‘எங்க பொழப்புல மண் அள்ளி போட வந்தீங்களா’ : பாட்டாளிகள் கேள்வி…. எஸ்கேப்பான தி.முக. எம்.பி.!!

Author: Babu
13 October 2020, 2:41 pm
dmk mp - updatenews360
Quick Share

100 நாள் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், திமுக எம்பி எஸ்.ஆர். பார்த்திபன் அங்கிருந்து வேகவேகமாக புறப்பட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக வயல்வெளிகளில் வேலை செய்பவர்கள், டீக்கடையில் அமர்ந்து மக்களுடன் சகஜமாக டீ குடிப்பது போன்ற செயல்களில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இது அவரின் எளிமையான தோற்றம் என திமுகவினர் கூறிக் கொண்டு வந்தாலும், இது அரசியல் விளம்பரம் என்றே ஒருபுறம் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கட்சியின் தலைவர் ஸ்டாலினின் பாணியில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடச் சென்றார் சேலம் தொகுதி திமுக எம்பி எஸ்.ஆர். பார்த்திபன். அப்போது, அங்கிருந்தவர்களிடம் நலம் விசாரித்தவாறு தனது பேச்சை தொடங்கினார்.

அந்த சமயம், அவர் எதிர்பார்க்காதவாறு, பொது மக்கள் கேள்விக் கனைகளை தொடுத்தனர். விவசாயக் கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறினீர்களே..? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு எம்பி பார்த்திபன் கூறுகையில், “விவசாயக் கடன், நகைக்கடன் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்வதாகக் கூறியிருந்தோம். இதையெல்லாம், எப்போது செய்வோம் என்று கூறினோம். ஆட்சிக்கு வந்தால் மட்டுமே செய்வோம். எனத் தெரிவித்தோம்,” எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, எம்பி தேர்தலின் போது, கடன்களை தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி அளித்து விட்டு, தற்போது வெற்றி பெற்றால்தான் அனைத்தையும் செய்வீர்களா..? எனக் கூறி அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

அப்போது, கேள்வி கேட்ட நபர்களை பார்த்து, நீங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள், உங்களுக்கு பதில் அளிக்க முடியாது எனக் கூறிக் கொண்டு, அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்ப, எழுப்ப பதிலளிக்காமல் திமுக எம்பி பார்த்திபன் புறப்பட்டுச் சென்றார்.

இதனால், ஆத்திரமடைந்தவர்கள், கொரோனா சமயத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள 100 நாள் வேலைத்திட்டத்தையும் கெடுப்பதற்காக இங்கு வந்தீர்களா..? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதையடுத்து, வந்த காரிலேயே வேகமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார் எம்பி பார்த்திபன்.

Views: - 51

0

0