ஒரு அளவுக்கு மேல் மீறினால் அவ்வளவு தான்… மின்கட்டண உயர்வால் திணறும் தொழிற்சாலைகள்.. வேடிக்கை பார்க்கும் திமுக ; இபிஎஸ் ஆவேசம்…!!

Author: Babu Lakshmanan
22 December 2023, 8:11 pm
eps---stalin--updatenews360
Quick Share

கடும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திமுக அரசின் முதலமைச்சர், இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தியதால், தமிழகத்தில் உள்ள தொழில் துறையும், ஜவுளித் துறையும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது என்றும், எனவே, மின் கட்டணங்களைக் குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பெரும்பாலும் LT. 1116 (0-150 KW) மின் இணைப்பைப் பெற்றது. முன்பு யூனிட் ஒன்றுக்கு ரூ. 6.75-ம், நிலைக் கட்டணமாக KW ஒன்றுக்கு 35 ரூபாயும் செலுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். புதிய மின் கட்டணம் அமல்படுத்தும் முன்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டத்தில் இக்கூட்டமைப்பினர் கலந்துகொண்டு, ஏற்கெனவே தொழில்துறை பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்றும், வேண்டுமெனில் யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணத்தை ரூ. 1.15 கூடுதலாக செலுத்துகிறோம் என்றும், டிமாண்ட் கட்டணத்தையும், இதுவரை இல்லாத பீக் ஹவர் சார்ஜ் என்ற புதிய கட்டண விகிதத்தையும் எங்கள் மீது சுமத்தாதீர்கள் என்று வலியுறுத்தியதாகவும் இக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

முன்பு 1 KW-க்கு 35 ரூபாய் என்று, 112 KW-க்கு ரூ. 3,920 செலுத்தி வந்த நிலையில், தற்போது ஒரு KW-க்கு ரூ. 153 என 430 சதவீதம் உயர்த்தி 112 KW-க்கு ரூ.17,200 என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 முதல் 10 மணி வரையும் பீக் ஹவர் கட்டணம் என்று அறிவித்து, அந்த நேரத்தில் தொழிற்சாலைகள் இயங்கினால் கூடுதலாக 15 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழ் நாடு மின்சார வாரியம் புதிய கட்டணத்தை அறிவித்துள்ளதால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பீக்ஹவர் நேரத்தில் இயங்க முடியாத நிலையில் உள்ளன.

நிர்வாகத் திறனற்ற இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் உண்மையிலேயே, இந்தியாவிலேயே தமிழகம் தொழிற்துறையில் தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டுமெனில், ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையையும், மற்ற மாநிலங்களுக்கு மாற்றப்படுவதையும் தடுக்கும் விதத்தில் மின் கட்டணங்களை முன்பிருந்தது போல், அதாவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருந்ததைப் போல் மாற்றி அமைக்க வலியுறுத்துகிறேன். ஒரு அரசு வரி விதிக்கும் போதும், கட்டணங்களை உயர்த்தும் போதும், எப்படி பசுவிடம் இருந்து பசு அறியாமலேயே பால் கறக்கிறோமோ அதுபோல், தொழில் முனைவோர் பாதிப்படையாத வகையில், அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குறையாத நிலையில் செயல்பட வேண்டும். அளவுக்கு மீறி பசுவிடம் இருந்து பாலை உறிஞ்ச நினைத்தால், பசு ரத்தம் இன்றி மாண்டு போகக்கூடிய நிலை ஏற்படும். ஏனெனில், பசு தனது ரத்தத்தை பாலாக மக்களுக்கு வழங்குகிறது.

அதுபோல் தொழில் முனைவோர்கள் தங்கள் முதலீடுக்கு நஷ்டம் இன்றி, தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ப ஊதியம் வழங்க ஏதுவாக, அதே சமயத்தில், அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயை பெறக்கூடிய வகையில், சொத்து வரி உயர்வு, தொழில் வரி, மின் கட்டண உயர்வு போன்றவற்றை தொழில் முனைவோர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய விதத்தில் விதிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 253

0

0