தேர்தலுக்கு முன்பு சொன்ன 1000 ரூபாய் என்னாச்சு..? திமுகவுக்கு அதிமுக போட்ட கிடுக்குபிடி

10 July 2021, 9:39 pm
Quick Share

கொட்டிய பணப்பயன் திட்டங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கடந்த மார்ச் 13-ம் தேதி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கப்பட்டு இருந்தது. அவற்றில் 50-க்கும் மேற்பட்டவை நேரடியாக பணப் பயன் அளிக்கும் திட்டங்கள்.

அதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்புதான் திருச்சியில் நடந்த திமுக திருப்பு முனை மாநாட்டில்,
7 முக்கிய அறிவுப்புகளை, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

Stalin Letter - Updatenews360

அதில் ஒன்று, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்பதாகும். திமுகவின் இந்த வாக்குறுதி தமிழக பெண் வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கவர்ச்சி அறிவிப்புகள்

இதேபோல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில்,
“திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தலைவிகளுக்கு கேஸ் சிலிண்டர் மானியமாக 100 ரூபாய் வழங்கப்படும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் விலை குறைக்கப்படும், மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு செய்யப்படும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய், கரும்பு
டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்த பட்ச ஆதார விலையாக வழங்கப்படும்” என்பது உள்ளிட்ட பல கவர்ச்சி அறிவிப்புகள் வாக்காளர்களை பெரிதும் ஈர்ப்பதாக அமைந்தது.

Petrol Price - Updatenews360

இந்த வாக்குறுதிகள் காரணமாக திமுக கூட்டணி தேர்தலில் 159 இடங்களை கைப்பற்றியது. இதில் திமுக மட்டுமே 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஆட்சிக்கு வந்த பிறகு, உள்ளூர் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு என்னும் இரு வாக்குறுதிகளை நடைமுறைக்கு திமுக அரசு கொண்டு வந்துவிட்டது.

ஆனால் இவற்றை விட மிக முக்கியமான பல வாக்குறுதிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டதுபோல் தெரிகிறது.

அதிமுக தீர்மானம்

இந்த நிலையில்தான் சென்னையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடியாக பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில், “திமுக தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற உடனடியாக ஒரு கால அட்டவணையை வெளியிடவேண்டும். குறிப்பாக, பெண்கள் நலன் சார்ந்து அறிவிக்கப்பட்ட அத்தனை வாக்குறுதிகளையும் விரைந்து செயல்படுத்தவேண்டும்.

பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்பதாக வாக்குறுதி அளித்த திமுக உடனடியாக இதை அமல் படுத்துவதுதான் நாணயமான செயல். இதேபோல் கேஸ் சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை இதுவரை அமல்படுத்தாததும் கண்டனத்துக்கு உரியது.

குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றவேண்டும். இல்லையென்றால் தமிழக தாய்மார்களின் பங்கேற்போடு மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.

விவசாயிகள் விளைவித்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாமல் அலட்சியம் காட்டி வரும் தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதோடு விவசாயிகள் விளைவித்துக் கொண்டு வந்த நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்து அதற்கான உரிய விலையை உடனடியாக வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தேதி போட்டோமா..?

இந்த எச்சரிக்கை தீர்மானம் குறித்து, அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “நிறைவேற்றவே முடியாது என்று தெரிந்தே பல வாக்குறுதிகளை தேர்தலில் கொடுத்ததால்தான் திமுக கூட்டணியால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. அதனால்தான் ஆட்சிக்கு வந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தடுமாறுகிறது. திணறவும் செய்கிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பீர்களா? என்று கேட்டால் தமிழக நிதியமைச்சர் தேதி போட்டு உத்தரவாதம் எதுவும் கொடுத்து இருக்கிறோமா? என்று கேட்கிறார்.

உள்ளூர் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்று திமுக தேர்தலின்போது கூறியது. அதாவது, எந்த பஸ் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆட்சிக்கு வந்த பின்பு வெள்ளை பலகை மாட்டிய உள்ளூர் பஸ்களில் மட்டும் என்று சொல்கிறார்கள். உள்ளூர் எக்ஸ்பிரஸ் பஸ்களில் ஏறக்கூடாது என்கிறார்கள்.

பெண்கள் ஏமாற்றம்

அதாவது, தேர்தலின்போது அனைத்து பஸ்களிலும் என்பதுபோல அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அப்படியே பூசி மெழுகி விட்டனர். இந்த வாக்குறுதியை நம்பி தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த பெண்களுக்கு ஏமாற்றம்தான் பரிசாக கிடைத்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடப்பதற்குள் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கப்படும் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெண்களுக்கு மட்டுமே இந்தத்தொகை வழங்கப்படும் என்று தற்போது நிபந்தனை விதிப்பதாக சொல்கிறார்கள்.

பெண்களின் மொத்த ஓட்டுகளையும் வாங்குவதற்காக குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் என்று உறுதிமொழி கொடுப்பது, அதை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று தெரிந்ததும்
அந்தத் தொகையை அனைவரும் பெற முடியாத அளவிற்கு நிபந்தனைகளுக்கு மேல் நிபந்தனை போட்டு ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் பேருக்கோ 10 ஆயிரம் பேருக்கோ கொடுத்து கதையை முடிக்கப் பார்க்கிறார்கள்.

இந்தத் தொகையையும் கூட கட்சி பேதமின்றி கொடுப்பார்களா?என்பது சந்தேகம்தான். தமிழகத்தில் ரேஷன் கார்டு கணக்குப்படி ஒரு கோடியே 20 லட்சம் குடும்பத்தலைவிகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்குமே திமுக வாக்குறுதி அளித்ததுபோல ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கவேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கை. சொன்னபடி அதை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் நிச்சயம் பெண்களின் ஆதரவுடன் அதிமுக தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுக்கும்.

அதேபோல விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய விலை கொடுத்து வாங்காமல் கொள்முதல் நிலையங்களில் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் படும் துயரம் சொல்லி மாளாது. பல ஊர்களில் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். அந்த நெல் குவியல்கள், மூட்டைகள் அனைத்தும் திடீரென பெய்த மழையால் நனைந்து வீணாகி விட்டன. இந்த நெல்லை விலை கொடுத்து வாங்கி இருந்தால் விவசாயிகள் வேதனையில் மூழ்கி இருக்க மாட்டார்களே, இதுதானா, விவசாயிகள் மீது திமுக காட்டும் அக்கறை? ” என்று அந்த நிர்வாகி ஆவேசப்பட்டார்.

Views: - 166

0

0