‘முடிந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்’: ஸ்டாலினுக்கு சவால் விடுத்த தி.மு.க. எம்.எல்.ஏ., கு.க. செல்வம்..!

4 August 2020, 8:19 pm
Quick Share

டெல்லி : காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலக வேண்டும் என்றும், முடிந்தால் என் மீது தி.மு.க. நடவடிக்கை எடுக்கட்டும் என அதிருப்தி தி.மு.க. எம்.எல்.ஏ., கு.க. செல்வம் சவால் விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தி.மு.க.வில் உள்கட்சி பூசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதியின் ஆதரவாளர்களுக்கே, கட்சியின் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவது அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அப்படித்தான், தி.மு.க.வின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக உதயநிதியின் ஆதரவாளரான சிற்றரசு நியமிக்கப்பட்டிருப்பதால், அதிருப்தியடைந்த தி.மு.க., எம்.எல்.ஏ. கு.க. செல்வம், பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது.

டெல்லியில் முகாமிட்டிருந்த கு.க. செல்வம், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை உண்டு பண்ணியது.

இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ., கு.க. செல்வம், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நேரடி சவால் விடுத்தார்.

அவர் கூறியதாவது :- நான் பா.ஜ.க.வில் இணையவில்லை. தொகுதி பிரச்சனை தொடர்பாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தேன். தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தியவர்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். தி.மு.க. உள்கட்சி தேர்தலை அவர் முறையாக நடத்த வேண்டும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. உடனடியாக விலக வேண்டும். முடிந்தால் தி.மு.க. என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன், எனக் கூறியுள்ளார்.

விரைவில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ. கு.க. செல்வம் மீது நடவடிக்கை எடுப்பார் என தெரிகிறது.

Views: - 7

0

0