நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் தி.மு.க. தான் : முதலமைச்சர் பழனிசாமி ஆவேசம்..!

15 September 2020, 12:54 pm
Cm eps in assembly - updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வால் 13 பேர் மரணமடைந்ததற்கு தி.மு.க.தான் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார்.

சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டம் இன்று தொடங்கியதும். நீட் தேர்வு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,” நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் அதற்கு ஒப்புதல் பெறவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கருணாநிதி முதலமைச்சராக இருந்தவரையில் நீட் தேர்வு தமிழகத்தில் நடத்தப்படவில்லை,” என்றுக் கூறினார்.

ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது :- கடந்த 2010ம் ஆண்டு திமுக – காங்., மத்தியில் ஆட்சியில் இருந்த போதுதான் நீட் தேர்வுக்கு அவசரச் கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது நாட்டுக்கே தெரியும்.

நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் ஆஜராகி வாதாடினார். அவர் ஆஜராகவில்லை என்றால் மறுப்பு தெரிவித்து பேசுங்கள். நாட்டையே குட்டிச் சுவர் ஆக்கியது தி.மு.க. கூட்டணி தான். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருப்பது தி.மு.க.தான்.

நீட் தேர்வு இவ்வளவு பெரிய பிரச்சனையாகக் காரணம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிதான். நீட் தேர்வுக்கு தடை வாங்கியது முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசுதான். நீட் விவகாரத்தில் 13 பேர் மரணமடைந்ததற்கு தி.மு.க.தான் காரணம், என ஆவேசமாகக் கூறினார்.

முன்னதாக, நீட் தேர்வை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது என்று கூறியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரின் இருக்கையை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முற்றுகையிட்டு முழுக்கமிட்டனர். எனவே, அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Views: - 1

0

0