார். இதன் காரணமாக வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, வருமானவரித்துறையின் சோதனையை கண்டித்து திமுக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சாலையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.

Views: - 451

0

0