‘முதலமைச்சராவார் துரைமுருகன்’ : சித்தர் அருள்வாக்கினால் உற்சாகத்தில் வேலூர் தி.மு.க…!! அதிருப்தியில் ஸ்டாலின்..!
19 September 2020, 4:13 pmதி.மு.க.வின் பொதுச்செயலாளர் அன்பழகனின் மறைவுக்கு பிறகு, குடும்ப உறவுகளை எதிர்த்து பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்பினார் மு.க. ஸ்டாலின். பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் தேர்வு செய்யப்பட்ட போது, அவர்கள் இருவரும் தனக்கு பக்க பலமாக இருந்து கட்சியை வழிநடத்த உதவுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக ஸ்டாலின் கூறினார்.
மேலும், ஸ்டாலின் புகழ்ந்ததை தாங்க முடியாமல் மேடையிலேயே ஆனந்த கண்ணீர் வடித்தார் துரைமுருகன்.
தனக்கு பொதுச்செயலாளர் பதவியை ஸ்டாலின் கொடுத்திருந்தாலும், இந்தப் பதவி தனக்கு கிடைக்கச் செய்தது விபூதி சித்தர் எனப்படும் ஸ்ரீலஸ்ரீ மஹாமஹா ஆனந்த சித்தரின் அருள்வாக்குதான் என்று துரைமுருகனின் நெஞ்சில் பதிந்துள்ளது போலும்.
தன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமுன்ற தேர்தலில் வெற்றி பெறுவார், பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என கூறிய அருள்வாக்கு, பிசிரு தட்டாமல் நிறைவேறியதன் மகிழ்ச்சியோடு, காட்பாடியில் இருந்து குடியாத்தம் சாலையில் 19வது கிலோ மீட்டரில் மகாதேவ மலை என்னும் சிறு மலை அமைந்துள்ளது. அங்கு கடந்த 17ம் தேதி இரவு ஆனந்த சித்தரை சந்திக்கச் சென்றார் துரைமுருகன். துரைமுருகனை ஆல் உயர மாலை போட்டு வரவேற்றுள்ளார் அந்த சித்தர்.
அப்போது, ” அய்யா நீங்க சொன்ன மாதிரியே என் பையனும் தேர்தலில் ஜெயிச்சிட்டான். நானும் பொதுச்செயலாளர் ஆயிட்டேன்,” என முகம் நிறைய மகிழ்ச்சியுடன் துரைமுருகன் சித்தரிடம் கூறியுள்ளார். பல ஆண்டுகள் பழக்கம் கொண்டவரான சித்தர், “நீ நல்லா இருப்படா,” என ஒருமையில் பதில் கூறினார். மேலும், தமிழகத்தின் உச்சபதவியிலும் நீ அமருவாய் என துரைமுருகனை வாழ்த்தி அனுப்பியுள்ளார்.
சித்தர் சொன்னதைப் போலவே பொதுச்செயலாளர் பதவி கிடைத்து விட்டது. மீண்டும் அவரே தமிழகத்தின் உச்சபதவயான முதலமைச்சர் அரியணையிலும் அமருவாய் எனக் கூறியிருப்பது நடக்கும் என்ற கனவில் அங்கிருந்து முகம் நிறைந்த புன்னகையுடன் துரைமுருகன் வீடு திரும்பியுள்ளார்.
தற்போது, சித்தரின் அருள்வாக்கினால் முதலமைச்சர் பதவி துரைமுருகனுக்கு கிடைக்கும் என்று வேலூர் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஏற்கனவே, முதலமைச்சர் பதவியை குறி வைத்து தி.மு.க. தலைவர் பதவியை மட்டுமே வகித்து வரும் ஸ்டாலினுக்கு, துரைமுருகனுக்கு சித்தர் கூறிய அருள் வாக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் தி.மு.க.வின் தலைவராக ஸ்டாலின் இருந்து வந்தாலும், தி.மு.க.வில் நீண்டகால உறுப்பினரும், அனுபவமிக்கவருமாக இருப்பவர் துரைமுருகன்தான். எனவே, எதற்கும் தூங்கும் போது கூட காலை ஆட்டிக் கொண்டே இருக்கனும் என்று ஸ்டாலினிடம் அவரது ஆதரவாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.