கமல் உள்ளே… காங்.வெளியே… அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள்!!

6 February 2021, 9:30 pm
DMK - congress - MNM - updatenews360
Quick Share

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக கடந்த டிசம்பர் 13-ம் தேதி தனது ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் முழக்கத்துடன் பிரச்சாரத்தை மதுரையிலிருந்து தொடங்கினார்.
5-வது கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தபோது அவருக்கு காலில் கடும் வலி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 17-ம் தேதி அவர் தனது பிரச்சாரத்தை பாதியில் முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலில் லேசான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
அடுத்த சில நாட்களில் கமல் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

2016-ம் ஆண்டு நடிகை கௌதமியுடன் வீட்டில் இருந்தபோது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்ததில் அவருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்காக அப்போது நடிகர் கமல் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். ஆனாலும் அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் அவ்வபோது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.

2019 நவம்பர் மாதம் மீண்டும் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய காலில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த டைட்டானியம் கம்பி அகற்றப்பட்டது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று கமலிடம் உடல் நலம் விசாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைதான் சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின்போது கமல் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை திறந்த வேனில் நின்றுகொண்டே இருந்ததால் ஏற்பட்டதன் விளைவு, அவருடைய உடல் நலக் குறைவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. நடிகர் கமல் மீண்டும் எப்போது பிரச்சாரத்தை தொடங்குவார் என்பது இன்னும் உறுதியாக தெரியாத நிலை உள்ளது. அவர் தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் மீண்டும் பிரசாரத்தை தொடங்கி விடுவார் என்கிறார்கள்.

அதேநேரம் வீட்டில் ஓய்வில் இருந்தாலும்கூட கமல், தமிழக மற்றும் தேசிய அரசியல் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறார். மத்திய, மாநில அரசுகளுக்குக்கு எதிராக அவ்வப்போது கண்டன ‘டுவிட்’ போடவும் தவறுவதில்லை. தனது தலைமையில் மூன்றாவது அணி அமையும் என்று அவர் தொடர்ந்து கூறி வந்தாலும், இன்னொரு பக்கம் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார், என்கிறார்கள்.

அதே நேரம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 சதவீதத்துக்கும் நெருக்கமாக ஓட்டுகளை கமல் கட்சி வாங்கியது, சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின்போது அவருக்கு திரண்ட பெரும் கூட்டம் உள்ளிட்ட காரணங்கள், மக்கள் நீதி மய்யதை எப்படியும் தங்கள் அணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தீவிர சிந்தனையை திமுகவிடம் ஏற்படுத்தியிருக்கிறது. மார்க்சிஸ்ட் சித்தாந்தத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட கமலுக்கு அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ‘இப்படி மய்யமாக சென்றால், எதன் மீதாவது மோதி கீழேதான் விழ நேரிடும்’ என்று திமுக கூட்டணிக்குள் இழுப்பதற்காக எச்சரிக்கை விடுப்பதுபோல்
அறிவுரையும் கூறியிருந்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கமல் நன்கு பழக்கமானவர் என்பதால் இப்படி உரிமையுடன் பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

இப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமல்ஹாசனை விட்டதுபோல் தெரியவில்லை. தொடர்ந்து அவருக்கு வலை வீசிக் கொண்டேதான் இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலினும் கட்சியின் சீனியர் தலைவர்களை தன் சார்பிலும் மறைமுக தூது விட்டிருக்கிறார், என்று தகவல்கள் கசிகின்றன. இந்த தூதுவர்கள் அண்மையில் கமலை அவருடைய வீட்டில் சந்தித்து பேசியும் இருக்கின்றனர். ஏற்கனவே திமுக கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. இந்த சூழலில் தானும் அதே கூட்டணியில் சேர்ந்தால் பத்தோடு பதினொன்றாக அல்லவா, ஆகிப் போய் விடுவோம்? என்ற சந்தேகத்தை தன்னை சந்திக்க வந்த திமுக நிர்வாகிகளிடம் கமல் எழுப்பி இருக்கிறார்.

Congress DMK - updatenews360

அப்போதுதான் கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தில் மக்கள் நீதி மய்யத்தை வைக்கும் திட்டத்தை திமுக விரிவாக விளக்கி இருக்கிறது. இதனால், திமுக கூட்டணியில் இணையும் ஆர்வம் கமல்ஹாசனிடம் வேகம் எடுத்துள்ளது. எனினும், அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் 30 தொகுதிகளுக்கு குறையாமல் எங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். அப்படி என்றால் தொடர்ந்து பேசுவோம் என்று அவர் உறுதியளித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தது. முடிவில் கமல் கட்சிக்கு 21 தொகுதிகளை ஒதுக்குவதற்கு திமுக சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, பாதியில் நிறுத்திய பிரச்சாரத்தை கமல் இன்னும் தொடங்கவில்லை என்ற ஒரு பேச்சும் உள்ளது. திமுகவின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரும், இளைஞரணி செயலாளர் உதய நிதியும் இதற்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டார்களாம்.

kamal - stalin - updatenews360

அண்மையில் பிரசாந்த் கிஷோரின், ‘ஐபேக் டீம்’ கமல் கட்சி பற்றி எடுத்த ரகசிய சர்வேயில் இளம் வாக்காளர்களிடம் அவருக்கு கணிசமான ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளதாம். இதைத்தொடர்ந்தே பிரசாந்த் கிஷோர் மக்கள் நீதி மய்யத்தை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர ஒப்புதல் அளித்தாராம். இதனால் இனி அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடந்துதொகுதி பங்கீடு முடியும்போதுதான் கமல் மீண்டும் பிரச்சாரத்திற்கு வருவார் என்றும் கூறுகின்றனர்.

அதேநேரம் கமல் இன்னும் ஒரு வாரத்தில் பழையபடி பிரசாரத்தை தொடங்கிவிடுவார் என்று அவருடைய கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது கமல் திறந்த வேனில் நின்று பேசுவது சிரமம் என்கிறார்கள். அதனால் இருக்கையில் அமர்ந்தவாறு பேசும் நவீன வசதிகொண்ட புதிய பிரச்சார வேன் அவருக்காக தயாராகிறது என்ற ஒரு தகவலும் வேகமாக பரவி வருகிறது. கமல் நின்று கொண்டே பேசும்போது கால் வலியால் அவதிப்படும் நிலை மீண்டும் ஏற்படலாம். அதைத் தவிர்ப்பதற்காகவே டாக்டர்களின் ஆலோசனைப்படி இந்த நவீன வேன் ஏற்பாடு என்கிறார்கள்.

Kamal Sellur Raju-Updatenews360

தனது கூட்டணிக்குள் கமலை கொண்டு வருவதன் மூலம் இன்னொரு லாபக் கணக்கையும் திமுக போடுகிறது.
அதாவது, கமல் உள்ளே வரும்போது காங்கிரஸ் வெளியேற்றப்படும். அப்படி ஒரு சூழல் உருவாகும் போது காங்கிரஸ் தலைமையில் வலுவான மூன்றாவது அணி அமையாது என்றே திமுக கருதுகிறது.

இதனால் திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிகவும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த இரு கட்சிகளும் காங்கிரசுடன் நேரடியாக கூட்டணி வைத்துக் கொள்வதை ஒருபோதும் விரும்புவதில்லை. அதனால் மதிமுக, விசிக ஆகியவையும் திண்டாட்டம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கமல் உள்ளே… காங்கிரஸ் வெளியே… ஆட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Views: - 26

0

0