சிற்றரசுவின் நியமனத்தால் முதல் விக்கெட் காலி : பா.ஜ.க.வில் இணையும் தி.மு.க., எம்.எல்.ஏ.!!

4 August 2020, 12:51 pm
Stalin-07-updatenews360-2
Quick Share

சென்னை : கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. இன்று பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக தி.மு.க.வில் உள்கட்சி பூசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதியின் ஆதரவாளர்களுக்கே, கட்சியின் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவது அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அவர் கட்சியின் தலைவர் மகன் என்பதால், வாய் திறக்க முடியாமல் அமைதி காத்து வருகின்றனர் திமுகவின் உடன்பிறப்புகள்.

நேரம் சாதகமாக அமையும் போது கட்சியில் இருந்து விலகி விடலாம் என்ற எண்ணத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் இருந்து வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க.வின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக உதயநிதியின் ஆதரவாளரான சிற்றரசு நியமிக்கப்பட்டார். இது தி.மு.க.வின் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை பெரிதும் எதிர்பார்த்திருந்த ஆயிரம் விளக்கு தொகுதியின் தி.மு.க., கு.க. செல்வத்திற்கு பெரும் ஏமாற்றமாகியது.

இதனால், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் தி.மு.க., எம்.எல்.ஏ., கு.க. செல்வம் இன்று மாலை பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் இன்று மாலை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் முன்னிலையில் அவர் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

திமுகவில் வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இதே முறை நீடித்தால் அக்கட்சியின் ஒட்டுமொத்த கூடாரமும் காலியாகி விடும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் அதிருப்தி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள்.

Views: - 8

0

0