பல தேர்தல்களில் ஆ ட்டம் காட்டிய தேமுதிக : இன்று தெறிக்கவிடும் அதிமுகவால் கதறும் பிரேமலதா!!

8 February 2021, 3:56 pm
DMDK - admk - udatenews360
Quick Share

சென்னை : தேமுதிக எப்போதேல்லாம் தேர்தல் கூட்டணிப் பேச்சுகளை நடத்தியதோ அப்போதெல்லாம் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாள் வரை பேச்சுகளை ஜவ்வாக இழுப்பது வழக்கம். கூட்டணிக் கட்சிகளையும், மக்களையும் கடுப்பாக்கி தேர்தலில் அந்த அணி தோற்பதற்கு முக்கிய காரணமாக தேமுதிக இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது அதே தேமுதிக கூட்டணிப் பேச்சுகளைத் தொடங்குவதை அதிமுக தாமதப்படுத்துவதாக தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கதறத் தொடங்கியிருக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா.. எந்தக் கட்சி 41 இடங்கள் தருகிறதோ, அந்தக் கட்சியுடன் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவித்து, அதிமுகவுக்கு நெருக்கடி தர முயன்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை அதிமுக தெறிக்கவிட்டிருக்கிறது என்று கூறலாம்.

DMDK - updatenews360

நடிகர் விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கி முதலில் 2006 சட்டமன்றத் தேர்தலிலும், 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனியாய் போட்டியிட்டது. முதன்முறையாக 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி வைத்தது. அப்போது, கூட்டணிப் பேச்சுகளை நெடுநாட்களாக தேமுதிக இழுத்தடித்தது. தனது வாக்கு வங்கிக்கு மிகவும் அதிகமான இடங்களைக் கேட்டும், அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்டும் கடுமையாக பேரம் பேசியது.

இதனால், பொறுமையிழந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா அதிமுக போட்டியிடும் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் அறிவித்தார். இது கூட்டணியில் பெரும் சலசலப்பை உருவாக்கியது. அதன்பிறகு, 41 இடங்களுக்கு விஜயகாந்த் இறங்கிவந்தார். அதிமுகவின் செல்வாக்கால் கூட்டணி பெரும் வெற்றி பெற்றதால் விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால்,அதிமுகவுடன் நேரடியாக மோதியதால் கூட்டணியைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

vijayakanth - jayalaitha - updatenews360

இதைத் தொடர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அணி சேர்ந்தார், அந்த அணிக்குத் தலைமை தாங்கவும் அதிக இடங்களை பெறவும் விஜயகாந்தும் பிரேமலதாவும் நடத்திய பலநாள் பேரத்தால் அந்தக் கூட்டணி மக்கள் மத்தியில் மதிப்பை இழந்தது. கூட்டணியில் மதிமுக, பாமக போன்ற கட்சிகள் இருந்தும் கூட்டணியில் பல பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் பார்த்தனர், தேமுதிகவின் இழுத்தடிப்பால் தேர்தல் பிரச்சாரத்தை அந்தக் கூட்டணி மிகவும் தாமதமாகத் தொடங்கியது. கூட்டணி தொடங்கியபோது இருந்த எதிர்பார்ப்பும் விறுவிறுப்பும் பரபரப்பும் மந்தமானதால் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. வாக்கு சதவீதம் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை நெருங்கியபோதும் பல தொகுதிகளில் திமுகவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியபோதும் சிறப்பான வெற்றியைப் பெற வேண்டிய அணி தேமுதிகவின் இழுத்தடிப்பால் தோற்றது.

2011 சட்டமன்றத்தேர்தலிலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்துவிட்டு தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த பேச்சுகளை தேமுதிக இழுத்துக்கொண்டே போனது. ஆனால், 2016 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதையே சொல்லாமல் திமுகவிடமும் பாஜகவிடமும் மக்கள் நலக் கூட்டணியுடனும் பேச்சுக்களை நடத்தி தமிழக அரசியல் களத்தில் பெரும் குழப்பத்தை தேமுதிக உருவாக்கியது. திமுகவுடன் தொகுதி பேரத்துடன், பண பேரத்தையும் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. இதை பிரேமலதா பின்னர் மறுத்தார்.

கடைசியில், தானே முதல்வராக ஆசைப்பட்டு மக்கள் நல கூட்டணியில் அவர் இடம் பெற்றார். தேமுதிக யாருடன் கூட்டணி என்பதே 2016 சட்டமன்றத் தேர்தலின் விவாதப் பொருளானது. மக்கள் நல கூட்டணியின் தொடக்க விழாவில் பெரும் கூட்டம் திரண்டது. வைகோவும், கம்யூனிஸ்ட்டுகளும், திருமாவளவனும் இடம்பெற்றதால், அது கொள்கைக் கூட்டணி என்று பேசப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், பல கட்சிகளுடன் பேரம் நடத்திவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் விஜயகாந்த் அணி சேர்ந்ததால் கூட்டணிக்கு மரியாதை போனது. அந்தக் கூட்டணி தோல்வி அடைந்தது.

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடனும், திமுகவுடனும் ஒரே நேரத்தில் பேசி சாதனை படைத்தது தேமுதிக.
இப்படி தொடர்ந்து கூட்டணிப் பேச்சுகளை இழுத்தடித்த தேமுதிக, இப்போது பேச்சுகளைத் தொடங்க அதிமுக தாமதம் செய்வதாக அந்தக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா புகார் கூறிவருகிறார். தேமுதிக தனித்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் மிரட்டி வருகிறார். வேட்புமனுத் தாக்கல் வரை பேச்சு நடத்தி வந்த தேமுதிக தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்பே கூட்டணிப் பேச்சுகளுக்கு அழைக்கவில்லை என்று கதறுவது மிகவும் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பல தேர்தல்களில் கொள்கை எதுவும் இல்லாமல் தங்களை மிகப் பெரிய அரசியல் சாணக்யர்களாகக் கருதிக் கொண்டு இழுபறிப் பேச்சுகளை நடத்தி வந்த தேமுதிகவை இந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெறிக்கவிட்டிருக்கிறார். எஙகளைப் பேச்சுக்கு அழையுங்கள் என்று அவர் நாள்தோறும் கதறிவருவதும், தனித்துப் போட்டியிடுவதாக சொல்லுவதும் மக்கள் மத்தியில் மிகவும் வேடிக்கையாகப் பேசப்படுகிறது. இதற்கு இடையில் சசிகலாவை ஆதரிப்பதாகவும் பேட்டி கொடுத்து அதிமுகவை கோபப்படுத்தியதால், தேமுதிகவை முதல்வர் கதற விட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பல தேர்தல்களில் பல கட்சிகளுக்கு ஆட்டம் காட்டி வந்த தேமுதிக இந்தமுறை ஆட்டம் கண்டிருக்கிறது.

Views: - 0

0

0