கபில் சிபலால் திடீர் திருப்பம்… ஸ்டாலின் தலைமையில் 3வது அணி…? திசை மாறுகிறதா தேசிய அரசியல்…???

Author: Babu Lakshmanan
25 May 2022, 5:58 pm
Quick Share

2024 தேர்தலை சந்திக்க பாஜக கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயாரானதுடன் அதற்கான களப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஆயத்தமாகும் பாஜக

மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள ஏராளமான மக்கள் நலத் திட்டங்களின் அடிப்படையில்தான் தேர்தல் பிரச்சார உத்திகளை அக்கட்சி வகுத்தும் வருகிறது.

modi-amith-shah-updatenews360

இதற்காக முதல் கட்டமாக, உத்தரபிரதேச மாநிலத்தில் சமூக வலைத் தளங்களை சிறப்பாக கையாளும் 10 ஆயிரம் பேரை களம் இறக்கி விட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இதேபோல் சமூக வலைத்தளங்களில் பல்லாயிரக்கணக்கானோருக்கு நன்கு பயிற்சி கொடுத்து பாஜகவின் அடிமட்டத்தை பலப்படுத்தியும் வருகிறது.

இறங்கிப் போன சோனியா

இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரசும் ஆயத்தமானது.

அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சிந்தனை அமர்வு மாநாடு ஒன்றையும் காங்கிரஸ் தலைவர் சோனியா நடத்தினார். இதைத்தொடர்ந்து கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க மூன்று குழுக்களும் அமைக்கப்பட்டது.

அதன்படி, 2024 தேர்தல் பணிக் குழுவில் ப சிதம்பரம், பிரியங்கா, முகுல் வாஸ்னிக், ஜெயராம் ரமேஷ், கே சி வேணுகோபால், அஜய் மக்கான், ரந்தீப் சுர்ஜேவாலா, தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சுனில் ஆரம்ப காலத்தில், பிரசாந்த் கிஷோருடன் இணைந்து செயல்பட்டவர், ஆவார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடத்த இருக்கும் பாரத ஒற்றுமை யாத்திரை குழு ஒன்றையும் சோனியா அமைத்துள்ளார்.

இதேபோல் முக்கிய பிரச்சனைகளின்போது கட்சிக்கு வழிகாட்டும் அரசியல் விவகார குழுவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி, திக்விஜய்சிங், ஆனந்த் சர்மா, கே.சி. வேணுகோபால், ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் குலாம் நபி ஆசாத்தும், ஆனந்த் சர்மாவும் ஜி 23 எனப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் குழுவில் இடம் பெற்றவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தனது தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த இவர்கள் இருவரும் அரசியல் விவகாரக் குழுவில் இணைக்கப்பட்டு இருப்பதன் மூலம், நாடாளுமன்ற தேர்தலுக்காக சோனியா ஒரு படி கீழே இறங்கி வந்து இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

கபில் சிபல் விலகல்

அதிருப்தி தலைவர்கள் குழுவில் இருந்த இன்னொரு பிரபல தலைவரும், சுப்ரீம் கோர்ட் வக்கீலுமான கபில் சிபல் காங்கிரசில் இருந்து விலகி விட்டதாக திடீரென்று அறிவித்துள்ளார். அது மட்டுமின்றி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி சார்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கலும் செய்து தேசிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார்.

கடந்த 16-ம் தேதியே கட்சியின் மேலிடத்திற்கு காங்கிரஸில் இருந்து விலகுவதாக தான் கடிதம் எழுதியதாக அவர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

திமுகவின் 3 அணி

இன்னொரு பக்கம் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் நடவடிக்கைகள் டெல்லியில் தீவிரமாக நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கான முழு முயற்சியில் இறங்கி இருப்பவர் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் என்கிறார்கள்.

இந்த அணியில் திமுக தவிர சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட சில மாநிலக் கட்சிகளும் இடம் பிடிக்கும் என்று தெரிகிறது.

Ramzan Cm Stalin - Updatenews360

இப்படி ஒன்று சேரும் ஒரு டஜனுக்கும் மேலான அரசியல் கட்சிகளால் 295 தொகுதிகள் வரை கைப்பற்ற முடியும் என்று இக் கட்சிகளின் தலைவர்கள் கணக்கு போடுகிறார்கள். இதைத்தொடர்ந்தே தமிழகத்தில் காங்கிரஸை தனது கூட்டணியிலிருந்து கழற்றி விடும் நடவடிக்கைகளில் திமுக தீவிரமாக இறங்கி இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு அடிபடுகிறது.

தற்போது காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் சமாஜ்வாடி கட்சியின் சார்பாக உத்தரபிரதேசத்தில் இருந்து போட்டியிடுவதும் இதை உறுதி செய்வதுபோல் அமைந்துள்ளது.

பேரறிவாளன் விவகாரம்

இதுகுறித்து டெல்லியில் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஏற்கக் கூடியதாக உள்ளன.

“உத்தர பிரதேசம்,பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநில சட்டப் பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் படு தோல்வி கண்டதால் அக்கட்சியை சுமப்பதை பெரும் சுமையாகவே திமுக கருதுகிறது. தவிர குஜராத், இமாச்சல பிரதேச சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் என்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருப்பது வேறு திமுகவை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தமிழகத்தில் திமுகவின் தேர்தல் வெற்றிக்கு வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர் என்பதால் அவருடைய கணிப்பை திமுக தலைமை அப்படியே நம்புகிறது.

இந்த நிலையில்தான் ராஜீவ் கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலையை திமுகவினர் கொண்டாடி மகிழ்வதை சோனியாவால் ஏற்க முடியவில்லை. அதுவும் பேரறிவாளனை ஒரு விடுதலைப் போராட்ட தியாகி போல கருதி முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய முதுகில் தட்டிக் கொடுத்தது, கட்டிப்பிடித்தது, தேனீர் விருந்து அளித்தது போன்றவற்றை காங்கிரஸ் மேலிடத்தால் ஜீரணிக்க முடியவில்லை என்பதும் உண்மை.

தங்களது கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே, திமுக இப்படி நடந்து கொண்டதாகவும் காங்கிரஸ் தலைமை கருதுகிறது. அதேநேரம் கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதை திமுகவே வெளிப்படையாக அறிவிக்கட்டும் என்று காங்கிரஸ் அமைதி காக்கிறது.

ஸ்டாலின் பிரதமர்

பல்வேறு நேரங்களில் திமுகவுக்கு கைகொடுத்த கபில் சிபல் சமாஜ்வாடி கட்சி சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதும் கூட திமுக தலைமையிலான 3-வது அணிக்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் என்றும் காங்கிரஸ் சந்தேகிக்கிறது.

ஒருவேளை இந்த அணி வெற்றி பெற்றால் ஸ்டாலின் பிரதமர் ஆவதற்கும், அகிலேஷ் யாதவ் துணைப் பிரதமர் ஆவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சமீபகாலமாக தேசிய அளவில் திராவிட மாடல் ஆட்சி பற்றி ஸ்டாலின் அதிகமாக பேசி வருவதும், ஊடகங்களில் விளம்பரம் செய்வதும் எதனால் என்பதையும் காங்கிரஸ் தலைமை நன்கு புரிந்து கொண்டுள்ளது.

CM Stalin - Updatenews360

அதேநேரம் மாநிலங்களவை எம்பி தேர்தலில் திமுக தங்களுக்கு ஒதுக்கிய இடத்தை ஏற்காமல் திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்று மேலிட காங்கிரஸ் தலைவர்களில் சிலர் சோனியாவிடம் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் முக்கிய பதவி கேட்டதால்தான் அவரை ஒதுக்கிவைத்துவிட்டு, அவருடன் இணைந்து பணியாற்றிய சுனிலை காங்கிரசின் தேர்தல் பணிக் குழுவில் சோனியா சேர்த்துக் கொண்டுள்ளார். அதனால் 3-வது அணி அமைவது பற்றி அவர் அவ்வளவாக கவலை கொள்ளவில்லை.

அதேநேரம் காங்கிரசை கூட்டணியிலிருந்து திமுக கழற்றிவிட்டால் 2024 தேர்தலில் தமிழகத்தில் மட்டும் திமுக 36 தொகுதிகளில் போட்டியிடும் என்று உறுதியாக சொல்ல முடியும்” என்றும் அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 522

0

0