100 நாள் திட்டம்… ஸ்டாலினுக்கு கைகொடுக்குமா? காலை வாரி விடுமா?

26 January 2021, 8:30 pm
Dmk - cover - updatenews360
Quick Share

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாகவே, தமிழக சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு எப்படியும் இந்த முறை ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற தீர்மானத்துடன் தமிழகத்தை வலம் வர ஆரம்பித்து விட்டார்.

கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவிய நேரத்தில் ஸ்டாலின் காணொலி மூலம் திமுக மாவட்ட செயலாளர்களுடன் பேசி நிவாரண உதவிகளை வழங்கினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த தீவிர நடவடிக்கையால் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து விட்டதால் தமிழகம் முழுவதும் சென்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவும் தொடங்கி உள்ளார்.

stalin crowd - updatenews360

கொரோனா தமிழகத்தில் உச்சம் பெற்ற நேரத்தில் இல்லாத வேகம் இப்போது அவரிடம் புல்லட் ரயில் போல் பாய்கிறது.
முதலில் ஒன்றிணைவோம் வா என்றார். அதைத்தொடர்ந்து, ஸ்டாலினின் குரல் என முழங்கினார். பின்னர் கிராம ஆலமர அடியில் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசுவதுபோல் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தினார்.

இதெல்லாம் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவர்வதற்காக திமுகவின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த வியூகத்தின் ஒரு அங்கம் என்பது தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில், அவர் நேற்று ஒரு புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்குகிறார்.

Stalin_DMK_UpdateNews360

இந்த மாவட்டத்தில் ஸ்டாலின் பிரச்சாரம் தொடங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. 1967-ல் திமுக அரியணை ஏறுவதற்கு
முதன்முதலில் அடித்தளமிட்டது இந்த மாவட்டம்தான். அதனால்தான் சென்டிமெண்ட்டாக ஸ்டாலின் இங்கிருந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். அப்போது, மக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் தீர்வு என்னும் புதிய முழக்கத்தையும் கொண்டு செல்கிறார்.

இத்திட்டம் என்ன என்பதையும் அவர் நேற்று கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் வெளியிட்டார். செய்தியாளர்கள் உட்காருவதற்காக அந்த இல்லத்தின் வெளியே சாலையில் 50-க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டும் இருந்தன.

அப்போது ஸ்டாலின் கூறுகையில் “நான் கலந்துகொள்ள இருக்கும் கூட்டங்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமம் அல்லது வார்டுகளைச் சார்ந்தவர்கள் பங்கேற்று என்னிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். அந்த இடங்களில் ஒவ்வொருவரின் கோரிக்கைகள் அடங்கிய முழுத் தகவலும் குறிப்பிடப்பட்டு தனித்தனி பதிவு எண் கொண்ட விண்ணப்ப படிவம் கொடுக்கப் போகிறோம். அந்த படிவத்தை பெற்று அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். நானே அனைத்து மனுக்களையும் சேகரித்து மக்கள் முன்பாக பாதுகாப்பாக ‘சீல்’ வைப்பேன்.

இந்த கூட்டங்களில் நேரடியாக கலந்துகொள்ள இயலாதவர்கள்
இதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தின் வாயிலாக அல்லது செல்போன் மூலம் தங்களுடைய பிரச்சனைகளை பதிவு செய்யலாம். தேர்தல் முடிந்து திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் அனைத்து கோரிக்கை மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 1 கோடி குடும்பங்களின் மனுக்களுக்கு இப்படி தீர்வு காணப்படும். இதற்காக தனித்துறை ஒன்றும் உருவாக்கப்படும்” என அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

“கருணாநிதி சொன்னதை செய்வார், செய்வதைத்தான் சொல்வார். அதனால்தான் அவருடைய இல்லத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்” என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

Stalin -Updatenews360

ஸ்டாலின் பேட்டியளிக்கும் முன்பாக இத்திட்டம் தவிர வேறு எதையும் முன்வைத்து கேள்விகளை எழுப்பக் கூடாது என்று செய்தியாளர்களுக்கு மறைமுக நிபந்தனை விதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் செய்தியாளர்கள் அவரிடம் வேறு எந்த கேள்வியும் கேட்கவில்லை என்கிறார்கள்.
ஒருவேளை எசகு பிசகாக கேள்விகளை எழுப்பினால் அதற்கு அவர் பதில் சொல்ல தடுமாறலாம் என்ற காரணத்தினால் இதுபோல் நிபந்தனை விதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் புதிய திட்டத்திற்கான நகலையும் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு முன்னதாகவே வழங்கிவிட்டு பேட்டி கொடுத்தார். அப்படியிருந்தும் கூட பிரசாந்த் கிஷோரின், ஐபேக் டீம் அவர் அருகில் இருந்து கடைசி நேரத்தில் சில திருத்தங்களை செய்து கொடுத்துள்ளது.

ஸ்டாலினின் திட்டம் மிகவும் புதுமையானது போல் தோன்றினாலும் அது நடைமுறைக்கு சாத்தியப்படுமா? என்கிற கேள்வி எழுகிறது. அதற்கு என்ன காரணம் என்று சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் சொல்வதை கொஞ்சம் கேட்போம்.

“அரசு ஊழியர்கள் எப்போதுமே திமுகவின் செல்லப் பிள்ளைகள். அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதும் தெரிந்த விஷயம்தான். அரசு துறைகள் கணினி மயமாகி விட்ட போதிலும் கூட இன்னும் கோப்புகளை வைத்துக்கொண்டு மாதக்கணக்கில் மனு கொடுத்தவர்களை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே கட்டாயம் இணையவழி மூலம் தான் செயல்பட வேண்டும் என்றால் சர்வர் கோளாறாகி ஆகிவிட்டது. மேலாதிகாரி இல்லை வெளியே போய்விட்டார். இன்று போய் நாளை வா என்று எதாவது சாக்கு போக்கு சொல்லி வாரக்கணக்கில் இழுத்தடிப்பார்கள்.

prasanth kishor - stalin - updatenews360

தீர்வு காணப்படாமல் மாதக் கணக்கில் நீளும் பிரச்சனைகளும் உண்டு. இதனால்தான் கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் தீர்வு காணப்படாமல் அப்படியே கிடக்கின்றன. அப்படி ஏதாவது அவசரம் என்றால் கையூட்டு கொடுத்தால்தான் சாதிக்க முடியும் என்ற நிலையே காணப்படுகிறது. இப்படி லஞ்சம் பெறும் அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் மீது திமுக ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் குறைவு.

தேர்தல் நேரத்தில் இவர்கள்தான் வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்படுவார்கள். எனவே அவர்களை கைக்குள் வைத்துக் கொள்ளவே திமுக நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் கூறுவார்கள். திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் இவர்களை வேலை வாங்குவது மிகக் கடினமாகி விடும். இப்போது கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் நிலுவையில் கிடக்கும் லட்சக்கணக்கான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கும் இதுதான் காரணம்.

திமுக ஆட்சிக்கு வந்தால் இவர்களை தட்டி எழுப்பி வேலை வாங்குவதற்கு உள்ளாகவே 100 நாட்கள் தாராளமாய் கடந்துவிடும். இவர்கள் மீது ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவது ஒரு போதும் நடக்காத காரியம்.

பெயரளவில் ஒரு சில மனுக்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு எல்லாவற்றையும் உடனடியாக நிறைவேற்றி விட முடியுமா? படிப்படியாகத்தான் முடியும் என்பார்கள். எனவே இது 100 சதவீதம் சந்தேகமே” என்று தங்களது கவலையை அவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறுகையில், ” தேர்தலில் ஓட்டுகளை வாங்குவதற்காகவே ஸ்டாலின் இல்லாத ஊருக்கு போகாத வழியைச் சொல்கிறார். 2006 தேர்தலின்போது இவருடைய தந்தை கருணாநிதி நிலமற்ற ஏழைகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை பண்படுத்தி ஆளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் நிலமற்ற எந்த ஏழை விவசாயிக்காவது இந்த 2 ஏக்கர் நிலம் கிடைத்ததா?

ஒருவேளை ஸ்டாலின் ஆட்சியைப் பிடித்துவிட்டால் முதலில் தனது தந்தையின் வாக்கை காப்பாற்றும் விதமாக ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கவேண்டும். ஏனென்றால் விவசாயிகள் பற்றி மிகுந்த அக்கறையோடு சமீப காலமாக அவர்தான் குரல் கொடுத்து வருகிறார். இது மட்டுமல்ல இன்னும் சில வாக்குறுதிகளை மக்களுக்கு அவர் தரவேண்டும்.

கூவம் ஆற்றை சுத்தப்படுத்துகிறோம் என்று சொல்லி 1970களில் மூன்று கோடி ரூபாயை கருணாநிதி ஒதுக்கி செலவும் செய்தார். ஆனாலும் கூவம் சுத்தம் செய்யப்படவில்லை. அதுபற்றி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது கூவத்துக்குள் முதலை இருப்பதால் சுத்தம் செய்ய முடியாமல் போய்விட்டது என்று பதிலளித்தார். அந்த கூவத்தையாவது ஸ்டாலின் சுத்தம் செய்யவேண்டும். ஏனென்றால் அந்தப் பணத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

stalin upset - updatenews360

குடியால் இன்று குடும்பங்கள் சீரழிந்து விட்டன. தனது தந்தை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய குடியை ஸ்டாலின் முடிவுக்கு கொண்டுவந்து அதற்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சி காலத்தில் வாக்குறுதி கொடுக்கப்பட்டு
தீர்க்கப் படாத பிரச்சினைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன.
ஆட்சியை திமுக பிடித்தால் முதலில் செய்ய வேண்டியது இதைத்தான். ஆனால் இவற்றையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்து தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் புதுசு புதுசா அளந்து விடுகிறார்.

அண்மைக்காலமாக ஸ்டாலின் இப்படி அடிக்கடி வெவ்வேறு திட்டங்களை கையில் எடுப்பது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது போன்ற தோற்றத்தை தமிழக மக்களிடம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே.

சரி, ஆட்சியைப் பிடித்தால்தானே இதையெல்லாம் செய்ய முடியும்?… ” என்று தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்பதை கூறும் விதமாக பதில் கேள்வியையும் அந்த அரசியல் பிரமுகர்கள் எழுப்பினர்.

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மூளையில் உருவானதாக கூறப்படும் இந்த 100 நாள் திட்டம் தேர்தலில் திமுகவுக்கு கைகொடுக்குமா? காலை வாரி விடுமா? என்ற கேள்வியையே எழுப்பி இருக்கிறது.

Views: - 0

0

0