ஊழியரை அடித்துக் கொன்ற திமுக எம்பி… சிபிசிஐடி வழக்குப்பதிவு : தலைமறைவானவரை தேடும் பணி தீவிரம்..!!!

Author: Babu Lakshmanan
9 October 2021, 11:26 am
DMK mp ramesh - updatenews360
Quick Share

முந்திரி ஆலை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான கடலூர் திமுக எம்பி ரமேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.வி.எஸ். ரமேசுக்கு சொந்தமான காயத்ரி முந்திரி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 20ம் தேதி வேலைக்கு சென்ற இவர், வீடு திரும்பாத நிலையில், கோவிந்தராசு தற்கொலை செய்து கொண்டதாக திமுக எம்பி ரமேஷின் உதவியாளரிடம் இருந்து தகவல் வந்துள்ளது.

இதனால், அதிர்ந்து போன குடும்பத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, கோவிந்தராசுவின் உடல் முழுவதும் காயங்களும், இரத்தக் கரைகளும் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். மேலும், திமுக எம்பி டி.ஆர்.வி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், ஆலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் சேர்ந்து கோவிந்தராசுவை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளி கோவிந்தராசுவின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரத்தில் உரிய நீதியைப் பெற்றுக் கொடுக்காமல் ஓய மாட்டேன் எனத் தெரிவித்து வந்தார்.

இதனிடையே, கோவிந்தராசுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோரிக்கையை ஏற்று ஆணை பிறப்பித்தனர். அதன்படி, ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

மேலும், முந்திரி ஆலை தொழிலாளர்களிடம் அளித்த வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகளும் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தது. இதனைத் தொடர்நது சிபிசிஐடி போலீசார் ஊழியர்கள் 5 பேரை கொலை வழக்கில் கைது செய்தனர். எம்.பி ரமேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்பி ரமேஷ் தலைமறைவாகியிருக்கும் நிலையில் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடலூர் திமுக எம்பி ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி கம்பெனியில் ஊழியர் கோவிந்தராஜ் மர்ம மரணம் அடைந்த வழக்கில் எம்பி யின் ஊழியர்கள் 5 பேரை கைது செய்தனர் சிபிசிஐடி போலீசார். எம்பி ரமேஷ் தலைமறைவாகியிருக்கிறார். அவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 376

0

0