போதைப்பொருள் வழக்கு : சுஷாந்தின் தோழி ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
11 September 2020, 1:46 pmமும்பை : சட்டவிரோத போதைப் பொருளை கொள்முதல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுஷாந்தின் தோழி ரியா சக்ரபோர்த்தியின் ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அவரின் தற்கொலைக்கு தோழி ரியா காரணம் என தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், ஒரு பெரிய திருப்பமாக, நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திடம் (என்சிபி) தான் போதைப்பொருள் வாங்கியது உண்மைதான் எனவும், ஆனால் அதை ஒருபோதும் உட்கொண்டது இல்லை எனவும் ஒப்புக்கொண்டார்.
அவரது சகோதரர் உட்பட ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 நாள் விசாரணைக்கு பிறகு போதைப் பொருள் தடுப்பு பிரிவில் ரியா கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரித்து வரும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை எங்கிருந்து வாங்கினார், யாருக்கெல்லாம் இதில் தொடர்புள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ரியா சக்ரபோர்த்தி, தனது வழக்கறிஞர் மூலமாக மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தன்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றதாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
0
0