தயாநிதி மாறன் கொளுத்திப்போட்ட வெடி… உச்சகட்ட பதைபதைப்பில் ஸ்டாலின்!!

Author: Babu Lakshmanan
31 March 2021, 3:37 pm
DMK cover - updatenews360
Quick Share

பெண்களை மிக இழிவாகவும், ஆபாசமாகவும் ஆ.ராசா, உதயநிதி, திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட திமுக தலைவர்கள் அண்மைக்காலமாக பேசி வருவது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் எந்தெந்த சூழலில் எப்படி பெண்களை அருவருக்கத்தக்க வகையில் பேசினார்கள், என்பதை பிரதமர் மோடியே பட்டியல் போட்டு காட்டும் அளவிற்கு, திமுகவின் நிலைமை மிக மோசமாகப் போய் உள்ளது.

இவர்கள் இப்படிப் பேசியதை திமுக தலைவர் ஸ்டாலினோ, கனிமொழியோ பெயரைக் குறிப்பிட்டு கண்டிக்காமல் எங்கேயோ நடந்த நிகழ்வுபோல், பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவித்ததும், நடிகர் ராதாரவியை இதேபோன்ற பிரச்சனை காரணமாக அதிரடி காட்டி திமுகவை விட்டு தற்காலிகமாக நீக்கியதுபோல் நடவடிக்கை எடுக்காமலும், திமுக தலைமை இன்னும் மௌனம் காத்து வருவது பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

dmk stalin - updatenews360

இந்த பிரச்சினைகளுக்கே தீர்வு காண முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் பரிதவித்து வரும் வேளையில், நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் விதமாக, அவருடைய நெருங்கிய சொந்தக்காரருமான நாடாளுமன்ற மக்களவை எம்பியுமான தயாநிதிமாறன், கோவை கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேசியபோது, ஆ.ராசா, உதயநிதி, திண்டுக்கல் லியோனி ஆகியோருக்கு இணையாக மிகவும் கொச்சையாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் மோடியையும் சம்பந்தமே இல்லாமல் தொடர்புபடுத்தி பேசி தமிழக மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்.

இத்தனைக்கும் திமுக தலைவர்கள் பேசியது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உச்சப் படுத்தியிருக்கும் நிலையில், தயாநிதி மாறன் இப்படிப் பேசி இருக்கிறார். அதனால் அவர் வேண்டுமென்றே இப்படி அவதூறாக பேசி இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இதனால் இன்னொரு பிரச்சனை உருவாகட்டும், அதன் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், அதை சந்திக்க தயார் என்பதுபோல் தயாநிதி மாறன் பேசி இருப்பதாகவே இதைக் கருத வேண்டியும் உள்ளது.

அப்படி தயாநிதிமாறன் என்னதான் சொன்னார்?

dayanidhi-maran - updatenews360

சில வருடங்களுக்கு முன்பு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “எங்களுக்கு ஜெயலலிதா மம்மி. பிரதமர் மோடி எங்களுக்கு டாடி” என்று அவர்கள் இருவரையும் பெருமைப்படுத்தும் விதமாக கூறியதை அப்படியே தயாநிதிமாறன் தவறான அர்த்தம் கற்பித்து பேசியிருக்கிறார். அதாவது ஒருவர் மம்மி, இன்னொருவர் டாடி என்றால் அவர்களுக்கு இடையே உள்ள உறவுமுறை என்ன என்பதுபோல் மறைமுக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதற்கு சாட்சியாக, “இதை நான் சொல்லவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் சொன்னார். நாம் இதைச் சொன்னால் குய்யா, முய்யா என்பார்கள்” என்று மீண்டும் தவறான அர்த்தம் கற்பிக்கும் நோக்குடன் அந்த சொற்களை கூறி முடிக்கிறார்.

பொதுவாகவே தமிழர்களிடம் ஒரு நல்ல பண்பாடு உண்டு. தங்களது வயதை விட மூத்த பெண்மணிகளை பெற்ற தாய்க்கு சமமாக பாவித்து, அம்மா என்ற கவுரவப்படுத்தி உயர்ந்த ஸ்தானத்தில் அழைப்பது வழக்கம். அது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவர்களை அம்மா என்றுதான் அழைப்பார்கள்.

indira gandhi - updatenews360

அப்படித்தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அன்னை என்று அன்பாக அழைத்தனர். நேருவை மாமா என்றும் கூறினர். அதே மாதிரித்தான் தங்களுக்கு ரோல்மாடலாக இருக்கும் மூத்த தலைவர்களையும், பெரியவர்களையும் அப்பா என்று மிகுந்த மரியாதை கொடுத்து அழைக்கும் பழக்கம் இன்றைய இளைய வயது ஆண், பெண் இருபாலரிடமும் அதிகமாக காணப்படுகிறது.

இன்னும் பலரிடம் காலம் காலமாக காணப்படும் ஒன்றாகவும் இது உள்ளது.

இதையெல்லாம் தயாநிதிமாறன் அறியாமலா இருப்பார்? ஆனாலும் அவர் குதர்க்கமான அர்த்தம் வரும் வகையில் மிகவும் கொச்சையாக பேசுகிறார். இருபெரும் தலைவர்களையும்
உயரிய ஸ்தானத்தில் வைத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொன்னதை அனர்த்தமான முறையில் அர்த்தம் கற்பிக்கிறார். தயாநிதிமாறன் பேசுவதைப்போல் எல்லோரும் அர்த்தமாக எடுத்துக் கொண்டால் பெற்ற தாய், தந்தையை தவிர, வேறு யாரையும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து அம்மா- அப்பா என்று அழைக்க முடியாத நிலைதான் ஏற்படும்.

திமுகவினர் தந்தை பெரியார் என்கிறார்கள். அப்படி என்றால் தயாநிதி மாறனின் கூற்றுப்படி அதை எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், மெத்தப் படித்தவருமான தயாநிதிமாறன் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நடிகை ராதிகா கூட கருணாநிதியை அப்பா என்றே அழைத்து இருக்கிறார். அது ஒரு மரியாதையின் அடையாளம். அன்பின் வெளிப்பாடும் ஆகும். அதை தயாநிதிமாறன் எப்படி எடுத்துக் கொண்டார் என்பது தெரியவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது பற்றி அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறும்போது, “சமூகநீதி பேசும் திமுக தலைவர்கள், மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசுவது ஏன் என்று தெரியவில்லை. இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்பதை பெண்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். எனவே, இதுபோன்ற பிரச்சினைகளுக்கு திமுக உடனடியாக நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் திமுகவின் மீதான நம்பகத்தன்மை பெண்களிடையே வெகுவாக குறைந்துவிடும். அது காலம் காலமாக தொடரவும் செய்யும்” என்று குறிப்பிட்டனர்.

தேர்தல் நேரத்தில், அதுவும் பிரச்சார கூட்டங்களில் பொது மக்களிடம் நேரடியாக பேசும்போது திமுகவினர் அனர்த்தமாகவும், குதர்க்கமாகவும் பேசுவது நிச்சயம் எதிர்மறை விளைவுகளைதான் ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறினர்.

ஏற்கனவே உதயநிதி, ஆ. ராசா திண்டுக்கல் லியோனி போன்றோர் பெண்களை இழிவுபடுத்திப் பேசியுள்ள குற்றச்சாட்டுகள் வலுப்பெற்று, தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தயாநிதி மாறனும் தன் பங்கிற்கு இப்படியொரு சரவெடியை கொளுத்தி போட்டுள்ளார்.

இது திமுகவிற்கு வைக்கப்பட்டுள்ள வேட்டு என்பது அவருக்கு தெரியவில்லை. இந்த பேச்சு வருகிற தேர்தலில் மட்டும் அல்ல. எதிர்காலத்திலும் திமுகவுக்கு கிடைக்கக்கூடிய ஒட்டுமொத்த பெண்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற ஸ்டாலின் பதைபதைப்பில் உள்ளார். ஆனால் ஏற்கனவே தாக்கம் ஏற்பட்டுவிட்டது என்னவோ நிஜம்!

anna arivalayam- updatenews360

தயாநிதி மாறனின் இந்த பேச்சை திமுக ஆதரவு ஊடகங்கள் திரை போட்டு மறைத்து விட்டன.
எனினும் ‘உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியாது’ என்பதுபோல் அவருடைய பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் எந்த ஒட்டு வேலையும், வெட்டு வேலையும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது.

ஸ்மார்ட்போன் புழக்கத்திற்கு வந்த பிறகு தமிழகப் பெண்களிடம், குறிப்பாக கல்லூரி மாணவிகள் அலுவலகம் செல்வோர், குடும்பத் தலைவிகள் 45 சதவீதம் பேர் வரை சமூக ஊடகங்களில் பரவும் அன்றாட நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார்கள்.

எனவே திமுகவினர் பெண்களை இழிவுபடுத்திப் பேசும் வீடியோ பதிவுகள் அவர்களை எளிதில் சென்றடையும் சூழல் உள்ளது. அதன் நம்பகத்தன்மை மீதும் பெண்கள் மிகக் கவனமாக உள்ளனர். ஆகையால் தயாநிதிமாறன் போன்றோர் அடக்கி வாசிப்பது அவருக்கும், அவருடைய கட்சிக்கும் நல்லது.

இதைத்தான் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் புலவரான திருவள்ளுவர்,
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்று எச்சரித்தும் இருக்கிறார்.

இதன் அர்த்தம் என்ன என்பது அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும் அறிந்த ஒன்றுதான்!

Views: - 159

1

0

1 thought on “தயாநிதி மாறன் கொளுத்திப்போட்ட வெடி… உச்சகட்ட பதைபதைப்பில் ஸ்டாலின்!!

Comments are closed.