ஓசி பீருக்காக தனியார் நிறுவன அதிகாரியை தாக்க முயன்ற திமுக எம்பியின் மகன் : நட்சத்திர ஓட்டலில் போதையில் தகராறு!!

2 November 2020, 5:34 pm
trichy siva son - - updatenews360
Quick Share

பீர் வாங்கி வரச் சொல்லி மிரட்டி, போதையில் தனியார் நிறுவன அதிகாரியின் மீது தாக்குதல் நடத்த முயன்ற திமுக எம்பியின் மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் பஜாஜ் நிறுவனத்தின் மண்டல தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு இவர் அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மது அருந்தியுள்ளார். பின்னர், ஓட்டலுக்கு வெளியே வந்த போது, அங்கு குடிபோதையில் சுயநினைவை இழந்த நிலையில், திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா நின்று கொண்டிருந்தார்.

அப்போது, ஸ்ரீராமை அழைத்து 4 பீர் வாங்கி வருமாறு மிரட்டிய சூர்யா, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் அவரது தலையில் தாக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. மேலும், டார்ச் லைட்டை வைத்து அடிக்க முயன்றதுடன், பீர் வாங்கி வராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்ரீராம், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தன் மீதான நடவடிக்கையை உணர்ந்த திருச்சி எம்பியின் மகன் சூர்யாவும், பதிலுக்கு தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நண்பரின் பிறந்த நாள் பார்ட்டிக்காக சென்றதாகவும், அங்கு பார்க்கிங்கில் நின்று பீர் குடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஸ்ரீராம், தனது நண்பரிடம் இருந்த பீரை பிடிங்கிக் குடித்து தகராறில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார்.

இருவரின் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவிக்களை ஆராய்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, ஓசி பிரியாணி, ஓசி பஜ்ஜி என அடுத்தடுத்த விவகாரங்களில் திமுக தொண்டர்கள் சிக்கி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது திமுகவின் மூத்த தலைவரும், எம்.பி.யின் மகனாகிய ஒருவரே, இதுபோன்று குடிபோதையில் ரகளையில் ஈடுபடுவது அநாகரீகமானது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 26

0

0

1 thought on “ஓசி பீருக்காக தனியார் நிறுவன அதிகாரியை தாக்க முயன்ற திமுக எம்பியின் மகன் : நட்சத்திர ஓட்டலில் போதையில் தகராறு!!

Comments are closed.