சிவகாசிய விட டெல்லி ஒசந்ததோ..!! வடநாட்டில் இருந்து வந்து இறங்கிய திமுக ஸ்டிக்கர், பேனர்கள்…தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு என்ன ஆச்சு..? சரமாரி கேள்வி

Author: Babu Lakshmanan
22 March 2021, 3:43 pm
stalin sticker - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் கட்சி தனது சாதனைகளை சொல்லியும், பிற கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கை மற்றும் ஆளும் கட்சியை குறை சொல்லியும் வாக்குகளை சேகரித்து வருகின்றன.

அந்த வகையில், தமிழர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர அதிமுக அரசு தவறி விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு 75 % வேலைவாய்ப்பை உறுதி செய்வோம் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் செல்லும் இடங்களில் எல்லாம், தமிழக வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சூளுரைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவையான பிளக்ஸ் மற்றும் ஸ்டிக்கர்களை பிரிண்ட் செய்யும் பணிகள் அனைத்தும், வடமாநிலத்திற்கு திமுக ஒப்பந்தம் விட்டிருக்கும் சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படும் ‘ஸ்டாலின்தான் வாராரு… விடியல் தரப் போறாரு’ என்னும் வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் அனைத்தும் டெல்லியில் இருந்து அச்சிடப்பட்டு வரவழைக்கப்பட்டுள்ளது. அதேபோல, திமுகவின் பேனர்கள் அனைத்தும் பஞ்சாப்பில் இருந்து பிரிண்ட் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

450 அச்சகம், 50,000 பணியாளர்கள் என்று அச்சு தொழிலில் வருடத்திற்கு ரூ.1500 கோடிக்கு மேல் வருவாய்‌ ஈட்டும் சிவகாசியை விட்டுவிட்டு, டெல்லிக்கு சென்று ‌பிரின்ட் செய்யும்‌ இவர்கள் தான்‌ நாளை தமிழக நலனை‌ காப்பவர்களா? என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படி செல்லும் பாதைகளில் எல்லாம் தமிழகத்தில் 75% வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என மார்தட்டி சொல்லும் திமுக, வாக்குக்காக இப்படி தமிழக மக்களின் நலனில் விளையாடுவதா..? என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்தி எதிர்ப்பு, தமிழுக்கு முன்னுரிமை என்று சொல்லி தமிழக மக்களை திமுக ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம் சொல்லி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் ஈழப்படுகொலைக்கு துணை நின்ற திமுக, அதனை மறைத்து அரசியல் லாபத்தை பார்த்ததை போல, தற்போது மீண்டும் தமிழர்களை வைத்தே அரசியல் இலாபம் பார்க்க முற்படுவது தற்போதைய அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.

தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட வடஇந்தியாவைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோருக்கு, ஒட்டுமொத்த திமுகவையும் விலைபேசி விற்காமல் இருந்தால் சரி, என்று ஸ்டாலினை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Views: - 363

0

0