அக்., 7-ல் அறிவிப்பைக் கொண்டாடத் தயாராகும் தொண்டர்கள் : அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராகிறார் எடப்பாடி பழனிசாமி?

29 September 2020, 6:25 pm
edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே அக்டோபர் 7-ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. பல சவால்களுக்கும், கடும் சோதனைகளுக்கும் இடையே நான்கு ஆண்டுக்காலம் ஆட்சியைக் காப்பாற்றிப் பல சாதனைகள் செய்த தற்போதைய பழனிசாமி, முதலமைச்சர் வேட்பாளரானால்தான் அதிமுக மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற்று, 2021 தேர்தலில் வெற்றிவாகை சூடும் என்று அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், தொண்டர்களும் உறுதியாக நம்புகின்றனர்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பழனிசாமியோடு கைகோர்த்து, ஒற்றுமையாக செயல்பட்டு அதிமுகவின் ஹாட்ரிக் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகள் முதலமைச்சராகத் திறமையாக செயல்பட்டு, மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியின் சாதனைகளையும், திட்டங்களையும் சொல்லித்தான் தேர்தலில் ஓட்டுக் கேட்க முடியும். பழனிசாமியே முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால்தான் நல்லாட்சி தொடர வாக்களியுங்கள் என்று கேட்க முடியும்.

அவர் முதலமைச்சர் வேட்பாளராக இல்லையென்றால் ஆட்சி மோசமாக இருந்ததால்தான் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக மாற்றியிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து எளிதில் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்படும். இத்தனை ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகவே பார்த்துப் பழகிவிட்ட பெரும்பாலான தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்வடைந்து தேர்தல் வேலைகளின் இருந்து ஒதுங்கிக்கொள்வார்கள்.

பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து வெளியேறித் தனியாக செயல்பட்டபோதும், ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றியவர் பழனிசாமிதான். பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை எதிர்த்து வாக்களித்தபோதும் ஆட்சி கவிழவில்லை. எனவே, பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பழனிசாமிக்குத்தான் என்பது அப்போதே தெரிந்த செய்தியாகும். அப்போது, பன்னீர்செல்வத்தை ஆதரித்த மூத்த உறுப்பினர் செம்மலை உள்பட பலரும் முதலமைச்சரையே ஆதரிக்கிறார்கள். கட்சியின் ஒற்றுமைக்காகவே பழனிசாமி மீண்டும் பன்னீர்செல்வத்தை இணைத்துக்கொண்டார் என்பதை நினைவுகூறும் தொண்டர்கள், கட்சியின் ஒற்றுமைக்காகவும், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றவும் பன்னீர்செல்வம் இப்போது செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர்.

அதிமுகவை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தொடங்கிய காலத்தில் இருந்து கட்சி ஒரு முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்தித்தான் தேர்தலை சந்திந்து வந்தது என்பதை நிர்வாகிகளும், தொண்டர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா காலத்திலும் கட்சி அவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்துதான் மக்களிடம் அதிமுகவினர் ஓட்டுக்கேட்டனர்.

Admk Executive- Updatenews360

இந்நிலையில், 2021 தேர்தலுக்கு முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் களம் காணலாம் என்பது தவறான அணுகுமுறையாகும் என்கிறார்கள் அவர்கள். மேலும், எதிர்க்கட்சிக் கூட்டணியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி தேர்தல் களத்தில் முக்கியமாக எதிரொலிக்கும். முதலமைச்சர் வேட்பாளர் இல்லாமல் தேர்தலை சந்தித்தால் அதுவே தோல்விக்குக் காரணமாகிவிடும் என்பது அதிமுகவில் பெரும்பான்மையோர் கருத்தாகும்.

முதலமைச்சர் வேட்பாளரோடு களத்தில் இறங்கினால்தான் கூட்டணிக் கட்சிகளும் அதிமுகவை மதிக்கும் என்பதையும் பன்னீர்செல்வம் நினைவில் கொள்ள வேண்டும் என்று தொண்டர்கள் கருதுகின்றனர். முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தேர்தல் நெருக்கத்தில் அறிவித்தால் பெரும் குழப்பம் ஏற்படும் என்பதால் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாகும்.

பழனிசாமியின் ஆட்சியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டியிருக்கிறார். மத்தியில் பாஜக இன்னும் நான்கு ஆண்டுகள் நீடிக்கும் என்பதால் முதல்வராக பழனிசாமி மீண்டும் வருவது அதிமுக அரசுக்கு வலு சேர்க்கும் என்பதும் கட்சியினர் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது.

மேலும், பழனிசாமி அதிமுக முதல்முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கட்சியில் இருக்கிறார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் கட்சி பிளவுபட்ட நேரத்திலும் ஜெயலலிதா பக்கம் நின்ற உண்மை விசுவாசியாக பழனிசாமி இருக்கிறார். அப்போது பன்னீர்செல்வம் ஜெயலலிதாவை எதிர்க்கும் அணியில் இருந்தார். மேலும், பழனிசாமி 1989-ஆம் ஆண்டு சேவல் சின்னத்தில் நின்றே வெற்றி பெற்றார். பழனிசாமி சட்டமன்றத்தில் நுழைந்து 12 ஆண்டுகள் கழித்து 2001-ஆம் ஆண்டுதான் பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார். எனவே, கட்சியிலும் சட்டமன்ற அனுபவத்திலும் பழனிசாமி மூத்தவராவார் என்பதையும், அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் கவனத்தில் கொள்கின்றனர்.

கட்சியில் பெரும்பாலோனோர் ஆதரவைப் பெற்றவர் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதே ஜனநாயகமாக இருக்கும் என்பதால், பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட எந்தத் தடையும் இல்லை என்று அடித்துக்கூறும் தொண்டர்கள், அக்டோபர் 7-ஆம் தேதி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்ற அறிவிப்பைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

Views: - 11

0

0