‘புறம் காத்தது போதும்.. அகம் காக்க வா’ : கனிமொழிக்கு அமைச்சர் பதவி… திமுகவில் கிளம்பிய முழக்கம்.. அதிர்ச்சியில் அறிவாலயம்!!

Author: Babu Lakshmanan
5 January 2023, 1:21 pm
Quick Share

திமுக எம்பி கனிமொழியின் பிறந்த நாளையொட்டி நாமக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக எம்.பி.கனிமொழி தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதனிடையே, கனிமொழியின் பிறந்த நாளை திமுகவினரும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். கனிமொழியை பாராட்டி போஸ்டர்களும் ஆங்காங்கே ஒட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாமக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட துணை அமைப்பாளரும், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையைச் சேர்ந்த எம்எல்ஏ கே.மோகன் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள அந்தப் போஸ்டரில், ‘புறம் காத்தது போதும், அகம் காக்க வா.’. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, பின்புறத்தில் தலைமை செயலகம் இருப்பது போன்றும், அண்ணா, பெரியா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் அவரை இருக்கையில் அமர வைப்பது போன்றும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கனிமொழியின் மேஜையில், ‘கனிமொழி கருணாநிதி, அமைச்சர்’ எனப் பொரிக்கப்பட்டுள்ள பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், கனிமொழியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுக தரப்பில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, திமுகவில் கனிமொழி ஓரங்கட்டப்படுவதாக அரசல்புரசலாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், ஸ்டாலினுக்கு அடுத்து தலைமை பொறுப்பை உதயநிதி ஏற்பார் என்று சொல்லப்படுகிறது.

இப்படியிருக்கையில், திமுகவின் எம்பியாக இருக்கும் கனிமொழியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருப்பது, உதயநிதிக்கு போட்டியாக அவரை தமிழக அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விரும்புவதாக தெரிகிறது. இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போதுதான், கனிமொழி மீண்டும் டெல்லி அரசியலில் களம் காண்பாரா..? அல்லது ஆதரவாளர்களின் விருப்பப்படி, தமிழக அரசியலில் கவனம் செலுத்துவாரா..? என்பது தெரிய வரும்.

Views: - 386

0

0