துரைமுருகனுக்கு எதிராக காங். போர்க்கொடி! உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி?…

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2023, 7:19 pm
Durai - Updatenews360
Quick Share

திமுக அரசின் மூத்த அமைச்சர்களில் சிலர் பொதுவெளியில் அவ்வப்போது துடுக்குத்தனமாக ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். அல்லது அவர்களுடைய செயல்பாடுகள் மக்களின் முகத்தை சுளிக்க வைப்பதாக அமைந்து பெரும் விமர்சனத்திற்கும் உள்ளாவதும் உண்டு.

திமுக மேடைப் பேச்சு

இந்த மூத்த அமைச்சர்கள் வரிசையில் துரைமுருகன், கே என் நேரு,பொன்முடி, எ வ வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன் என்று பலரை கூறலாம்.

பொதுவாக சட்டப்பேரவையில் திமுக அமைச்சர்கள் பேசும்போது வார்த்தைகளை நாசூக்காக கையாண்டு பதில் அளிப்பதில் கை தேர்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் மேடைப் பேச்சுகளில் திமுகவினரை மிஞ்ச யாருமே கிடையாது என்றும் சொல்வார்கள். அதனால் பெரும்பாலும் பல தலைவர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகாமல் தப்பி விடுவார்கள்.

அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி

ஆனால் சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் அளித்த ஒரு பதில்தான் அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரவி அருணனை கொந்தளிக்க வைத்துவிட்டது.

அண்மையில் சட்டப்பேரவையில் நடந்த மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய கடையநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கிருஷ்ண முரளி,”
தென்காசி மாவட்டத்தில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் கேரளாவுக்கு தினமும் கனிம வளங்கள் அதிக அளவில் எடுத்துச் செல்லப்படுகிறது. இதை தடுக்கவேண்டும். இந்த கனிமங்கள் முறையாக கொண்டு செல்லப்படுகிறதா? இல்லையா?என்பதை தமிழக அரசு விசாரித்து கடுமையான நடவடிக்கையும் எடுக்கவேண்டும்!”என்று கோரிக்கை விடுத்தார்.

கேலிப் பொருளான அமைச்சர் பேச்சு

இதற்கு பதில் அளித்தபோது துரைமுருகன் தெரிவித்த கருத்து தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் கேலிப் பொருளாக பேசப்படும் நிலைக்கு உள்ளாகி விட்டது

.

இதற்கு காரணம், “கனரக வாகனங்களில் கனிம வளங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று சட்டமே உள்ளது. அப்படி மீறி எடுத்துச் செல்லப்பட்டால் போலீசில் புகார் தெரிவிக்கலாம். அவர்களும் நடவடிக்கை எடுப்பார்கள்” என்று அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டு இருந்தார்.

கொந்தளித்த காங்., முன்னாள் எம்எல்ஏ

இதனால் கொதித்துப் போன தென்காசி, அம்பாசமுத்திரம் தொகுதிகளின் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு குழுத் தலைவருமான கே.ரவி அருணன் உடனடியாக துரைமுருகனுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டார்.

அதில், “தென்காசி மாவட்டத்திலிருந்து பல்லாயிரக் கணக்கான டன் கனிம வளங்கள் கனரக வாகனங்கள் மூலம் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய அரசு பாராமுகமாக இருந்து வருகிறது. இதனால் இயற்கை வளம் அழிவது மட்டுமல்ல. விபத்துகளால் உயிரிழப்பு, சாலைகள் சேதம், குடிநீர் குழாய் உடைப்பு என பல்வேறு வகைகளில் பொது மக்களுக்கும்  இன்னல் ஏற்படுகிறது என்பதை அன்றாடம் மக்கள் பேசிக் கொள்வதிலிருந்து உணர முடிகிறது .

வெட்கக்கேடான விஷயம்

இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடையநல்லூர் உறுப்பினர் கிருஷ்ணமுரளி இது குறித்து கேள்வி ஒன்றை  எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் கனரக வாகனங்கள் கொண்டு செல்லக்கூடாது என்பதுதான் நாங்கள் போட்ட சட்டம். ஆனால் அதையும் மீறி எங்களுக்கே தெரியாமல் நடக்கிறது என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் சிரித்தபடியே நக்கலாக சொல்கிறார். இது மிகவும் வெட்கக்கேடான விஷயம்.

இப்படி சொல்வதற்கு அமைச்சருக்கு கொஞ்சம் கூட தயக்கம் இல்லை என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அதிலும் முதலமைச்சர் அவையில் இருக்கும் போதே அமைச்சர் எந்த தைரியத்தில் இப்படி சொன்னார் என்பதும் புரியவில்லை.  அமைச்சர் சட்டப் பேரவையில் சொன்ன பிறகும் இன்றும் நீண்ட வரிசையில் கனரக வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

சட்டத்தை அமல்படுத்தவேண்டிய அரசாங்கம், அதுவும் அமைச்சரே எங்களுக்கு தெரியாமல் நடக்கிறது என்றால் அவர் அந்த பதவியை வகிக்கக்கூடிய தகுதியை இழந்து விட்டார் என்றே அர்த்தம். எனவே அவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். அதுதான் தார்மீக ரீதியானது. கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று நாங்களே சட்டம் போட்டு இருக்கிறோம் என்று சொல்லும் அமைச்சர் இனிமேல் கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கிறோம் என்று ஏன் சட்டப் பேரவையில் தைரியமாக சொல்லவில்லை…

 

அரசின் சட்டத்தை மீறி கனரக வாகனங்களை அனுமதிக்கும் பணியில் உள்ள காவல்துறை, வருவாய்த் துறை, கனிமவளத்துறை, போக்குவரத்து துறை அலுவலர்கள் அதிகாரிகள் மீது அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? அதற்கான தைரியம் இருக்கிறதா? அதை பகிரங்கமாக அறிவிக்க முடியுமா? முடியாது. காரணம்…  ஆளும் அதிகார வர்க்கத்தின் முழு ஆதரவுடன்தான் இந்த அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்று பாமர ஜனங்களுக்கு கூட தெரிந்திருக்கிறது. 

ஆக பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு அரசு அதிகாரிகள் மீது பழி போட்டுவிட்டு தப்பிக்க நினைத்து மக்களை முட்டாளாக்கும் இந்த அரசின் எண்ணம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. ஆக இயற்கை வளத்தை காக்க போராடுவதை தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம்” என்று காட்டமாக கூறி இருந்தார்.

போராட்டம் நடத்திய ரவி அருணன்

அத்துடன், மறுநாளே தென்காசி நகரிலும் கனிம வளம் அதிகம் உள்ள கடையம் பகுதியிலும் சாதி மத பேதம் இன்றி அத்தனை அரசியல் கட்சிகளும் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தையும் ரவி அருணன், தான் சார்ந்த தென்காசி மாவட்ட இயற்கை வளபாதுகாப்பு குழுவின் ஆதரவுடன் நடத்தியும் காட்டினார்.
கடையம் சின்னத்தேர் திடலில் நடந்த அவருடைய ஆர்ப்பாட்டத்தில் திமுகவினரும், காங்கிரசாரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திரண்ட நூற்றுக்கணக்கானோர் கனிம கொள்ளைக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். மேலும் ரவி அருணனும், ஒரு சில நிர்வாகிகளும் கனிம வள கடத்தல் தொடர்பாக திமுக அரசை தாக்கிப் பேச ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த திமுகவினர் ஓசையின்றி அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

மக்கள் முட்டாள்கள் அல்ல

அருணன் கொந்தளித்து பேசும் போது “கடையம் பகுதியில் இருந்து தினமும் லாரிகளில் எம் சாண்ட் மணல் மற்றும் பாறை கற்கள் போன்ற கனிமங்கள் கனரக வாகனங்களில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதில் பெரும் அளவில் முறைகேடும் நடக்கிறது. விதிமுறையை மீறி கனிம பொருட்கள் கடத்தல் நடக்கிறது. மேலும் கல் குவாரிகளால் இயற்கை வளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீரும் குறைகிறது. மக்கள் முட்டாள்கள் அல்ல. எனவே இந்த பகுதியில் உள்ள குவாரிகளை உடனே மூடவேண்டும்.

மேலும் கேரளாவுக்கு தென்காசி, கன்னியாகுமரி கோவை, தேனி மாவட்டங்கள் வழியாக கடத்தப்படுகிறது. ஒரு வாகனத்தில்3 யூனிட் எம். சாண்ட் மணலுக்கு அனுமதி பெற்றுவிட்டு 15 யூனிட் வரை கொண்டு செல்கின்றனர். இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதுபற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பும்போது நீர்வளத்துறை அமைச்சர் இதுகுறித்து எனக்கு தெரியாது என்கிறார். முறைகேடாக கடத்துகிறார்கள் என்றால் அந்த பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுங்கள் என்று சொல்கிறார். இப்படி எதுவும் தெரியாத அமைச்சர் பதவி விலக வேண்டும்” என்று ஆவேசப்பட்டார்.

“இயற்கை வளத்தை பாதுகாப்பதில் தீவிர அக்கறை காட்டி வரும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ரவி அருணனும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் அமைச்சர் துரைமுருகன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுவது முதலமைச்சர் ஸ்டாலினுக்குத்தான் குடைச்சலைத் தரும்” என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கடத்தல்காரர்களை கண்டு நடுங்கும் அதிகாரிகள்

“சட்டவிரோதமாக கனிமவள கடத்தலில் ஈடுபடுவோரை பிடிக்க அரசு அதிகாரிகள் கடும் நடவடிக்கையில் ஈடுபடும்போது அந்த வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்களாலும், அவருடன் செல்பவர்களாலும் எத்தகைய அச்சுறுத்தலை சந்திக்கிறார்கள் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் மீது வாகனங்களை ஏற்றி கொலை செய்யும் முயற்சிகளும் சில இடங்களில் நடக்கிறது. இதனால் உயிருக்கு பயந்து வருவாய்த் துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவதில்லை. தவிர பல இடங்களில் வைட்டமின் சி மூலம் அரசு அதிகாரிகளின் வாயை கனிம வள கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோத சக்திகள் அடைத்து விடுவதும் உண்டு.

இப்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளே கனிம வள கடத்தல்காரர்களை கண்டு நடு நடுங்கும்போது, பாதிப்புக்கு உள்ளாகும் பொதுமக்கள் மட்டும் போலீஸாரிடம் எப்படி போவார்கள்? தவிர சில இடங்களில் சினிமா காட்சிகள் போல புகார் கொடுத்த அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்களிடம் புகார் அளித்தவர் பற்றிய தகவல்கள் போய் சேர்ந்து விடுகிறது. அதனால் பொதுமக்கள் போலீஸிடம் போக வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறும் யோசனை எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.

கடத்தலில் இரு மாநிலமும் கூட்டு?

1989க்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி நிச்சயம். அதனால் அவர் பதவி விலகுவார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.

கனிம வளங்கள் கொள்ளை போகாமல் தடுப்பதை பொறுத்தவரை அரசுதான் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஒருவேளை, தமிழகத்தில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதால் மார்க்சிஸ்ட் ஆட்சி நடக்கும் பக்கத்து மாநிலமான கேரளாவுக்கு சட்ட விரோதமாக கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறதோ? என சந்தேகமும் ஏற்படுகிறது” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Views: - 346

0

0