‘மாட்டு சிறுநீர்’ சர்ச்சை… பயந்து நடுங்கிய CM ஸ்டாலின் ; இந்து மதத்தை தொட்டால் இனி இதுதான் கதி ; பாஜக பதிலடி..!

Author: Babu Lakshmanan
6 December 2023, 11:17 am
Quick Share

கௌமுத்ரா சர்ச்சை தொடர்பாக திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது குறித்து பேசிய திமுக எம்பி செந்தில் குமார், பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களை மாட்டு கோமியம் என்பதை பொருள் கொள்ளும் விதமாக, கௌமுத்ரா எனக் குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்தப் பேச்சுக்கு பாஜக, காங்கிரஸ் என தேசிய அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார். இதனை அறிந்த கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அறிக்கை ஒன்றை செந்தில்குமார் வெளியிட்டு உள்ளார். செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில், “முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை.

அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று சொல்லி இருக்கிறார். பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டிய கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் அனைவரும் முறையாகப் பின்பற்றியாக வேண்டும். மேலும், அகில இந்தியப் பிரச்சினைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ் பாரதியின் இந்தப் பதிவை சுட்டிக்காட்டிய பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, எதற்காக இப்போது கண்டித்தார் உங்கள் தலைவர் ஸ்டாலின் அவர்கள்? அந்த நபர் தொடர்ந்து இதே போன்ற கருத்துக்களை பிப்ரவரி 3, 2002 , மே 2013, 2, ஆகஸ்ட்,2022 ஆகிய நாட்களில் குறிப்பிட்ட போதெல்லாம் ஏன் கண்டிக்கவில்லை?,எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஓ!! இப்போது மூன்று மாநில தேர்தல்களில் சனாதன தர்மம் (ஹிந்து மதம்) குறித்து உங்கள் தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட கருத்துக்களை மக்கள் எதிர்த்து உங்கள் INDI கூட்டணிக்கு எதிராக வாக்களித்து உங்கள் கூட்டணியை புறமுதுகிட்டு ஓடச் செய்ததன் விளைவாக பயந்து, அச்சப்பட்டு மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கிறீர்கள்? ஆனால், தி மு க மற்றும் INDI கூட்டணி ஹிந்து விரோத கூட்டணி என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். உள்நோக்கத்துடன் மட்டும் அல்ல, வன்மத்துடன் தொடர்ந்து பல காலங்களாக தி மு க வலியுறுத்தி வரும் கருத்தை தான் திமுக எம்பி செந்தில்குமார் கூறியிருக்கிறார் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும்.

ஓட்டுக்காக பயந்து போய் இப்போது உங்கள் கட்சியிடம் இல்லாத கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு ஆகியவற்றை இருப்பது போன்ற மாயையை உருவாக்க முயற்சிக்க வேண்டாம். ஐயா ஆர்எஸ் பாரதி அவர்களே, அதென்ன அகில இந்திய பிரச்சினைகள்? தமிழ்நாடும் இந்தியாவுக்குள் தானே இருக்கிறது? உங்களுக்கு தெரியாதா? அல்லது அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்ற கொள்கையில் இன்னும் உள்ளீர்களா? உங்கள் திராவிட மாடல் தலைவரிடம் கேட்டு சொல்லவும்!!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில், வெலவெலத்து, அஞ்சி, நடுங்கி, பயந்து, அச்சப்பட்டு ‘மாட்டு மூத்திரம்’ என்று தி மு க மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் அவர்கள் குறிப்பிட்டதை திரும்பப் பெற செய்து, அதை கண்டித்தும் இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

உண்மையை புரிந்து கொண்டு, சனாதன தர்மத்திற்கு எதிராக அதாவது ஹிந்து மதத்திற்கு எதிராக இனி பேசினால், மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறார் தி மு க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால், கடந்த பல தசாப்தங்களாக, தொடர்ந்து ஹிந்துக்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை அவதூறு செய்த இயக்கத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை அவர் உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அப்படியே உணர்ந்தாலும் இனி ஒன்றும் செய்வதற்கில்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 227

1

0