திமுகவில் குஸ்தி ஆரம்பம் : சீனியர்களுக்கு சீட் தரக்கூடாது ஜூனியர்கள் திடீர் போர்க்கொடி!!

2 March 2021, 4:37 pm
DMK - seniors - updatenews360
Quick Share

திமுகவில் உதயநிதி இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட பின், சீனியர் தலைவர்களின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தும், கரைந்தும் வருவது அனைவரும் அறிந்த விஷயம். வருகிற தேர்தலில், இது இன்னும் தேய்ந்துபோகும் சூழல் திமுகவில் உருவாகி இருக்கிறது.

தொடர்ந்து நான்கைந்து தேர்தல்களுக்கும் மேலாக போட்டியிட்ட திமுக தலைவர்கள் என்று கணக்கில் எடுத்துக்கொண்டால், அதில் திமுக பொதுச்செயலாளர், துரைமுருகன், பொங்கலூர் பழனிச்சாமி, மொய்தீன்கான் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், பூங்கோதை அருணா என்று ஒரு மிகப்பெரிய பட்டியலே உள்ளது.
இவர்கள் எல்லாமே திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாகவும் பதவி வகித்தவர்கள்.

KN Nehru, Ponmudi- Updatenews360

சாத்தூர் ராமச்சந்திரனும், எ.வ.வேலுவும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு வந்தவர்கள். அது மட்டுமின்றி அதிமுகவில் இருந்த போதும் சட்டப்பேரவைக்கு சில முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் ஆவர். இதுதவிர ராதாபுரம் அப்பாவு போன்று கண்களுக்கு அதிகம் தெரியாத, பல தேர்தல்களை சந்தித்த சீனியர் தலைவர்களும் திமுகவில் நிறைய உண்டு.

இந்த மூத்த தலைவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

அண்மையில் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் வாங்கிய சுமார் 8,500 பேரில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனுக்களை பூர்த்தி செய்து திமுக தலைமையிடம் கொடுத்துள்ளனர். இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திமுகவின் 17 அணிகளைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரிய வருகிறது. இவர்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் சீனியர் தலைவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை குறிவைத்து விருப்ப மனுக்களை கொடுத்துள்ளனர்.

மூத்த தலைவர்களுக்கு, தொகுதிகளை தரக்கூடாது, இனி அவர்களுக்கு கட்சி பணிகளை மட்டுமே வழங்க வேண்டும் என்கிற அதிருப்தியை தலைமைக்கு தெரிவிக்கவே, ஜூனியர்கள் இப்படி பெரும் எண்ணிக்கையில் விருப்ப மனுக்களை அண்ணா அறிவாலயத்தில் குவித்து இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

anna arivalayam- updatenews360

பொதுவாக, கருணாநிதியுடன் உயிருடன் இருந்தவரை சீனியர் தலைவர்கள் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்பி மனு அளித்தால், அங்கு போட்டியிட ஜூனியர் தலைவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். ரொம்பவே தயங்குவார்கள். ஓரிருவர் மட்டுமே மூத்த தலைவருடன் மோதித்தான் பார்ப்போமே என்று துணிச்சலுடன் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுப்பார்கள்.

ஆனால் தற்போது திமுகவின் மூத்த தலைவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் எல்லாம் ஜூனியர் தலைவர்களும் பெருமளவில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் துரைமுருகன் போட்டியிட விரும்பும் காட்பாடியில் திமுக இளைஞரணி சார்பில் மட்டுமே 20க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை திமுக தலைமையிடம் குவித்து இருக்கிறார்கள்.

Duraimurugan - Updatenews360

இதேபோல் மற்ற சீனியர் தலைவர்கள் போட்டியிட விரும்பும் ஒவ்வொரு தொகுதியிலும் இளைஞரணி சார்பில் 10 முதல் 15 பேர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதில் ஒரு ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால், மூத்த தலைவர்களின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக, இப்படி விருப்ப மனுத் தாக்கல் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் சாமர்த்தியமாக
தங்கள் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோரும் போட்டியிட விரும்பி அவர்களுடைய பெயரிலும் விருப்ப மனுக்களை அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பித்து இருக்கிறார்கள்.

அப்போதுதான் மூத்த தலைவர்கள் தங்களை எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் ஸ்டாலினையும், உதயநிதியையும் பாதுகாப்பு கேடயமாக ஜூனியர்கள் இப்படி பயன்படுத்தி உள்ளனர்.

இதனால் சீனியர் தலைவர்கள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தங்கள் ஜூனியர்களை சமாதானப்படுத்தும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால் உதயநிதியே பழுத்த அரசியல்வாதிகளான சீனியர் தலைவர்களை ஓரங்கட்ட இப்படி விருப்ப மனு தாக்கல் செய்ய சொல்லி இருக்கலாம் என்ற பேச்சும் திமுக வட்டாரத்தில் அடிபடுகிறது.

ஏற்கனவே திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், இந்தத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி வருகிறார். உதயநிதியும் இளைஞர் அணியில் தனக்கு பக்கபலமாக உள்ளவர்களை கைதூக்கி விட நினைக்கிறார். அதன் எதிரொலியாகத்தான் தற்போது திமுகவில் இளைஞர் பட்டாளம், சீனியர் தலைவர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிலர், கூறும்போது சீனியர் தலைவர்கள் தங்களுடைய இளம் வயதில் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி அடுத்த தலைமுறையை வளரவிடாமல் செய்துவிட்டார்கள். இவர்களை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது. இனிமேலும் அப்படியிருக்க இவர்கள் நினைப்பது கொஞ்சமும் நியாயம் அல்ல. இளைய தலைமுறைக்கு வழி விடுவதுதான் நல்லது. அப்போதுதான் கட்சி இன்னும் வேகமாக வளரும்.

இந்த சீனியர் தலைவர்கள் பலரின் வாரிசுகள் எம்பிக்கள், எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள். அப்படியிருந்தும் கூட புதியவர்களுக்கு இந்த தலைவர்கள் வழி விட மறுக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

கட்சித் தலைமையே இவர்களை ஓரம் கட்டினால் அது அவர்களுக்கு பெருத்த அவமானமாக அமையும். எனவே திமுகவில் நான்கைந்து முறை எம்எல்ஏக்கள் ஆக இருந்தவர்களும், திமுக ஆட்சி அமைந்த போதெல்லாம் அமைச்சர் பதவி வகித்தவர்களும் கட்சியின் நலன் கருதி ஒதுங்கிக் கொண்டால் நன்றாக இருக்கும்” என்று குறிப்பிட்டனர்.

சீனியர் தலைவர்களோ, ‘நான் வளர்த்துவிட்ட பையன் என்னையே எதிர்க்கத் துணிந்து விட்டானே! வளர்த்த கடாவே மார்பில் பாய்கிறதே!’ என்று கண்ணீர் விடாத குறையாக புலம்புவதும் அண்ணா அறிவாலய வட்டாரத்தில் கேட்கத் தொடங்கி இருக்கிறது.

அதுதான் அரசியல்!

Views: - 80

0

0