உதயசூரியனால் எழும் நெருக்கடி…!! அணி மாறும் மனநிலையில் கூட்டணித் தலைவர்கள்!!

6 November 2020, 8:00 am
Stalin - updatenews360
Quick Share

சென்னை: திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் பாதி இடங்களில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுகவுக்கு ஆலோசனை சொல்லும் ஐ-பேக் கூறியிருப்பதால் தொடர்ந்து கூட்டணியில் சிக்கல் நீடிக்கிறது. திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் வெளிப்படையாகப் பாராட்டுவதால் அணி மாறவும் அவர்கள் தயாராக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே, திமுக 200 இடங்களில் போட்டியிடும் என்றும் கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று பல மாதங்களாக செய்திகளும், விவாதங்களும் நடந்துவரும் நிலையில், திமுக கூட்டணியில் பிரச்சினை ஏற்பட்டது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு 20 தொகுதிகளே ஒதுக்கப்படும் என்றும், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்று திமுக முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் பல மாதங்களாகவே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இதைத் தொடர்ந்து கூட்டணியில் குறைந்த இடங்கள் ஒதுக்கப்படும் என்ற தகவல்கள் உண்மையில்லை என்று ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். திமுக கூட்டணி பற்றி ஊடகங்கள் அனுமானங்களையும் அதீத கற்பனைகளையும் வெளியிடுவதாக அவர் கூறினார். கூட்டணி வலிவோடும், பொலிவோடும் இருப்பதாகத் தெரிவித்த அவர், தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் பெயர்களைக் கூறவில்லை. மேலும், இப்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்ற உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.

ஆனால், கூட்டணிக்கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் நிற்கவேண்டும் என்பது குறித்து அவர் மறுப்பு எதுவும் கூறவில்லை. ‘தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர்தான் தொகுதிகள் இறுதிசெய்வது வாடிக்கை’ என்று சொல்லி கடைசிநேரத்தில்தான் தொகுதிப்பேச்சுகள் நடைபெறும் என்பதையும் சொல்லாமல் சொன்னார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவும், விடுதலைச்சிறுத்தைகளும் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியதாக முதலில் தகவல்கள் வெளிவந்தன. அந்தத் தகவல்களை உறுதியாக்கும் வகையில் மதிமுகவும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் து.ரவிகுமாரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.

மதிமுகவும், விடுதலைச்சிறுத்தைகளும் 2011 சட்டமன்றத் தேர்தல் முதல் ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறும் அளவுக்கு வாக்குகளையோ, தொகுதிகளையோ பெறவில்லை. இதனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமோ தனிச்சின்னமோ இல்லாமல் இந்த இரு கட்சிகளும் உள்ளன.

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதம் வாக்குகளை வாங்கும் அளவுக்கோ அல்லது எட்டு தொகுதிகளில் வெற்றிபெறும் அளவுக்கோ இந்த இரு கட்சிகளும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டால்தான் இழந்த அங்கீகாரம் மீண்டும் கிடைக்கும். அதற்கு அரசியல் எதிர்காலமும் இருக்கும். எனவே, திமுக கூட்டணியில் குறிப்பிட்ட தொகுதிகளைப்பெற்று தனிச்சின்னத்தில் நிற்க மதிமுக தலைவர் வைகோவும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனும் விரும்புகின்றனர்.

Vaiko 04 updatenews360

ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. இத்தனை தொகுதிகளில் நின்றாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்குமா என்ற சந்தேகம் திமுக தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் ஆகியோரையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தலைவர்கள் வற்புறுத்திவந்தனர். இந்த நிலையில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று வைகோவும் திருமாவளவனும் வெளிப்படையாக அறிவித்தனர்.

Thirumavalavan - stalin - updatenews360

ஆனாலும், ‘உதயசூரியன்’ சின்னத்தில் கூட்டணிக்கட்சிகளைப் போட்டியிட வைக்கவேண்டும் என்று திமுகவுக்கு ஆலோசனை சொல்லும் ஐ-பேக் தொடர்ந்து வற்புறுத்திவருகிறது. ‘உதயசூரியன்’ சின்னத்தில் நிற்க மறுத்தால் குறைவான தொகுதிகளையே ஒதுக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இல்லையென்றால், மதிமுகவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ஓதுக்கப்படும் இடங்களில் பாதி இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் அந்தக் கட்சிகள் நிற்க வேண்டும் என்று புதிய உத்தியை ஐ-பேக் வகுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், திமுக கூட்டணியில் கடும் புகைச்சல் கிளம்பியுள்ளது. பாஜகவுடன் அதிமுக அணி சேராவிட்டால் அதிருப்தியில் இருக்கும் திமுகவின் கூட்டணிக்கட்சிகள் அணி மாறவும் தயாராக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Views: - 62

0

0

1 thought on “உதயசூரியனால் எழும் நெருக்கடி…!! அணி மாறும் மனநிலையில் கூட்டணித் தலைவர்கள்!!

Comments are closed.